“இவ்வளவு நாளா ஸ்கூல், ஹோம் வொர்க், ஸ்பெஷல் கிளாஸ்னு ஓடிட்டே இருப்போம். எங்களுக்குப் பிடிச்சதைச் செய்ய நினைச்சாலும், நேரம் இருக்காது. ஆனா, இப்போ எங்க திறமையை வெளிப்படுத்த, எங்களுக்குப் பிடிச்சதைச் செய்ய நிறைய நிறைய நேரம் கிடைச்சிருக்கு” என உற்சாகத்தில் திளைக்கிறார்கள் சுட்டிகள்.

இந்தியா முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு ஆரம்பித்து ஒரு வாரம் ஆகிறது. `இந்த நாள்களில் பிள்ளைகளை வீட்டுக்குள்ளேயே வெச்சு எப்படி சமாளிக்கப்போகிறோமோ?’ என ஆரம்பத்தில் பயந்த பல பெற்றோர்களும், இப்போது மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளிடம் இவ்வளவு தனித்திறன்கள் இருக்கிறதா என வியந்துபோய் பார்க்கிறார்கள்.

ராம் லஷ்மண்

முகநூல் போன்ற சமூக வலைதளம் பக்கம் சென்றாலே, வீட்டுக்குள் இருக்கும் தங்கள் குழந்தைகள் செய்த விதவிதமான படைப்புகளைப் பல பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் படைப்புகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார்கள். அந்தக் குழந்தைகளிடமே அதுகுறித்துப் பேச, அவர்களிடமிருந்து வெளிப்பட்ட உற்சாகம், இந்த நெருக்கடியான நிலையில் மனத்தை லேசாக்கியது.

“21 நாளைக்கு ஸ்கூல், கடைகள் எதுவுமே இருக்காதுன்னு சொன்னதும், எங்க அம்மா கடைக்குப்போய் மளிகை சாமான்கள் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டாங்க. உடனே நாங்க அம்மாகிட்ட, `எங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க? இந்த 21 நாளும் நாங்க என்ன பண்றதாம்? எங்களுக்கு பேப்பர்ஸ், ஸ்கெட்ச்னு ஸ்டேஷனரி திங்க்ஸ் வேணும்னு சொன்னோம்” என்கிறார் ஶ்ரீலஷ்மண்.

காஞ்சிபுரத்தில் இருக்கும் இவருக்கு, ஓர் அண்ணன். இவரின் அம்மா உதயலஷ்மி, பள்ளி ஆசிரியை.

“மறுபடியும் பக்கத்துல இருக்கிற சூப்பர் மார்கெட் போனோம். அதுக்குள்ளே பொருள்களை வாங்க பெரிய க்யூ நின்னுட்டிருந்தாங்க. ரொம்ப நேரம் நின்னு உள்ளே போனால், ஸ்டேஷனரி திங்ஸே இல்லை. `இப்போதைக்கு மக்களுக்கு அத்தியாவசிய தேவையான உணவுப் பொருள்களை அதிகம் கொடுக்கணும்னு, ஸ்டேஷனரி திங்ஸை எல்லாம் எடுத்துவெச்சுட்டோம். அந்த இடங்களில் ஃபுட் திங்ஸை வெச்சிருக்கோம்னு சொல்லிட்டாங்க. வேற கடைக்குப்போய் கிடைச்ச வரைக்கும் வாங்கிட்டு வந்தோம்” என்கிறார் லஷ்மணின் அண்ணன் ஜெய்ஶ்ரீராம்.

இஷானி, இசை

வாங்கிவந்த வெள்ளைத்தாள்கள், வீட்டில் இருந்த பழைய செய்தித்தாள்கள், உபயோகமில்லாத பொருள்களை வைத்து, கத்தி, குத்துவாள் என விதவிதமான பழங்காலப் போர்க்கருவிகளைச் செய்து அசத்தியிருக்கிறார்கள் இருவரும்.

“பழைய அட்டைப் பெட்டியில் ட்ராலில் பேக், மூடின்னு நிறைய செய்தோம். இன்னும் இருக்கிற லீவு நாளில் பாருங்க. வீட்டுல இருக்கிற எல்லாப் பொருள்களையும் எப்படி மாத்திடறோம்னு” என்று குஷியோடு சொல்கிறார்கள்.

Also Read: `கவலையோ, மன அழுத்தமோ… வேண்டவே வேண்டாம்!’ – கொரோனா அச்சத்தைப் போக்கும் இலவச கவுன்சலிங் மையம்

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் காயத்ரி விவேக். இவரின் மகள்கள் இசை மற்றும் இஷானி.

“எங்களுக்கு எப்பவுமே வீட்ல சும்மா இருக்கிறது பிடிக்காது. ஸ்கூல் இருக்கிறப்பவே வீட்ல கிடைக்கிற நேரத்துல கிராஃப்ட் செய்வோம். நிறைய செய்யணும்னு ஆசையா இருக்கும். ஆனா, ஹோம் வொர்க் முடிக்கிறதுக்கே டயர்டாகிடும். இப்போ, நிறைய டைம் கிடைச்சிருக்கு. சும்மா விடுவோமா? ஃபேஸ் பெயின்டிங், பெப்பெட் ஷோ என நாங்களே ரெடி பண்ணி நாள் முழுக்க ஜாலியா என்ஜாய் பண்றோம்” என்கிறார் அக்கா இஷானி.

தங்கையான இசை, இவருக்குக் கிடைத்திருக்கும் சோதனை எலி… ஸாரி, புலி. 15 நிமிடங்களுக்குள் தங்கையின் முகத்தில் புலியை வரவைத்துள்ளார்.

சாத்விகா

“டான்ஸ், பாட்டு, கிராப்ஃட்னு நாள் முழுக்க விளையாடினாலும் எங்களுக்கு சலிப்பே இல்லை. இன்னும் ஒரு மாசம் இப்படியே இருந்தாலும் ஜாலிதான்” என்கிறார் இசை.

சென்னை, செம்மஞ்சேரியைச் சேர்ந்த வங்கி ஊழியர், கற்பகம். இவரது மகள் சாத்விகா.

“எனக்கு ஒரிகாமி, பானை ஓவியம் செய்றது ரொம்பப் பிடிக்கும். இப்போ வீட்ல நிறைய நேரம் இருக்கிறதால, ஒவ்வொரு நாளும் ஏதாவது பெருசா செய்யணும்னு பிளான் போட்டிருக்கேன். அப்போதானே டைம் பாஸாகும். இது, நேத்து செஞ்ச `பசெட்டா ஸ்டார்’ (Bascetta Star). பழைய மாத காலண்டரை 24 பீஸ்களா கிழிச்சு, மடிச்சு மடிச்சு ஜாயின் பண்ணி செஞ்சேன். இதை செஞ்சு முடிக்கவே அரை நாளுக்கு மேலே ஆகிடுச்சு. எப்படி இருக்கு?” என்று பெருமிதான குரலில் கேட்கிறார் சாத்விகா.

இதேபோல திருச்சியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவியான ரிபா ஜாஸ்மின், “நான் பென்சில் டிராயிங் வரைவேன். வெளியே எங்கேயும் போகக்கூடாது. யாரையும் பார்க்கக்கூடாதுன்னு சொல்லிட்டதால, ஃப்ரெண்ட்ஸை ரொம்பவே மிஸ் பண்றதை மறக்க, நிறைய பென்சில் டிராயிங் வரைஞ்சுட்டிருக்கேன். அதில் இன்னும் நல்லா கத்துக்கப்போறேன்” என்கிறார்.

ரிபா ஜாஸ்மின்

இப்படி ஒவ்வொரு வீட்டிலும், `நம் குழந்தைகளுக்குள் இவ்வளவு தனித்திறன்கள் இருக்கா? இத்தனை நாளா ஹோம் வொர்க் முடிச்சியா? ஸ்கூலில் என்ன சொல்லிக்கொடுத்தாங்க என்றல்லவா அதிகம் கேட்டுக்கொண்டிருந்தோம்’ என்று பெற்றோர்கள் நினைக்கும் அளவுக்கு பிள்ளைகள் அசத்திவருகிறார்கள்.

மாற்றுக் கல்வியை இயல்பாக வீடுகளுக்குள் நடத்திவருகிறது இந்த ஊரடங்குக் காலம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.