தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், “கொரோனா நோய்த் தடுப்பில் தமிழகம் முழுவதும் உண்மை நிலையை அறிந்து நடவடிக்கை எடுக்க அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். காணொளிக் காட்சி மூலம் கூட்டலாம்” என்று தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதே கருத்தை தி.மு.க தலைமையிலான கூட்டணியில் உள்ள ம.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்டாலின்

கொரோனாவுக்கு எதிராக ஏராளமான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்துவரும் நிலையில், எதற்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்கிறீர்கள் என்ற கேள்வியுடன் தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை மாநகர முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியனிடம் பேசினோம்.

அவர், “தற்போது தமிழக அரசு எடுத்துவரும் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பத்திலிருந்து இதே முனைப்பை எடுத்திருந்தால், இவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது. சட்டமன்ற கூட்டம் வேண்டாம் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தோம்… எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா பாதிப்பு வந்துவிடும் என்பதற்காக. அதைக் கேட்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தங்களால் இயன்ற உதவுகளைச் செய்யவும்தான் இதைக் கேட்டோம்.

ஆனால், அதற்கு கிண்டல் தொனியிலேயே முதல்வர் பதிலளித்துவந்தார். ஆனால், இன்றைக்கு சமூகப் பரவல் என்ற நிலை வந்துள்ளது. இது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துவரும் நிலையில், மக்கள் மத்தியில் அச்சமும் கவலையும் ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கு நாம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். நோய்த் தடுப்புக்கான நடவடிக்கைகளை அனைவரும் சேர்ந்து மேற்கொண்டால்தான், அதை வெற்றிகரமாக முறியடிக்க முடியும். ஆளும்கட்சியும் அரசும் மட்டுமே இந்தப் பணியைச் செய்துவிட முடியாது. கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளும் தோளோடு தோள் நின்று கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும். இதைத்தான் எங்கள் தலைவர் சொல்லியிருக்கிறார். இதற்காகத்தான் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எங்கள் தலைவர் வலியுறுத்தியிருக்கிறார்.

மா.சுப்பிரமணியன்

ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் இணைத்து, மக்களையும் இணைத்து ஒற்றுமை உணர்வுடன் செய்தால்தான் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் பெரிய வெற்றியை அடைய முடியும். எதிர்க்கட்சியாக அரசின் இந்த நடவடிக்கையில் முழு ஒத்துழைப்பு தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அது குறித்து விவாதிக்கத்தான் இந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்கிறோம். இப்போது தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் சற்று தாமதமானவை என்றாலும், அவை சரியான நடவடிக்கைகளே. இதைத் தொடர்ந்து அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கு அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைவரின் கருத்துக்களையும் கேட்கும்போது, இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்” என்றார்.

அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை ஏற்பதற்கு தமிழக அரசு தயாராக இல்லை. இது குறித்து ஆளும்கட்சியான அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் ஜவகர் அலியிடம் பேசினோம்.

அவர், “தமிழக அரசைப் பொறுத்தவரை கொரோனாவுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் மிகச் சிறப்பாக எடுத்துவருகிறது. இதனால், தமிழக அரசுக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு அதிகரித்து வருகிறது. அரசின் நடவடிக்கை சிறப்பாக இருப்பதாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாராட்டிவருகிறார்கள். இது எதிர்க்கட்சிகளுக்கு பொறுக்கவில்லை. நாங்கள் சொன்னதால்தான் அரசு இந்த நடவடிக்கையெல்லாம் எடுக்கிறது என்று சொல்லி அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவே அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள்.

ஜவஹர் அலி

அனைத்துக்கட்சி கூட்டம் தேவையே இல்லை. தி.மு.க-வின் கூட்டணி கட்சியான சி.பி.எம் ஆட்சி செய்யும் கேரளாவிலோ, காங்கிரஸ் ஆட்சி செய்யும் புதுச்சேரியிலோ அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்களா என்ன? மத்தியிலும்கூட அனைத்துக் கட்சி கூட்டத்தை பிரதமர் நடத்தவில்லை. அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றால் அது ஓர் ஆக்கபூர்வமாக நிறைவடைய வேண்டும். ஆனால், இவர்கள் அப்படி நடக்கவிட மாட்டார்கள். ஏற்கெனவே, 20 சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்திலும் காவிரி பிரச்னையிலும் அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டியபோது, ஆளாளுக்கு ஒரு கருத்தைத் தெரிவித்தார்கள்.

கொரேனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு உச்சபட்சமாக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையையும் தமிழக அரசு செய்துவருகிறது. இதன் மூலம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரமாகத் தமிழக அரசு விளங்கி வருகிறது. இதை இவர்கள், அனைத்துக்கட்சிக் கூட்டம் என்ற பெயரில் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து திசைத்திருப்பிவிடுவார்கள். எனவே, அனைத்துக்கட்சிக் கூட்டம் தேவையே இல்லை.

எடப்பாடி பழனிசாமி

ஆக்கபூர்வமான கருத்துகளையும் ஆலோசனைகளையும் அவர்கள் சொல்ல விரும்பினால், அறிக்கைகள் மூலமாகவோ கடிதங்கள் மூலமாகவோ அரசுக்கு அவர்கள் தெரிவிக்கலாம்” என்றார்.

அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்று ஸ்டாலின் உட்பட தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் அரசை வலியுறுத்திவரும் நிலையில், “அனைத்துக்கட்சிக் கூட்டம் தேவையில்லை” என்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார், தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி-யான கே.பி.ராமலிங்கம். இதற்காக, தி.மு.க-விலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

அனைத்துக்கட்சி கூட்டம் (கோப்பு)

அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க ஆளும் கர்நாடகாவில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா கூட்டியிருக்கிறார். மார்ச் 29-ம் தேதி நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றார்கள். அப்போது, “மருத்துவ உபகரணங்கள் போதுமானதாக இல்லை. மக்களுக்கு இலவசமாக உணவுப்பொருள்கள் கிடைப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். ஊரடங்கின்போது போலீஸார் அத்துமீறுவது தவறு” என்ற கருத்துகளை சித்தராமையா முன்வைத்தார்.

கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவில்லை. ஆனாலும், முதல்வர் பினராயி விஜயனும் எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதாலாவும் ஒன்றாக வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தனர். அப்போது, “அரசியல் வேறுபாடுகளை மறந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்” என்று அவர்களுக்க இருவரும் வேண்டுகோள் விடுத்தனர்.

பினராயி விஜயன்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு உறுதியாக எடுத்துவரும் அதே வேளைலையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகளையும் கேட்பது ஜனநாயகத்துக்கு நல்லதுதானே!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.