இராப்பாடி என்றழைக்கப்படும் ‘நைட்டிங்கேல்’ (Nightingale) பறவைகளின் இறக்கை வளர்ச்சி, காலநிலை மாற்றத்தால் குன்றியுள்ளது. இதனால், இப்பறவையின் வருடாந்தர வலசையும் பலமாகப் பாதிப்பைச் சந்தித்துள்ளது. மாட்ரிட்டை (Madrid) சேர்ந்த பிரபல பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கை, பறவை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைட்டிங்கேல்

மத்திய ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் வசிக்கும் இந்தப் பறவையினம், பொதுவாகக் கோடைக்காலத்தில் ஐரோப்பிய மற்றும் ஆசியப் பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. பின்னர், குளிர்காலம் தொடங்கியதும் தெற்கு நோக்கி, ஆப்பிரிக்காவின் துணை – சகாராப் பகுதிகளுக்கு கூட்டமாக வலசை வருகின்றன.

இத்தகைய இனிமையான பறவை, தன் இனத்தின் இறுதி அத்தியாயத்தைப் பறந்துகொண்டே, வரைந்து கொண்டிருப்பதாக சமீபத்தில் ஓர் ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறது. மாட்ரிட்டைச் சார்ந்த காம்புளுட்டென்ஸ் (complutense) பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இந்தப் பறவைகளின் உருவ அமைப்பில் மாற்றம் ஏற்படுவதைக் கண்டறிந்துள்ளனர். அதுகுறித்து ஆய்வாளர் கரோலினா, “காலநிலை மாற்றத்தால், பறவைகளின் வலசைக் காலமும், முட்டையிடும் காலமும் வெகுவாகப் பாதிக்கப்படுவது நாம் அறிந்ததே. அதைவிட, பறவைகளின் உருவ அமைப்பில் பாதிப்பு ஏற்படுவதை இந்த ஆய்வின் மூலம் ஆதாரத்துடன் கண்டறிந்துள்ளோம்” என்று பதிவு செய்துள்ளார். மேலும், “இதிலிருந்து பறவைகளைக் காப்பாற்றுவதற்கு, பறவையினம் எவ்வாறு புதிய சூழலில் தன் வாழ்வை தகவமைத்துக்கொள்ளும் என்பதை நாம் ஆராய வேண்டும்” என்றார்.

காலநிலை மாற்றம்

இந்த ஆண்டு, ஸ்பெய்னில் வசந்த காலத்தின் வருகை மிகவும் தாமதமாகத்தான் இருந்தது. கோடைகாலத்தில் ஏற்பட்ட வறட்சி நீண்ட நாள்கள் நீடித்ததோடு, கொடுமையான தாக்கத்தையும் வெளிப்படுத்தியது. இதனால், இயல்பாகவே நைட்டிங்கேல் குஞ்சுகளை வளர்க்க போதுமான அவகாசம் தாய்ப் பறவைகளுக்கு இல்லாமல்போனது. இதனால் குளிர் காலம் தொடங்கியும், குஞ்சுகளின் வளர்ச்சி, வலசை போதலுக்கு ஏற்றதாக இல்லை. பொதுவாகவே நைட்டிங்கேல் பறவைகளின் மரபணு, இடம்பெயர்தலுக்கு ஏற்றாற்போல் பெரிய இறக்கைகள், உயரிய வளர்சிதை மாற்ற விகிதம், குறைந்த வாழ்நாள் போன்ற அனைத்தையும்‌ உள்ளடக்கியதாக இருக்கும். தற்போதைய காலநிலை மாற்றத்தால், இவை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம் (IUCN) இப்பறவையைப் பாதுகாக்கவேண்டிய அவசியமற்ற பறவை என்று வகைப்படுத்தி இருக்கிறது. எனினும் கடந்த அரை நூற்றாண்டு காலமாக, 3 பில்லியன் இராப்பாடிகள் அமெரிக்கா மற்றும் கனடாவில் மறைந்துவிட்டதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.