டெல்லி சென்றவர்கள் மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியம் என்றும், இத்தருணத்தில் வெறுப்பு அரசியலை தூண்டுவது கண்டிக்கத்தக்கது என்றும் தமிமுன்அன்சாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்மிக பணிக்காக டெல்லிக்கு சென்ற தப்லீக் ஜமாத்தினர் வெளிநாட்டவர்களால் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களில் தமிழகம் திரும்பியவர்கள் தாமாக முன் வந்து மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆட்பட்டு இருக்கிறார்கள்.
பலர் அந்தந்த ஊர் ஜமாத்தினர், குடும்பத்தினரின் ஆலோசனையின் படி, அதிகாரிகளின் வழிகாட்டலை ஏற்று மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்டு இருக்கிறார்கள். இதையும் கடந்து யாரேனும் கவனக்குறைவாக இருந்தால், அவர்கள் தாமாக முன் வந்து மருத்துவ பரிசோதனைகளுக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ளும்படி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
நாட்டின் சூழல்,பொது மக்களின் உயிர் பாதுகாப்பு, தங்கள் குடும்பத்தினர் நலம் ஆகியவை இதில் அடங்கியிருக்கிறது என்பதை இந்நேரத்தில் சுட்டிக் காட்டுகிறோம். மேலும் டெல்லி நிகழ்வை மட்டுமே மையப்படுத்தி பிரிவினையை வளர்ப்பது நல்ல பண்பல்ல.
பிரதமரின் ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாக டெல்லிக்கு சென்ற தப்லீக் ஜமாத்தினரின் கவனக் குறைவை சுட்டிக்காட்டுவது தவறல்ல.ஆனால் இதை முன்னிறுத்தி ஒரு சமூகத்தையே குறிவைத்து நடக்கும் பரப்புரைகளை அனைவரும் கண்டிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இந்த விஷயத்தில் மத்திய – மாநில அரசுகளுடன் இணைந்து நின்று கொரோனா நோயை ஒழிக்க உறுதியுடன் அனைவரும் இணைந்து நிற்போம் என்று சகல தரப்புக்கும் வேண்டுகோள் வைக்கிறோம். எல்லோரும் இணைந்து நிற்க வேண்டிய தருணத்தில் பிரிவினையை தூண்ட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம். என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கர்களுக்கு அடுத்த 30 நாட்கள் வாழ்வா சாவா தருணம் – ட்ரம்ப்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM