கொரோனா வைரஸ் அச்சம் உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் இதே நேரத்தில் இந்த வைரஸை முன்வைத்து இந்தியாவில் பல பிரச்னைகள், சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் மிகப்பெரும் பிரச்னையாக இருப்பது தொழிலாளர்களின் இடப் பெயர்வு. இவர்களின் செயலை சற்றும் எதிர்பார்க்காத மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்களுக்குத் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். அப்படி உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற சில மாநிலங்களில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் டெல்லியில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.
ஊரடங்கால் அவர்கள் வேலை இழந்ததால் உணவுக்கு வழி இல்லாமல் தற்போது சொந்த கிராமங்களை நோக்கிப் பல கி.மீ- கள் நடந்தே பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக அலோக் ஸ்ரீவத்சவா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், தொழிலாளர்கள் இடப்பெயர்வு வைரஸை விட ஆபத்தானது என மத்திய அரசை எச்சரித்து இது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப் படி இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மத்திய அரசு சார்பாகப் பேசிய மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, `இரு மாநிலங்களுக்கு இடையே கடுமையான தடை அமலில் இருந்தது. ஆனால் அதையும் மீறி தொழிலாளர்கள் வெளியேறினர். இடம் பெயரும் தொழிலாளர்களில் பத்தில் 3 பேர் தங்கள் கிராமங்களுக்கு வைரஸைக் கடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, அவர்கள் வழியிலேயே தடுக்கப்பட்டு விடுதிகளில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 22,88,000 பேருக்கு தினமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. வைரஸ் பரவும் பீதியைக் குறைத்து தக்க நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது’ என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Also Read: `இது வைரஸைவிடப் பெரிய பிரச்னை..’ – மத்திய அரசை எச்சரித்த உச்ச நீதிமன்றம் #corona
இதையடுத்து பேசிய நீதிபதிகள், ‘வைரஸை விட தொழிலாளர்களின் இடப்பெயர்வு ஆபத்தானது. எனவே குடிபெயருபவர்களைத் தடுத்து அவர்களுக்குத் தங்க இடம், ஆரோக்கியமான உணவு மற்றும் தேவையான மருத்துவ வசதி போன்ற அனைத்தையும் அரசு செய்து தர வேண்டும். மேலும் வைரஸை விட அதன் மீது இருக்கும் பீதி மக்களை அதிகம் கொன்றுவிடும். எனவே, அதைத் தடுக்க தொழிலாளர்களுக்கு தற்போதைய நிலைமையைப் புரியவைக்க வேண்டும். அரசு மக்களுக்குப் பலம் கொடுக்க வேண்டும்.

அனைத்து மதத் தலைவர்களையும் அழைத்து தொழிலாளர்களிடம் பேச வைத்து நிலைமையைப் புரியவைக்க வேண்டும். பயிற்சி பெற்ற ஆலோசகர்கள், மருத்துவர்களையும் அவர்களிடம் பேச வைத்து வைரஸ் பீதியைக் குறைக்க வேண்டும். தொழிலாளர்களின் நலனை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளனர்.
‘அடுத்த 24 மணி நேரத்துக்குள் ஆலோசகர்கள், மத தலைவர்களைத் திரட்டி தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். இன்று காலை 11 மணி வரை எந்தச் சாலைகளிலும் தொழிலாளர்கள் நடமாட்டம் இல்லை. அவர்களின் நலன் பாதுகாக்கப்படும்‘ என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்துக்கு உறுதியளித்துள்ளார்.