கொரோனா வைரஸ் தீவிரத்தால் இந்தியாவில் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ரீடெய்ல் நிறுவனங்கள் அத்தியாவசிய பொருள்களைத் தவிர, இதர பொருள்களின் விற்பனையை நிறுத்தியுள்ளன. எலெக்ட்ரானிக்ஸ், உடைகள் போன்ற மற்ற பொருள்களின் விற்பனையானது இந்த மாதம் முழுவதும் தொடங்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 26 சதவிகிதம் வளர்ச்சி கண்ட இ-காமர்ஸ் துறை, இந்த ஆண்டு வெறும் 5 சதவிகிதம் மட்டுமே வளரும் என்று தெரிகிறது.

கொரோனா

இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் அத்தியாவசிய பொருள்களையும் இணையத்திலேயே வாங்க விரும்புகின்றனர். இதனால் மளிகைப் பொருள்களின் விற்பனை சற்றே சூடுபிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஒட்டு மொத்த மளிகை பொருள்களின் விற்பனை 2 பில்லியன் டாலர் மதிப்பாக இருந்தது. இந்த ஆண்டு தற்போது மட்டுமே தினமும் 50 – 60 மில்லியன் டாலர் மளிகைப் பொருள்கள் விற்பனையாகி வருகின்றன. ஆனால், இந்த அத்தியாவசிய பொருள்கள் என்பது ஒட்டுமொத்த இ-காமர்ஸ் விற்பனையில் 10 சதவிகிதம் மட்டுமே. எலக்ட்ரானிக், ஸ்மார்ட் போன் மற்றும் ஃபேஷன் துறை சார்ந்த பொருள்களே மொத்த விற்பனையில் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரை பங்களிப்பு அளிக்கக் கூடியது. இதனால் மளிகைப் பொருள்களின் விற்பனை மட்டுமே பயனளிக்காது என இ-காமர்ஸ்  நிறுவனங்களின் தரப்பில்  கூறப்படுகிறது.

இ-காமர்ஸ்

கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து நீடித்தால் ஏப்ரல் – ஜுன் மாதத்தில் இவை மிகவும் பாதிக்கப்படும். இதனால், ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கு நீடித்தால் எலக்ட்ரானிக் மற்றும் இதர பொருள்களின் விற்பனையையும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே இ-காமர்ஸ் நிறுவனங்களின் கோரிக்கையாக உள்ளன. மிந்த்ரா மற்றும் குழந்தைகளுக்கான பொருள்களை விற்பனை செய்யும் ஃபர்ஸ்ட் க்ரை (first cry) ஆகிய நிறுவனங்கள் தற்போது புதிய ஆர்டர்கள் எடுப்பதை நிறுத்தியுள்ளன. அழகுக் கலை பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனமான பர்ப்பில் (purple) மற்றும் பர்னிச்சர் விற்பனை செய்யும் நிறுவனமான பெப்பர் ஃப்ரை (pepper fry) ஏப்ரல் 15 வரை மட்டுமே டெலிவரி சேவையை வழங்குகிறது. ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்ட அத்தியாவசியம் இல்லாத பொருள்களின் விற்பனையையும் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் ஷாப்பிங்

நிச்சயம் ஊரடங்குக்குப் பிறகு, மக்கள் இணையத்தில் பொருள்கள் வாங்குவதில் சில மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள் இ-காமர்ஸ் தொழிலில் இருப்பவர்கள். இதற்குப் பிறகு ஆன்லைனில் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவது கொஞ்சம் அதிகரிக்கும். இன்னொரு பக்கம், மக்கள் மற்ற பொருள்கள் வாங்குவதில் கொஞ்சம் தயக்கம் காட்டுவார்கள் என்கிறார்கள். 

இந்த 21 நாள்  ஊரடங்கால் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு பில்லியன் டாலர் வரை இழப்பீடு ஏற்படும். இதனால் முதலீட்டாளர்களுக்கு இனி வரும் மாதங்கள் சற்றே கடினமான ஒன்றாகத்தான் இருக்கும் என்றும் இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.