புதுச்சேரி, கதிர்காமம் பகுதியில் இயங்கி வரும் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை 700 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 4 பேர் மற்றும் கண்காணிப்பில் இருக்கும் 28 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டிருக்கும் அரசு மருத்துவமனை

சுமார் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். கொரோனா சிறப்புப் பிரிவுக்காக இவர்கள் அனைவரும் மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்ற வேண்டுமென்று மருத்துவமனை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால், அதை ஏற்க முடியாது என்று கூறி வந்த அந்தப் பணியாளர்களில் 54 பேர் நேற்று பணிக்கு வரவில்லை. அதனால் அவர்கள் அனைவரையும் புதுச்சேரி கலெக்டர் அருண் அதிரடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

அவரின் அந்த உத்தரவில், “புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள், கொரோனா தடுப்புப் பணிகளைப் புறக்கணிப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். மேலும் நேற்று 2-ம் தேதி 54 பேர் பணிக்கு வரவில்லை என்றும் மருத்துவக்கல்லூரியின் முதல்வர் புகார் அளித்திருந்தார்.

அதனால் கொரோனா தடுப்பு சிகிச்சை பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. பணி மற்றும் பணியில் கவனக்குறைவாகச் செயல்படுவோர் மீதான நடவடிக்கை பற்றிப் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால் நேற்று பணிக்கு வராத 54 ஒப்பந்தத் தொழிலாளர்களும் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்படுகின்றனர்.

புதுச்சேரி கலெக்டர் அருண்

கொரோனா தடுப்புப் பணிகளை சுமுக முறையில் மருத்துவமனையில் நிறைவேற்ற இந்தத் தடுப்பு நடவடிக்கை தேவை. அதேபோல் பணிக்கு வராதவர்களை நீக்கி அதுதொடர்பான விவரங்களை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என்று மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.