கொரோனா பீதியால் வெளிமாநிலத்திலிருந்து சொந்த கிராமத்திற்குத் திரும்பியவர்கள் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பீகாரில் ஒரு தொற்றுநோயாக மட்டுமல்லாமல், அது வெறுப்பாகவும் மாறி வருகிறது. நேற்று மாலை இந்த மாநிலத்திலுள்ள சீதாமாரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம், கொரோனா அச்சம் எவ்வாறு மக்களிடையே வெறுப்பை விதைக்கத் தொடங்கியுள்ளது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.

ரன்னிசைத்பூர் பகுதியில் உள்ள மாதெளல் கிராமத்தில் வசித்தவர் பாப்லு. இவர் பிற மாநிலங்களிலிருந்து இப்பகுதிக்கு மக்கள் புலம்பெயர்ந்து வருவது குறித்து சுகாதார அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதனால் வெறுப்படைந்த மக்களால் அவர் கொல்லப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தனது கிராமத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் பாப்லு ஈடுபட்டுள்ளார். அதற்காக அவர் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார். ஆனால் அது அவரது உயிரைப் பறிக்க நேரிடும் என்று அவருக்குத் தெரியாமல் போய்விட்டது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த புலம்பெயர்ந்த இரண்டு தொழிலாளர்கள் இந்த வார தொடக்கத்தில் மாதெளல் கிராமத்தில் உள்ள தங்கள் சொந்த வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். ஏற்கெனவே மாநில அரசு வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, புலம்பெயர்ந்த வரும் தொழிலாளர்களின் வருகை குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு பாப்லு தெரிவித்துள்ளார்.
உடனே கொரோனா நோய்த் தொற்று சோதனைக்கான மாதிரிகளைச் சேகரிக்கும் பொருட்டு, சுகாதாரத் துறை அதிகாரிகள், ஊர் திரும்பிய இரண்டு தொழிலாளர்களின் வீட்டுக் கதவுகளைப் போய்த் தட்டியுள்ளனர். அந்த மருத்துவ நிபுணர்களின் வருகை அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தங்கள் ரத்த மாதிரிகளை அதிகாரிகளுக்குக் கொடுத்துவிட்டு, கோபத்துடன் ஐந்து பேர்களுடன் பாப்லுவின் வீட்டிற்கு விரைந்துள்ளனர். அப்போது அவர்கள் சண்டையில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவிலிருந்து நாங்கள் வந்தது குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு ஏன் தகவல் தெரிவித்தாய் என மிரட்டியுள்ளனர். இந்த மோதலில் ஏழு பேர் கொண்ட குழு பாப்லுவை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.


உடனே அந்த ஊர் கிராமவாசி இந்த மரணம் குறித்து உள்ளூர் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். அவர்கள் வந்த பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM