புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள், சுமார் 100 ஏக்கர் பரப்பிலான காப்புக்காட்டுக்குள் மயில்கள், குருவிகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் வசிக்கின்றன. தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக உணவு, தண்ணீர் பற்றாக்குறையால், நாளுக்குநாள் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.

இதைத் தடுக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் வன உயிரின ஆர்வலர்கள் சிலர், இங்குள்ள பறவைகளுக்குத் தானியங்கள் கொடுப்பதை அவ்வப்போது வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வெளியே வர முடியாத நிலை.

பறவைகள்

பறவைகளுக்கும் தானியங்கள் கிடைக்கவில்லை. இதேநிலை நீடித்தால், பறவைகளின் நிலை பரிதாபம் என்பதை அறிந்த வன உயிரின ஆர்வலர் சொக்கலிங்கம் என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று, பாதுகாப்பாக பறவைகளுக்குத் தானியங்கள் கொடுத்து வருகிறார். ஊரடங்கு நேரத்திலும் பறவைகளின் நலனில் அக்கறை கொண்ட சொக்கலிங்கத்தின் செயலை பொதுமக்களோடு, காவல்துறை அதிகாரிகளும் பாராட்டுகின்றனர்.

சொக்கலிங்கத்திடம் பேசினோம், “இந்தக் காட்டுக்குள்ளே நிறைய மயில்கள் இருக்கிறது. பக்கத்துலயும் விவசாய நிலங்கள் இல்லை. தினமும் காலை, மாலை ரெண்டு நேரமும் அரிசி, கோதுமை, கம்பு உள்ளிட்ட என்னென்ன தானியங்கள் கையில் கிடைக்குதோ அதையெல்லாம் கொண்டு வந்து இந்தப் பறவைகளின் பசியைப் போக்குவேன். இப்போ, 4 வருஷமா இந்தப் பறவைகளுக்கு தானியங்கள் கொடுக்கிறேன்.

பறவைகளின் பசியைப் போக்கும் சொக்கலிங்கம்

பறவைகளைப் பார்க்காம இப்போ என்னால இருக்க முடியாது. எனக்கு என்னைக்காவது முடியாமப் போச்சுனா, என் பொண்ணு வந்து பறவைகளுக்கு உணவு கொடுத்திடும். இப்போ, ஊரடங்கு உத்தரவு போட்டதால, ரொம்பக் கட்டுப்பாடு, ஒருவாரம் வரைக்கும் வெளிய வர முடியலை. ஆனா, எனக்கு பறவைகளைப் பத்தின நெனப்புதான். என்ன ஆனாலும் பரவாயில்லைனுதான் அன்னைக்கு அரிசியை எடுத்துக்கிட்டு, பறவைகளைப் பார்க்கக் கிளம்பிப் போனேன். போகிற வழியில போலீஸ்காரங்க மறிச்சுக்கிட்டு, எங்கேயும் போகக்கூடாது. வீட்டுக்கு போங்கன்னு சொன்னாங்க.

அவங்ககிட்ட பறவைகள் நிலைகுறித்து சொன்னேன். உடனே புரிஞ்சிக்கிட்டு என்னைப் பத்திரமா போங்கன்னு சொல்லி அனுமதிச்சிட்டாங்க. அவங்களும் பாராட்டினாங்க. இப்போ, தினமும் பாதுகாப்பா போயிட்டு, பறவைகளுக்குத் தானியங்கள் கொடுத்திட்டு வர்றேன். இப்போதான் மனசுக்கு நிம்மதியாக இருக்கு. தொடர்ந்து என் காலம் இருக்கிற வரைக்கும் பறவைகளுக்கு உணவு போடணும்” என்றார் உற்சாகமான குரலில்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.