1947… ஆகஸ்ட்

வெள்ளை ஆதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்து இந்தியா, பாகிஸ்தான் என இருபெரும் தேசங்களாக இப்பெரு நிலம் பிளவுபட்டது. அதுவரை இது என் நிலம் என நம்பிக்கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் மத ரீதியான அப்பிரிவினையின் மூலமாக, அகதிகளாக ஆனார்கள். பாகிஸ்தானாகப் பிரிக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் இந்தியப் பகுதியாகப் பிரிக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்த இஸ்லாமியர்களும் ஒருகணம் செய்வதறியாது திகைத்துப் போயினர். பல மைல் தூரம் எதிர்த்திசையில் நடக்கத் தொடங்கினர். இடையில் எண்ணற்ற இறப்புகள்… இழப்புகள், உலகின் மிகப்பெரிய மக்கள் இடப்பெயர்வாக அது கணக்கிடப்பட்டது. இடம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை கோடிக்கும் அதிகமாகச் சொல்லப்பட்டது.

இது மதத்தின் கோரத்தால் நிகழ்ந்தது.

யாழ் இடப்பெயர்வு

1995…அக்டோபர்

தமிழீழ விடுதலைப் போராளிகளின் கைகளிருந்த யாழ்ப்பாணத்தை, தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைத்தது சிங்கள ராணுவம். கண்ணிமைக்கும் நேரத்தில் வான் வழியாகக் குண்டுகளை வீசிக் கொன்றழிக்கத் தயாரானது. பொழுது விடிவதற்குள் யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என மக்களுக்குப் போராளிகளின் வாயிலாகத் தகவல் கிடைத்தது. கிட்டத்தட்ட ஐந்து லட்சம் மக்கள் ஒரே இரவில், தாங்கள் வாழ்ந்த வீடுகளில் இருந்து வீதிக்கு வந்தார்கள். தங்களின் உயிர்களைக் காத்துக்கொள்ள, இரண்டே இரண்டு சாலைகளின் வழியாக, 24 மணி நேரத்துக்குள், பல கி.மீட்டர் தூரம் இடம்பெயரும் நிர்பந்தத்துக்கு ஆளானார்கள். செல்லும் வழியிலேயே நீரில்லாமல், நடக்கத் தெம்பில்லாமல் ஏராளமான மக்கள் இறந்தார்கள்.

இது இனத்தின் பெயரால் நடந்தது.

2020… மார்ச்

உலகெங்கும் அச்சுறுத்திக்கொண்டிருந்த கொரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டத் தொடங்கியது. ஜனவரி மாதம் கேரளாவில் முதல் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்குப் பிறகு அதன் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கத் தொடங்கியது. அனைத்து மாநிலங்களிலும் நோய்த்தொற்று பரவியது. கர்நாடகாவில் முதல் பலி உறுதியானது. மார்ச் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்புவிடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து அன்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது, 144 உத்தரவு அமல்படுத்தப்பட்டன. 22-ம் தேதிக்குப் பிறகும் கட்டுப்பாடுகள் தொடரும் என யூகிக்கப்பட்டன. அதை உறுதி செய்த பிரதமர், கடந்த மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் 21 நாள்களுக்கு முழு ஊரடங்கு அன்றைய தினம் நள்ளிரவு முதலே அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

பிரதமர் மோடி

தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் அனைவருக்கும் ஒருகணம் அச்சம் தொற்றிக்கொண்டது. ஊரடங்கு என்றால் அத்தியாவசியப் பொருள்களுக்கு என்ன செய்வது என விழி பிதுங்கிப் போய் இருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மத்திய மாநில அரசுகள் மக்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக அறிவிப்புகளை வெளியிட ஆரம்பித்தன. கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க அரசு வழிவகை செய்யும் எனவும் அறிவித்தார்கள். ஒருபுறம் இவையெல்லாம் நடந்துகொண்டிருந்த வேளையிலேயே, இந்தியத் தாயின் மூத்த, இடைநிலைப் பிள்ளைகள் இந்தக் கட்டுப்பாட்டுக்கு தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள ஆரம்பித்த நேரத்திலே, நமக்காக வேலை செய்த மருத்துவ, துப்புரவு, காவல் பணியாளர்களுக்காக வீட்டுப் பால்கனியில் இருந்து கைதட்டி ஆரவாரம் செய்த சத்தம் கொஞ்சம் ஓய்ந்த நேரத்திலே, தங்கள் கிராமங்களில் வாழ வழியில்லாமல், டெல்லி, மும்பை, சென்னை போன்ற மாநகரங்களுக்குப் பிழைப்புக்காக வந்த இந்தியத் தாயின் கடைநிலைப் பிள்ளைகள் நடப்பதறியாது விழிபிதுங்கிப் போய் மாநகரத்து வீதிகளில் நிர்கதியாக நிறுத்தப்பட்டார்கள்.

Also Read: `இது வைரஸைவிடப் பெரிய பிரச்னை..’ – மத்திய அரசை எச்சரித்த உச்ச நீதிமன்றம் #corona

வேலை பார்த்த நிறுவன முதலாளிகள் கைவிரிக்க, தங்கியிருந்த வீட்டு முதலாளிகள் நச்சரிக்க, நம்பி வந்த நகரங்களிலிருந்து தாங்கள் கிளம்பி வந்த ஊர்களுக்கே மீண்டும் இடம் பெயர நிர்பந்திக்கப்பட்டார்கள். குறிப்பாக, தலைநகர் டெல்லியிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு தோளில் தங்களின் குழந்தைகளுடன் 100, 200, 500 கி.மீட்டர் வரைக்கும் தங்கள் மாநிலங்களை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.

போக்குவரத்து வசதிகள், தொலைத் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட, இந்த நவீன யுகத்தில், இப்படியொரு மாபெரும் துயரம் நிகழ என்ன காரணம்?

கொரோனா ஆபத்து பரவாமல் இருக்க ஊரடங்கு அறிவித்தது நியாயமான ஒன்று. ஆனால், அதையே வெறும் நான்கு மணி நேர இடைவெளியில் அறிவித்தது ஏன்?…

தங்களின் சொந்த ஊர்களிலிருந்து இடம்பெயர்ந்து பிற ஊர்களில் வேலை பார்ப்பவர்கள் இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் என்கிறது, சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான யுனெஸ்கோவின் அறிக்கை. அதில் வெளி மாநிலங்களுக்குச் சென்று பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மட்டும் ஐந்து கோடி. உள்நாட்டுப் போர், இன, மத, கலவரம், அரசியல் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முக்கியமான இடம் உண்டு.

மோடியின் வேண்டுகோள்

“வெளியில் செல்லாதீர்கள் வீட்டிலேயே இருங்கள்… பயணத்தைத் தவிர்த்து தாங்கள் வசிக்கின்ற இடங்களிலே தங்கிக் கொள்ளுங்கள்” என அறிவிப்பு விடுத்தார் பிரதமர் மோடி. அவரின் நோக்கம் நல்லதுதான். ஆனால், டெல்லியில் தாங்கள் பணிபுரிந்த நிறுவனத்தாரால், தங்கியிருந்த இடத்தின் உரிமையாளர்களால் கைவிடப்பட்டு, வீடில்லாமல் ரோட்டில் வாழ்ந்து, காவல்துறையின் லத்தி அடிக்குப் பின் ஊருக்கு நடக்கத் தொடங்கிய மக்கள் ஏராளம். நீங்கள் தொலைக்காட்சியில், சமூக வலைதளத்தில் தெரிவித்த கருத்துகள் போய்ச்சேராத, சேரவும் வாய்ப்பில்லாத வகையில் வாழும் மக்கள் ஏராளம்.

“இடம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” என இரண்டு நாள்களுக்குப் பின் மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு வருகிறது. “பள்ளிகளில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படும்” என மூன்று நாள்களுக்குப் பின் அறிவிக்கிறது டெல்லி அரசு. இது போன்ற ஏற்பாடுகளை எல்லாம் செய்துவிட்டல்லவா ஊரடங்கு உத்தரவை அறிவித்திருக்க வேண்டும். வாழும் இடத்திலேயே தங்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்து வாழும் செல்வச் செழிப்பு மிக்க நாடா நம் இந்தியா. இல்லை, அரசின் அறிவிப்புகளைப் பார்த்து, அரசுக்கு கோரிக்கை வைத்து தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் மத்தியதர மக்கள் மட்டும் வாழும் நாடா நம் நாடு. இல்லையே, தினம், தினம் கூலி வேலை பார்த்தால்தான் அன்றாடச் சோறு என வாழ்ந்து வரும் மக்கள்தானே ஏராளம். மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகள் மக்களைப் போய்ச் சேரும் காலம் எப்போது, அதுவரை அம்மக்கள் தங்களின் பசியை எப்படிப் போக்கிக்கொள்வார்கள். தங்களின் உயிரை எப்படித் தற்காத்துக்கொள்வார்கள்.

அவர்களுக்கான முன்னேற்பாடுகளை எல்லாம் செய்துவிட்டுத்தானே ஊரங்கு உத்தரவை அறிவித்திருக்க வேண்டும். “கொரோனா வந்து செத்தாலும் பரவாயில்லை பசியால் சாகமாட்டோம், சொந்த ஊருக்குப் போனால் பசியில் இருந்து தப்பித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது” என்கிற நம்பிக்கையால்தானே அவர்களின் சொந்த ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். `ஒரே நாடு’ என்கிற பெயரில் பல திட்டங்களைக் கொண்டு வர முடிந்த இந்த அரசால் ஒரே நாட்டில், சில நூறு கிலோமீட்டர் இடைவெளியில் ஒரு இந்தியனின் வாழ்வை உறுதி செய்யமுடியவில்லை. வெளிநாடுகளில் மாட்டிக்கொண்டவர்களைக் கூட்டிவர ஏர் இந்தியா பறக்கிறது. டெல்லியில் மாட்டிக்கொண்ட பிற மாநில மக்களை அழைத்துவர பேருந்து வரவே சில நாள்கள் ஆகின்றன. அதுவும் செய்திகளில் அம்மக்கள் பசியோடும், பிதுங்கிய விழிகளோடும், தோள்களில் குழந்தைகளோடும் கால் ஓய நடந்துவரும் காட்சிகள் வீடியோக்களாக சமூக வலைதளங்களில், தொலைக்காட்சிகளில் வலம்வர ஆரம்பித்ததும்தானே, இப்படி ஒரு பிரச்னை இருப்பது தெரிந்தது.

அடுத்த வேளை சோற்றுக்கு அடுத்த மணி நேர உழைப்பை நம்பியிருக்கும் அம்மக்களிடம் பேருந்துக்குக் கட்டணம் கேட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இவர்களில் சிலர் நடையில் களைத்துப் போய் சரியான உணவு இல்லாமல் இறந்தே போன செய்திகள் நம் இதயத்தை உறைய வைக்கின்றன. “நாடு தழுவிய ஊரடங்கினால் ஏற்பட்டிருக்கக்கூடிய சிரமங்களுக்கு என்னை மன்னித்து விடுங்கள்” என்று பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்டுள்ளார்.

மோடி மன்னிப்பு

இந்த மன்னிப்பும் கூட வீட்டிலிருந்து அத்தியாவசியப் பொருள்கள் வாங்கச் சிரமப்படும் மத்தியதர, பிசினெஸ் மீட்டிங்குகளில் பங்குபெற இயலாமல் தவித்துக்கொண்டிருக்கு உயர் மத்தியதர, உயர் வகுப்பு மக்களின் காதுகளுக்குத்தான் போய்ச் சேர்ந்திருக்கும் பிரதமர் அவர்களே. இன்னும் தன் சொந்த ஊருக்குக் கால் நடையாகப் போய்க்கொண்டிருக்கும் என் இந்தியச் சகோதரனுக்கு போய்ச்சேர வாய்ப்பில்லை . அப்படியே சேர்ந்தாலும் பசியின் கோரத்தால் காற்றடைத்துப் போன அவன் செவிகளுக்குள் இது சென்றடையுமா என்றும் தெரியவில்லை. தலைநகரில் தொடங்கிய அவன் நடையிடையேயான மூச்சிரைப்பு தெற்குக் கோடியில் எங்கள் இதயத்தைத் துளைக்கிறது… அவன் நிறுத்திவிட்டானோ என்று தெரியவில்லை இன்னும் எங்களின் கால்கள் வலிக்கிறது டெல்லியின் ஆட்சியாளர்களே.

Also Read: நாடு தழுவிய ஊரடங்கிற்கு இந்தியா தயாராக இருந்ததா?

இதோடு இந்தத் துயரம் முடிந்துவிடுமா… “இந்த நீண்ட நடையின் மூலமாகவும் பயத்தின் காரணமாகவும் உடல் ரீதியாக மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பும் இருக்கிறது. அதன் மூலமாகவே உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து நோய்த்தொற்று எளிதாகத் தாக்கவும் வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள் மருத்துவர்கள். அதுமட்டுமா, “திடீரென்று ஒரு சூழல் மாறும்போது மக்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் டிஸ்ஆர்டர் (adjustment disorder) எனும் பாதிப்பு உண்டாகும். இதுபோன்ற விஷயங்களை அணுகும்போது படிப்படியாகத்தான் (Gradual desensidation) செய்ய வேண்டும். மக்களுக்குப் பயத்தைப் போக்கி மனதளவில் தயார்செய்த பின்புதான் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். மக்களை சோதனைப் (Experiment) பொருளாக நினைத்து தடாலடியாக ஒரு நிர்பந்தத்தைத் திணிப்பதைத் தவிர்க்கவேண்டும்” என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

ஆனால், இவற்றையெல்லாம் இந்த ஆட்சியாளர்கள் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. இந்தியாவின் மிக உயர்ந்த வளமான மனித வளத்தை அடியோடு சிதைக்கும் செயலே, இது போன்ற உடனடி உத்தரவுகள். குறைந்தபட்சம் இனியாவது, வெகுதூரம் நடந்துவந்த இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளையும், மனநல ஆலோசனைகளையும் இந்த அரசு நிச்சயம் வழங்க வேண்டும்.

நடக்கும் மூதாட்டி

கொரோனா எனும் கொடிய வைரஸ் எதை வெளிக்கொண்டு வந்ததோ இல்லை, உயர்தர வர்க்கத்தைச் சார்ந்தும், மத்தியதர வர்க்கத்தைச் சமாதானப்படுத்தி மட்டும்தான் இந்த அரசு இயந்திரம் செயல்படுகிறது என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டது. ஏனென்றால் அவர்கள்தான் அரசை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள். அதனால் அவர்களைச் சமாதானப்படுத்தினாலே போதும். அடித்தட்டு மக்களுக்காக அவர்களாலும் பேசமுடியாது, அவர்களுக்காகப் பேசவும் யாரும் இல்லை.

இந்த வைரஸ் இன, மத, வர்க்க பேதமில்லாமல் அனைவருக்கும் பரவக்கூடியதுதான். ஆனால் நீங்கள் வழங்கிய `கைகளைக் கழுவுங்கள், வீட்டை விட்டு வெளியே வராதீர்கள், 21 நாள்கள் வேலைக்கே செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடங்கள்’ என்பன போன்ற அறிவுரைகளில் தொடங்கி, `எமெர்ஜென்சிக்கு விண்ணப்பித்து வெளியூர்களுக்கு, வெளிமாநிலங்களுக்குக்கூடச் செல்லலாம்’ என நீங்கள் கடைசியாக வழங்கிய ஆலோசனைகள் வரை இந்தியத் தாயின் ஒரு பாதிப் பிள்ளைகளுக்கானதாக மட்டுமே இருக்கின்றன.

உங்கள் அறிவிப்புகள், ஆலோசனைகள் மட்டுமல்ல உங்களின் மன்னிப்பும் சமாதானமும் கூட இந்தியத் தாயின் கடைநிலைப் பிள்ளைகளான அன்றாடக் கூலிகளுக்கு குறிப்பாக பிழைப்புக்காக இடம் பெயர்ந்து வாழும் கூலித் தொழிலாளர்களுக்கு போய்ச்சேரவில்லை ஆட்சியாளர்களே!

1947-ல், 1995-ல் மதத்தால், இனத்தால் நிகழ்ந்தது போல 2020-ல் இப்படியொரு மக்கள் இருப்பதையே கருத்தில் கொள்ளாத (மறந்த) வர்க்க பாகுபாட்டால் நிகழ்ந்த துயரம் என்றே வரலாறு இதைப் பதிவு செய்யும்…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.