ஜப்பான் மக்கள் ஆண்டுதோறும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் வசந்தகாலம் தற்போது நிலவுகிறது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால், அந்த நாட்டு மக்களின் வசந்தகால கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன.

இந்தப் பருவத்தில், அந்நாட்டில் செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்கும். உள்ளத்தைக் கொள்ளைக்கொள்ளும் அந்த மலர்களைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு செர்ரி மலர்களைக் காண மக்கள் பெருமளவில் கூடியதால், கொரோனா பாதிப்பு பலருக்கும் பரவத் தொடங்கியது. சுதாரித்துக்கொண்ட அரசு, செர்ரி மலர்களைக் காண்பதற்கு அதிரடியாகத் தடைவிதித்தது.

மீண்டும் செர்ரி மலர்களைக் காண மக்கள் ஓராண்டு காத்திருக்க வேண்டும். இது, வரலாற்றில் முதன்முறையாக அந்த நாட்டு மக்களுக்குக் கிடைத்திருக்கும் ஏமாற்றம். மக்களின் இதயங்களைக் கவரும் செர்ரி மலர்கள், பார்வையாளர்கள் யாருமில்லாத தற்போதைய சூழலில் காய்ந்து தரையில் உதிர்கின்றன; நதியில் மிதக்கின்றன. மேலும், இந்த ஆண்டு அந்த நாட்டில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டியும் அடுத்த ஆண்டுக்குத் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஜப்பான் மக்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அதேசமயம், உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு நிலை ஜப்பானில் கட்டாயமாக்கப்படவில்லை. ஆனாலும் அரசின் வேண்டுகோளை ஏற்று மக்கள் பெரும்பாலும் வீடுகளிலேயே இருக்கின்றனர். வார விடுமுறை நாள்களின் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களையும் தவிர்த்துள்ளனர். ஜப்பானின் தற்போதைய கொரோனா சூழல் மற்றும் செர்ரி மலர் பார்வைக்கான தடை உள்ளிட்ட களநிலவரங்களைப் பகிர்கிறார், அந்த நாட்டில் வசிக்கும் தமிழரான கவிதா.

ஜப்பான்

“தலைநகர் டோக்கியோவுக்கு அருகிலுள்ள கனகவா (Kanagawa) மாநிலத்துல யோகோஹமா (yokohama) துறைமுகத்தில் கப்பலில் பயணம் செய்த சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அதுதான் ஜப்பான்ல கொரோனா பரவியதற்கு முதல் காரணம். கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கொரோனா, நாடு முழுக்க பரவியது. அப்போ வெளிநாட்டில் இருந்து ஜப்பான் வந்த மக்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கான்னு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்யப்படலைனு குற்றச்சாட்டு இருக்குது. அரசு எச்சரிக்கையுடன் இருக்கத் தவறிய இந்தச் செயலால், நாட்டுல கொரோனா பல இடங்களிலும் பரவ ஆரம்பிச்சது.

நாட்டின் வடக்குப் பகுதியான கொக்கைடோ (Hokkaido) மாநிலத்துல பனிக்காலத்துல நடத்தப்படும் பனிச்சிற்பக் கண்காட்சி வெகு பிரபலம். அந்த நிகழ்ச்சியில வெளிநாட்டினர் அதிகம் பங்கேற்றாங்க. அப்போது, கொரோனா தாக்கம் இருந்த வெளிநாட்டினர் மூலம் ஜப்பானைச் சேர்ந்தப் பலருக்கும் கொரோனா வைரஸ் பரவிடுச்சு. 15 நாள்களுக்கு அந்த மாநிலம் முடக்கப்பட்டிருந்த நிலையில, அங்க நிலைமை தற்சமயம் மேம்பட்டிருக்கு.

கொரோனா

இப்போ, தலைநகர் டோக்கியோவில்தான் பாதிப்பு அதிகமா இருக்கு. ஆனாலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதால், நாடு முழுவதுமே ஊரடங்கு உத்தரவு கட்டாயமாக்கப்படலை. ஆனாலும், பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க, மக்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கணும்னு அரசு சார்பில் அடிக்கடி வேண்டுகோள் விடுக்கப்படுது. வார இறுதியில ஷாப்பிங் கடைகளை மூடச் சொல்லிட்டாங்க. ஐ.டி உள்ளிட்ட சில துறை ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் முறை வழங்கப்பட்டிருக்கு. அலுவலகத்துக்குப் போய் வேலை செய்வோரும் உண்டு. அவங்களுக்கு பணிநேரம் குறைக்கப்பட்டிருக்கு.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில, அவசியத் தேவைக்கு மக்கள் வெளியே போறாங்க. முன்னெச்சரிக்கை நடவடிக்கையா பெரும்பாலான மக்கள் பொறுப்புணர்வுடன் வீட்டிலேயே இருக்காங்க. ஐந்தாம் வகுப்பு வரையிலான சில ஸ்கூலுக்கு மட்டும் விடுமுறை விட்டிருக்காங்க. குழந்தைகளுக்கான கேர் சென்டர் இயங்குது.

கொரோனா

மாஸ்க், சானிடைஸர் உட்பட சில பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுது. மக்கள் பெருமளவில் ஓரிடத்தில் கூடுவதையும், கொண்டாட்டங்களையும் தவிர்க்குமாறு அரசு சொல்லியிருப்பதை மக்கள் கடைப்பிடிக்கிறாங்க. அதேநேரம், பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் இல்லாம நடத்தப்படுது” என்கிற கவிதா, செர்ரி மலர்களைக் காண்பதற்கான தடை குறித்து விரிவாகப் பேசினார்.

“ஜப்பானில் வசந்தகாலம் மிகவும் பிரபலம். இந்தப் பருவநிலையில பூக்கும் செர்ரி மலர்கள், நாட்டின் அடையாளங்களில் முக்கியமானது. இயற்கைச் சூழல் மற்றும் பூக்களின் அழகுக்காகவே இந்த மரங்கள் வளர்க்கப்படும். இலையே இல்லாம, பிங்க் நிறத்துல ஒவ்வொரு மரத்திலும் ஆயிரக்கணக்கான மலர்கள் பூக்கும். இந்தப் பருவத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாறுபட்ட காலங்களில்தான் பூத்துக்குலுங்கும். ஆனா, அவற்றில் சில பகுதிகள்லதான் செர்ரி மலர்களைக் காண்பதற்கான சுற்றுலாத் தலம் (jerry blossom) இருக்கு. அதில், தலைநகர் டோக்கியோவுல மிகுரோ (Meguro), யோயோகி பார்க் (Yoyogi park) உள்ளிட்ட சில பகுதிகள் முக்கியமானவை.

ஜப்பான்

மிகுரோ பகுதியில நதிக்கு அருகே ஆயிரக்கணக்கான மரங்கள் மொத்தமாக இருக்கும். தற்போதைய வசந்த காலத்துல அந்த இடம் முழுக்கவே வானத்தை மறைத்ததுபோல பல லட்சம் செர்ரி மலர்கள் பூத்துக்குலுங்கியிருக்கும். அதைப் பார்த்தால், விவரிக்க முடியாத பரவசம் ஏற்படும். இந்தக் காட்சியைப் பார்க்க உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு மக்களும் அதிக அளவில் கூடுவாங்க.

நண்பர்கள், குடும்பத்தினருடன் அந்த மரத்தினடியில் உட்கார்ந்து பேசுவது, விளையாடி மகிழ்வது என, பலமணிநேரம் செலவிடுவாங்க. அப்படியான கொண்டாட்டங்கள் இந்த வருடத்தின் வசந்த கால தொடக்கத்துல ஆரம்பமானது. நானும் குடும்பத்தினருடன் செர்ரி மலர்களைப் பார்த்து சந்தோஷப்பட்டேன். அந்த நேரத்துல மக்கள் அதிகமா கூடினதால, கொரோனா பாதிப்பு அதிகரிக்க ஆரம்பிச்சது.

ஜப்பான்

அதனால, நாடு முழுக்க செர்ரி மலர்களைப் பார்ப்பதற்கான சுற்றுலாத் தலங்களை அரசு மூட உத்தரவிட்டது. இது, இந்த நாட்டு மக்களுக்குப் பெரிய ஏமாற்றம்தான். அதேபோல இந்த ஆண்டு, ஜப்பான்ல நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்க நான் உட்பட மக்கள் ரொம்பவே ஆர்வமா இருந்தோம். அதுவும் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கு. இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் பார்க்க, ஜப்பான் மக்கள் ஒரு வருஷம் காத்திருக்கணும்.

அதேநேரம், அவங்கவங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கும் பூங்காவுல ஒருசில ஜெர்ரி மரங்கள் இருந்தால், அதில் மலர்களைப் பார்க்கலாம். வரும் காலங்களில் கொரோனா பரவல் அதிகமாச்சுனா, இந்தியாவைப்போல ஜப்பான்லயும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகமாக வாய்ப்பிருக்கு” என்று கூறினார் கவிதா.

Also Read: கொரோனா யுத்தம்! வீழுமா… வெல்லுமா தமிழ்நாடு?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.