தனது முறையீட்டு விண்ணப்பத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி என ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஆகவே மாநிலம் விட்டு வேறு மாநிலத்திற்குப் பயணம் செய்ய முடியாத நிலைமை நீடிக்கிறது. சொல்லப்போனால் அனைத்து மாநில எல்லைகளும் உஷார் நிலையில் மூடப்பட்டுள்ளன. எனவே போக்குவரத்து இன்றி மக்கள் முடங்கிப்போய் உள்ளனர். கொரோனா ஏற்படுத்தியுள்ள அச்சத்தால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியாகியுள்ளது. இதுவரை 50 பேராக இருந்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா சமூக பரவல் தொடங்கிவிட்டதா?: சுகாதாரத்துறை விளக்கம்
இதனிடையே தெலுங்கு நடிகரும், ஜன சேனா நிறுவனருமான பவன் கல்யாண், தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோளை வைத்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில் “ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோமபேர்ரா மண்டலத்தின் கோலகண்டி கிராமத்திலிருந்து மீன்பிடிக்கத் தமிழக கடற்கரை எல்லைக்குச் சென்ற சுமார் 99 மீனவர்கள், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாகச் சென்னை துறைமுகத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
அவர்கள் போதிய தங்கும் வசதி மற்றும் உணவு இன்றி மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களது குடும்பத்தார் இது குறித்துச் செய்வதறியாது தவித்து வருகிறார்கள். ஜன சேனா தொண்டர்கள் மூலம் இந்த விஷயத்தை அறிந்த நான் மிகவும் வேதனையடைந்தேன். எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விஷயம் தெரிந்த உடனே பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து அவர்களுக்குப் போதிய உணவு மற்றும் உறைவிடம் வழங்கி, அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
144 தடையை மீறிய வாகன ஓட்டிகள்: இதுவரை ரூ.10 லட்சம் அபராதம் வசூல்!
இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் “இது குறித்து உடனடியாக செயல்படுமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவித்துள்ளேன். நாங்கள் அவர்களைக் கவனித்துக்கொள்வோம்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில், தனது முறையீட்டின் மீது உடனடி நடவடிக்கை எடுத்தமைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி என பவன் கல்யான் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM