கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இல்லை எனவும் இதுதொடர்பாக ஆதாரமின்றி வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஈஷா யோகா மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து ஈஷா யோகா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை ஒரு நோய் தொற்று என அறிவிப்பதற்கு முன்பாகவும், மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு மற்றும் பயண தடைகளை விதிப்பதற்கு பல நாட்கள் முன்பாகவே ஈஷாவுக்கு வந்த வெளிநாட்டினருக்கு சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து அதை தீவிரமாக செயல்படுத்தினோம்.
“கங்குலி கொடுத்த “சப்போர்ட்” தோனி கொடுக்கல”-யுவராஜ் சிங் ஆதங்கம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சீனா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தாக்கிய நாடுகளை சேர்ந்தோர் ஈஷா யோகா மையத்துக்கு வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தோம். மேலும், கொரோனா வைரஸ் தாக்கிய நாடுகளுக்கு சென்றவர்கள், அந்த நாடுகளின் விமானநிலையங்கள் வழியாக வந்தவர்களும் ஈஷாவுக்கு வர வேண்டாம் என்று தெரிவித்து இருந்தோம். ஈஷாவுக்கு வந்த மற்ற வெளிநாட்டினர்கள் கட்டாயம் 28 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கட்டாய மருத்துவ பரிசோதனை மற்றும் உடல்ரீதியான இடைவெளி நெறிமுறைகளை தற்போது வரை ஈஷா பின்பற்றி வருகிறது.
ஈஷா யோகா மையத்தில் தங்கி இருப்பவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு சாதாரண நாட்களில் கூட கடுமையான மருத்துவ மற்றும் சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்போது அவர்கள் 2 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்கி உள்ளோம்.
நெல்லை : மேலப்பாளையம் ஊரின் அனைத்து வாயில்களும் அடைப்பு
ஈஷா மையத்தில் தங்கி பாதுகாப்பு பணி, தூய்மை பணி மற்றும் பிற களப் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த நெறிமுறை பொருந்தும். மேலும், ஈஷா வளாகத்தின் பல இடங்களில் கையை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் கிருமிநாசினிகளும் (Hand sanitizers) வைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி மாதத்தில் இருந்தே மாநில சுகாதார அதிகாரிகள் ஈஷா யோகா மையத்துக்கு தொடர்ந்து வருகை தந்து மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டு வருகின்றனர். இதுவரை இங்கு தங்கியுள்ள ஒருவருக்கு கூட கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக, ஆதாரமின்றி வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஈஷா வளாகத்தை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என ஈஷா சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM