கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் முத்தோப்பைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்தப் பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் உள்ள 6, 7, 8 வார்டுகளான சித்தேரிக்கரை, கமலா நகர் மற்றும் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த 17 பேர் கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பினர். அவர்களுள் கொரோனா அறிகுறியுடன் காணப்பட்ட 7 பேர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அதில் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற 4 நபர்களின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. இந்த நிலையில், ஒரே பகுதியைச் சேர்ந்த 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் விழுப்புரம் பகுதி மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது. நகராட்சியின் 6, 7, 8 வார்டுகளில் உள்ள 42 தெருக்கள் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Also Read: `இந்தியாவில் கொரோனா; கற்கத் தவறிய பாடங்கள்!’ – மருத்துவரின் வேதனைப் பகிர்வு #MyVikatan
இப்பகுதியை நேரில் பார்வையிட்ட விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி. சண்முகம் இதுகுறித்து பேசுகையில், “தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்ட மூன்று பேரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சையில் உள்ளனர். அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து நபர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்றும் தெரிவித்தார்.
மேலும், “ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேறவும், வெளி நபர்கள் செல்லவும் அனைத்துவிதமான வாகனப் போக்குவரத்தும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் மற்ற நபர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதால், மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று, பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இப்பகுதி முழுவதும் நகராட்சி, காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளால் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்” என்றார்.

அப்பகுதியில் வசிக்கும் 1,678 குடும்பங்களுக்கான அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் அவர்கள் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கப்படுமெனவும், மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றவும், ஊரடங்கை கடைப்பிடித்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார் .
விழுப்புரம் மாவட்டத்தில் முதல் முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.