கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஒவ்வொரு பகுதியிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சென்னை, கோவை போன்ற மாநகராட்சிகள், தீயணைப்பு வாகனங்களின் உதவி கொண்டே இந்த வேலையைத் தற்போது வரை செய்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி இந்தப் பணிகளை மேற்கொள்ள ஒரு பிரத்யேக வாகனத்தை தற்போது பயன்படுத்தி வருகிறது. Disinfectant spay canon எனும் இந்த வாகனம் கோவாவில் தயாரிக்கப்பட்டு இங்கே கொண்டுவரப்பட்டுள்ளது. சாதாரண ஈச்சர் லாரியின் சேஸியை அடித்தளமாக வைத்து இந்த வாகனத்தைக் கட்டமைத்துள்ளனர்.
இதில் கெனான் (cannon) எனப்படும் கிருமி நாசினியைத் தெளிக்கும் ஆட்டோமேட்டிக் கருவி மற்றும் அதை இயக்கத் தனியாக ஒரு ஜெனரேட்டர் உள்ளது. கிருமி நாசினியை வைத்துக்கொள்ளத் தோராயமாக 1500 முதல் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டேங்கும் உண்டு. அதுமட்டுமல்ல, கூடுதலாகப் பத்துக்கும் மேற்பட்ட 25 முதல் 40 லிட்டர் கேன்களையும் இதில் வைத்துக்கொள்ளலாம்.
கிருமி நாசினியைத் தெளிக்கப் பயன்படும் கருவியின் பெயர் மிஸ்ட் கெனான் M50. இந்தக் கருவி திரவ வடிவில் இருக்கும் ரசாயனத்தை, பனித்துகள்களைப்போல சின்னச் சின்னதாக உடைத்து சீரான அளவில் காற்றில் பரவச்செய்யும். தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு திரவ வடிவிலேயே ரசாயனத்தைத் தெளிக்கும்போது ஒரு தெருவுக்கு 50 லிட்டர் தேவைப்படும் என்றால் இந்தக் கருவியைப் பயன்படுத்தினால் 20 முதல் 30 லிட்டர் மட்டுமே செலவாகும்.
அதுமட்டுமில்லை, இது ஆட்டோமேட்டிக் கருவி என்பதால் சீரான முறையில் அனைத்து திசையிலும் 50 மீட்டர் தூரம் வரை இது கிருமி நாசினியை தெளித்திடும். ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு ரிமோட் கன்ட்ரோல் மூலமும் இந்தக் கருவியை இயக்கமுடியும் என்பது இதன் இன்னொரு சிறப்பு.

தற்போது வாங்கப்பட்டிருக்கும் இந்த வாகனத்தின் விலை 10 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை இருக்கும். இந்த வாகனத்தை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் மாநகராட்சிக்கு வாங்கிக் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.