கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்யும் சுகாதாரப் பணியாளர்கள் நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு சற்றும் குறைவானவர்கள் அல்ல’ என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தற்போது இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் இதுவரை 1600-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 39 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தலைநகர் டெல்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த மாநிலங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக கால்நடையாக சென்றது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கொரோனா வைரஸ்

இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி விவாதத்துக்குள்ளானதையடுத்து அவர்கள் அனைவரும் சிறப்பு பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டெல்லியில் காப்பகங்களில் தங்கியிருப்பவர்களுக்கு அரசுத் தரப்பில் உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா தொற்று தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அப்போது, “போர்க் காலங்களில் வீரர்கள் தங்களது உயிர்களைப் பணயம் வைத்து இந்த நாட்டுக்காக போராடுவார்கள். இந்த தேசமே அவர்களுக்கு கடன்பட்டிருக்கும். இன்றைய சூழலில் சுகாதாரப் பணியாளர்களாகிய நீங்கள் செய்யும் பணியானது ராணுவ வீரர்களின் சேவைக்கு சற்றும் குறைவில்லாதது. நீங்கள் உங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்து இந்த நாட்டு மக்களுக்காகப் போராடுகிறீர்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால்

நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்துக்கு டெல்லி அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இன்றைய சூழலில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் சுகாதாரப்பணியாளர்கள் யாராக இருந்தாலும் மருத்துவரோ, செவிலியரோ, சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளும் நபர்களோ எதிர்பாராதவிதமாக உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பங்களுக்கு டெல்லி அரசு சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும். அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் என எந்தப் பாகுபாடும் கிடையாது.

Also Read: `உடைந்த கால்களுடன் 240 கி.மீ நடைப்பயணம்!’ – ஊரடங்கு உத்தரவால் கலங்கும் ராஜஸ்தான் இளைஞர்

கொரோனா வைரஸுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுள்ள டெல்லி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் உரையாடினேன். அவர்களின் தைரியத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் நான் தலைவணங்குகிறேன். அவர்களுக்குத் தேவையான முழு ஆதரவையும் அரசு அளிக்கும். அவர்கள் எங்களிடம் சில பரிந்துரைகளைத் தெரிவித்துள்ளனர். கூடிய விரைவில் அவற்றை நாங்கள் செயல்படுத்துவோம்.

கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளான நோயாளிகளை கையாளும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதையும் மீறி யாருக்காவது எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்தை அரசு கவனித்துக்கொள்ளும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.