கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளேயே இருக்கும் வேளையில், மக்கள் இந்நாள்களை எப்படித் தங்களின் சுய முன்னேற்றத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறித்து, மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், எழுத்தாளர் சோம வள்ளியப்பனிடம் கேட்டோம். `காலம் உங்கள் காலடியில்’, `நேரத்தை உரமாக்கு’ ஆகிய இரண்டு நூல்களை நேர நிர்வாகத்துக்காகவே எழுதியவர் தந்த ஆலோசனைகள் இங்கே.

Soma. Valliappan

“கொரோனா வேண்டுமானால் நமக்குப் புதியதாக இருக்கலாம். ஆனால், பேரிடர்களும் பொருளாதாரப் பிரச்னைகளும், குழப்பங்களும் நமக்குப் புதிதல்ல. இந்தத் தலைமுறை பார்த்த ஐ.டி துறை ரிஸஷன், நிலநடுக்கங்கள், சுனாமி இயற்கைப் பேரழிவுகள், பொருளாதார ‘சப்பிரைம்’ பிரச்னை என்று எல்லாவற்றையும் தாண்டித்தான் வந்திருக்கிறோம்.

அநேகமாக இந்தக் கொரோனா பிரச்னையின் பொருளாதாரத் தாக்கம் அதிகபட்சம் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு இருக்கும். நோய் குணமான பின் உடல் செழிப்பு அடைவதுபோல இந்தப் பிரச்னைக்குப் பிறகு, ஒரு சிறிய இடைவெளிவிட்டு இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளரும்.

இந்நிலையில், மக்களின் மனது இப்போது ஏப்ரல் 14-ம் தேதி வரை வீட்டில் இருந்துதான் ஆக வேண்டும் என்ற விஷயத்தில் சமாதானம் ஆகியிருக்கிறது. கொஞ்சம் அவகாசம் ஆகியிருப்பதால், நிதானமாக யோசிக்க முடிகிறது. நிதானம் என்றாலே நன்மைதானே!

நேர மேலாண்மை

வீட்டிலிருந்தபடியே வேலைபார்க்கும் `வொர்க் ஃப்ரம் ஹோம்’ சூழலில் சிலர் இருக்கிறார்கள். வீட்டிலேயே இருக்க வேண்டிய இந்த நாள்களில் என்ன செய்வது? இவ்வளவு நாள்களை எப்படிக் கடப்பது? இவை அவர்களுக்கு முக்கியமான கேள்விகளாக இருக்கின்றன.

எதிர்பாராமல் கிடைத்திருக்கும் இந்த 21 நாள் ஊரடங்கு, வீட்டிலிருக்கும் கட்டாயம் ஆகியவற்றை இரண்டு விதமாக அணுகும் மக்கள் இருக்கிறார்கள்.

முதல் வகையினர்… ‘என்னவோ நடக்கிறது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதனால் தொந்தரவு மட்டுமே.

விடுமுறை நாள்கள்தானே! சீக்கிரம் எழுந்து என்ன செய்ய? குளித்தல், சவரம் செய்துகொள்ளல், நேரத்துக்கு உணவருந்துதல் எல்லாம் அவசியமில்லை. யார் பார்க்கப்போகிறார்கள், யார் கேட்கப்போகிறார்கள்? வகை வகையாகச் சாப்பிடலாம். கைப்பேசியிலும் தொலைக்காட்சியிலும், ஃபேஸ்புக்கிலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவு செய்யலாம். அடுத்து செய்யத்தான் வேலை ஒன்றும் இல்லையே! நண்பர்களுடன் போனில் அரட்டை அடிக்கலாம்.

பகலிலும் தூங்கலாம். படுக்கையைவிட்டு எழத் தேவையில்லை. பலவற்றையும் ஜாலியாக செய்யலாம்.

கூடுதல் நேரம் தூங்குவது, அடிக்கடி ஏதாவது சாப்பிடுவது, வாட்ஸ் அப் போன்றவற்றில் கூடுதல் நேரம் செலவு செய்வதெல்லாம் குற்றமா? எப்போதாவதுதானே இப்படி வாய்ப்புக் கிடைக்கும். தினம் தினம்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்போதாவது கொஞ்சம் ஓய்வு எடுக்கக் கூடாதா?’ என்றெல்லாம் கேட்பார்கள்.

குற்றமில்லை. ஆனால், நட்டம்.

தவறில்லை. ஆனால், இது நிச்சயம் தவறவிடப்படும் வாய்ப்பு.

குடும்பம்

இதுவே இரண்டாம் வகையினர், இதை ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறார்கள். அவர்களும் இந்த ஊரடங்கை எதிர்பார்க்கவில்லை. விரும்பாமல்கூட இருக்கலாம். ஆனால், கட்டாயம் என்று திணிக்கப்பட்டிருக்கும்போது வேறு என்ன செய்ய? தவிர்க்கவே முடியாது எனும்போது, அதில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் புத்திசாலிகள் அவர்கள்.

இந்த ஊரடங்கு கொடுத்திருக்கும் பெரும் கொடை அல்லது போனஸ் என்ன தெரியுமா? நேரம். அரிய, மதிப்புமிக்க நேரம். மொத்தமாகக் கிடைப்பதற்கரிய நேரம்.

பணம் முக்கியம்தான். அதை வைத்துப் பலவற்றையும் செய்யலாம். அது இல்லாமல் முடியாதுதான். ஆனால், அதைக் காட்டிலும் முக்கியமான பலவற்றையும் பெற்றுத் தரவல்ல மற்றொரு முக்கிய வளம், நேரம்.

கடிகாரம்

தினமும் தினசரி வேலைகள் போக சுலபமாக நாள் ஒன்றுக்கு ஆறு மணி நேரம் என, மொத்தம் 126 மணி நேரம் எதிர்பாராத போனஸ் ஆகக் கிடைத்திருக்கிறது. பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் வேறு எப்போதும் இத்தனை மணி நேரம் மொத்தமாக ஒரே தவணையில் கிடைக்கவே கிடைக்காது. அந்தப் பெரும் வாய்ப்பு நம்மிடம் வழங்கப்பட்டு மெள்ள மெள்ள கரைந்துகொண்டிருக்கிறது. பயன்படுத்திக்கொள்வதும் தவறவிடுவதும் அவரவர் தேர்வு.

முதல் வகையினர், நேரத்தை இப்படி விரயமாக்குவதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் சில உண்டு. எதைத் தொடர்ந்து செய்கிறோமோ, அது பழக்கமாகிவிடும். விடிந்த பின்பும் தூங்குவது, சோம்பலாகவே இருப்பது ஆகியவை ஆபத்தான பழக்கங்கள். அதிகம் உடல் உழைப்பு இல்லாமல், அதே நேரம் நொறுக்குத் தீனி சாப்பிட்டுக்கொண்டே இருப்பது ஆரோக்கியத்துக்குக் கேடு. வாட்ஸ் அப் உட்பட எதையாவது பார்த்துக்கொண்டேயிருப்பதால் மனச்சோர்வும் உடல் சோர்வும் ஏற்படும். அதனால் ஏற்படக்கூடிய பயன் என்று எதுவுமில்லை. குளித்து சுத்தமாக இல்லாமல் இருத்தல் சுயமதிப்புக்குப் பாதகம்.

ஊரடங்கு முடிந்து கொரோனா ஒழிந்து உலகம் மீண்டும் பழைய நிலைக்கு நிச்சயம் திரும்பும். அப்போது மீண்டும் `பந்தயங்கள்’ ஆரம்பிக்கும். முன்னிலும் கூடுதலாக உழைக்க வேண்டி வரலாம். அதற்கான ஆயத்த நிலையில் உடலும் மனமும், புத்தியும் இருக்க வேண்டும். முதல் வகையினர் அப்போது ஆயத்தமாக இருக்க மாட்டார்கள்.

நேரம்

இரண்டாம் வகையினர் மனநிலை இப்படியிருக்கும். `உலகிற்கே வந்திருக்கும் ஆபத்து. நல்ல வேளையாக அதைத் தவிர்க்கும் வழிகள் தெரிந்து நமக்குச் சொல்கிறார்கள். அரசுகளும் நிறுவனங்களும் அதற்கான திட்டங்களுடன் என்னை வழிநடத்துகின்றன. தடுப்பு மருந்து, தீர்க்கும் மருந்து கண்டுபிடிக்க முயற்சிகள் நடக்கின்றன. என்னையும் மக்களையும் காப்பாற்றப் பலரும் இரவு பகலாக உழைக்கிறார்கள். என்னை `வீட்டில் இரு போதும்’ என்கிறார்கள். இது மிகச் சுலபம். நான் கொடுக்க வேண்டிய ஒரே விஷயம், ஒத்துழைப்பு. நிச்சயம் செய்வேன்.

எனக்கு முக்கியம், அவசியம், நல்லது எனத் தெரிந்தும் பலவற்றை இதுவரை நேரம் இல்லாத காரணத்தால் செய்ய முடியவில்லை. இப்போது நேரம் கிடைத்திருக்கிறது. தவறவிடாமல் நிச்சயம் செய்வேன். குறிப்பாக, உடல் ஆரோக்கியத்துக்குச் செய்ய வேண்டிய உடற்பயிற்சி, யோகா, தியானம், சுயதிறமைகளை வெளிக்கொணரச் செய்ய வேண்டிய எழுத்து போன்ற பல்வேறு படைப்பாக்கங்கள்,

மனதுக்கும் அறிவுக்கும் ஊட்டமளிக்கும் புத்தகங்களைப் படிப்பது, பேசாமல், பழகாமல் இருப்பதால் நைந்துகொண்டிருக்கும் உறவுக் கயிறுகளை சரிசெய்வது, வேலைப்பளுவால் மறந்துபோன சிரிப்பையும் கலகலப்பையும் குடும்பத்துக்குள் கொண்டுவருவது, தொடர்பு விட்டுப்போன முக்கிய நண்பர்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது என இவற்றையெல்லாம் செய்வேன்’ என்றிருக்கும் இரண்டாம் வகையினர். மேலும்,

Indoor games

Also Read: சோஷியல் மீடியா முதல் வொர்க் ஃப்ரம் ஹோம் வரை… கொரோனாவுக்கு மக்களின் ஜாலி கேலி ரியாக்‌ஷன்ஸ்!

`ஒழுங்கற்றுக் கலைந்து கிடக்கும் வீட்டைச் சுத்தம் செய்வது, பழையன கழிப்பது, வீட்டு, வியாபாரக் கணக்குகள் எழுதுவது, வருங்காலத் தொழில் மற்றும் வேலை முன்னேற்றத்துக்கான திட்டங்கள் தீட்டுவது, ஆன்லைனில் புதிய கோர்ஸ்களில் சேர்ந்து படிப்பது, சமையல், இசை, வாத்தியக்கருவிகளில் பயிற்சி, யோகாசனம், தியானம் புதியன கற்றுக்கொள்வது என, எத்தனையோ முக்கியமானவற்றைச் செய்ய நேரம் வெண்டும். இப்போது மடியில் வந்து விழுந்திருப்பது கனத்த பை. உள்ளே கொட்டிக்கிடக்குது நேரம் என்ற செல்வம்.

என்ன நடக்குமோ என்ற கவலை அவசியமற்றது. கவலையால் ஏதும் தீராது. உரியவர்கள் அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால் நம்மால் இயன்ற உதவிகள் செய்வோம். மற்றபடி, சீக்கிரம் எழுதல், அரைமணி நேர உடற்பயிற்சி அல்லது வீட்டுக்குள்ளேயே நடை, தியானம், யோகா; குளித்தல், வீடு பெருக்குதல், பாத்திரம் கழுவுதல், துணிகள் துவைத்தல் போன்ற வேலைகளைப் பகிர்ந்து செய்தல்; இயன்றால் சமையலிலும் உதவி. நேரத்துக்கு அளவான ஆரோக்கியமான உணவு. பின்பு முற்பகலில் மூன்று மணிநேரம் படித்தல், கற்றல், பழகுதல் அல்லது வேறு ஏதேனும் பயனுள்ள வேலை.

நேரத்தில் மதிய உணவு. ஒரு மணிநேரம் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுதல், உறவினர்கள், நண்பர்களுடன் அலைபேசியில் பேசுதல்.

மாலையில் தேநீர். பின்பு இரண்டு மணி நேரம் பயனுள்ள வேலை. மீண்டும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல். செய்திகள் பார்ப்பது. மீண்டும் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை படிப்பது அல்லது எழுதுவது அல்லது பயில்வது.

குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு. எழுதுதல், படித்தல், அளவளாவுதல், நேரத்துக்குத் தூக்கம் என்று வகுத்துக்கொள்வோம்’ என்றிருப்பார்கள்.

Meditation

இப்போது சொல்லுங்கள். முதல் வகையினர் போல நேரத்தை விரயமாக்கப்போகிறீர்களா அல்லது இரண்டாம் வகையினர் போல மாதிரி அட்டவணை தயாரித்து, செய்ய வேண்டியவற்றை முன்கூட்டித் திட்டமிட்டுக்கொண்டு, தினமும் குறைந்தது ஆறு மணி நேரம் `பயனுள்ள வேலைகள்’ என்று தொடரப்போகிறீர்களா?

ஊரடங்கு தந்திருப்பது வாழ்க்கையில் ஒழுங்கு தொலைப்பதற்கான நாள்களை அல்ல; புதியவற்றை கற்றுக்கொண்டு நம்மை நாமே மெருகேற்றிக்கொள்வதற்கான வாய்ப்பு. தவறவிடாதீர்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.