பூமிப்பந்தை கொரோனா வைரஸ் ஸ்தம்பிக்க வைத்துள்ள இச்சூழலில், 21 நாள்கள் முடக்கத்துக்குப்போய் உலகின் மிகப்பெரிய `க்வாரன்டீன்’ தேசமாக இந்திய மாறியிருக்கிறது. அதே நேரத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க தன் அரசியல் திட்டங்களைத் தங்குதடையின்றி செயல்படுத்துவதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். மக்கள் அனைவரும் வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டாம் என்பதை பிரதமர் மோடி வலியுறுத்திக்கேட்டுக்கொண்டுள்ளார். அதையடுத்து, வீடுகளுக்குள் மக்கள் முடங்கிக்கிடக்கிறார்கள். நாடே வெறிச்சோடிக் காணப்படுகிறது.

ஜோதிராதித்யா, சிவராஜ் சிங் சௌகான்

இத்தகைய சூழலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க., தன் செயல்திட்டங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவந்தது. அங்கு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்களான 22 எம்.எல்.ஏ-க்கள் மார்ச் 10-ம் தேதி திடீரென ராஜினாமா செய்தனர். ஜோதிராதித்யா சிந்தியா பா.ஜ.க-வில் இணைந்தார். அரசு பெரும்பான்மையை இழந்தது. இவை அனைத்தும் அடுத்தடுத்து கடகடவென்று நடந்துமுடிந்தன.

“கமல்நாத் அரசு கவிழவில்லை, கவிழ்க்கப்பட்டது” என்றும், இதன் பின்னணியில் பா.ஜ.க தலைமையின் சதுரங்க விளையாட்டு இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்தன. மத்தியப் பிரதேசத்தில் இந்த அரசியல் ஆட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, இந்தியாவில் 50 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். கொரோனா பற்றிய பீதி அதிகரித்துக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பா.ஜ.க அரியணை ஏறியது. பா.ஜ.க-வின் சிவராஜ் சிங் சௌகான் முதல்வராகப் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு நிகழ்ந்தபோது, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருந்தது.

கமல்நாத்

டெல்லி ஷாகீன் பாக் போராட்டம் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஒரு தலைவலியாகவே இருந்துவந்தது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்.ஆர்.சி., என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக மூன்று மாதங்களுக்கு மேலாக அந்தப் போராட்டத்தை ஷாகீன் பாக்கில் பெண்கள் முன்னெடுத்துவந்தனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உட்பட பலரும் அங்கு சென்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவந்தனர். அந்தப் போராட்டம் டெல்லியுடன் நின்றுவிடவில்லை. அந்தப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட மற்ற மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள், தங்கள் பகுதிகளிலும் `ஷாகீன் பாக்’ பாணியிலான போராட்டங்களை ஆரம்பித்தனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஒரு மாத காலத்துக்கு மேலாக இத்தகைய போராட்டம் நடைபெற்றது.

ஷாகீன் பாஃக் போராட்டம்

அடுத்ததாக, இந்திய தேசம் 21 நாள் முடக்கத்துக்குப் போவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்புக்குப் பிறகு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் பங்கேற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்ற தீர்ப்பை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதையடுத்து, தற்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான முதற்கட்டப் பணி தொடங்கப்பட்டுள்ளது. தற்காலிகக் கோயிலில் இருந்த குழந்தை ராமரின் சிலை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான `பாலாலயம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி மார்ச் 25-ம் தேதி நடைபெற்றது. அதாவது, தேசமே முடக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்த சில மணி நேரத்தில் இந்த நிகழ்ச்சி அயோத்தியில் நடைபெற்றது.

அயோத்தியில் யோகி ஆதித்யநாத்

அந்த நிகழ்ச்சியில் உ.பி முதல்வர் யோகி பங்கேற்றார். அங்கு ஒன்பதரை கிலோ எடையுள்ள வெள்ளி அரியாசனத்தில் ராமர் சிலை வைக்கப்பட்டது. கொரோனா காரணமாக சமூக விலகலை நாட்டு மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்திய நிலையில், அதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒரு மாநிலத்தின் முதல்வர் ஏராளமானோர் கூடி பங்கேற்ற அந்தப் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றார்.

என்ன வேதனையென்றால், அதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாகத்தான், “யாரும் மசூதிகளுக்கோ, கோயில்களுக்கோ செல்ல வேண்டாம்” என்று மாநில மக்களுக்கு யோகியே அறிவுரை வழங்கியிருந்தார். அதற்கு முரணாக, அந்த அறிவிப்பை செய்த கையோடு இந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.

அயோத்தி

ராமர் கோயில் கட்டுமான துவக்க நிகழ்ச்சியை தற்போதைய சூழலில் ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுவந்த நேரத்தில், நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முதல்வர் யோகி கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், அது தொடர்பான புகைப்படங்களைத் தன் ட்விட்டர் பக்கத்திலும் அவர் வெளியிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தற்போதைய சூழலில் வேலையிழப்பால் வருமானமின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கும் போதுமான நிவாரணங்களை மத்திய அரசு அறிவிக்கவில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவந்தன. இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் மற்றும் அமைச்சர்களுக்கான குடியிருப்புகளை ரூ.20,000 கோடி செலவில் கட்டுவது தொடர்பாக நிலம் பயன்பாடு மாற்றத்துக்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடம்

மத்திய பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால், 30 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களில் 33.5 சதவிகித மக்கள் மரணமடைய நேரிடும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Also Read: கொரோனா யுத்தம்! வீழுமா… வெல்லுமா தமிழ்நாடு?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.