நம் பாரத தேசத்தில் விழாக்கள் மற்றும் பண்டிகைகளைப் பருவ காலத்தின் அடிப்படையிலேயே உருவாக்கிக் கொண்டாடிவந்தனர். 

பொதுவாக, காலத்தை அளக்கும் அளவுகோல்களாக ஐந்தினை நம் சாஸ்திரங்கள் வகுத்துள்ளன. வருடம், அயனம், ருது, பட்சம், நாள் என்னும் இந்த ஐந்தில் ருது என்பது ஆறு வகைப்படும். ஒரு ருது இரண்டு மாதங்களின் சேர்க்கை. வசந்த ருது, கிரீஷ்ம ருது,  வர்ஷ ருது, சரத் ருது, ஹேமந்த ருது, சிசிர ருது என்று ஆறு ருதுக்கள். ருதுக்கள் சைத்ர மாதத்தில்தான் தொடங்குகின்றன. சைத்ர மாதம் என்பது சந்தரனை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுக் கணக்கு. இந்த ஆண்டின் தொடக்கமே யுகாதி. கீதையில் கிருஷ்ணன் நான் ருதுக்களில் வசந்த ருதுவாக இருக்கிறேன் என்று சொல்கிறான். காரணம் அந்த அளவிற்கு அழகு நிறைந்த, மனதுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் தரும் காலம் வசந்த ருது என்னும் வசந்தகாலம்.

லலிதாம்பிகை

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஒன்பதுநாள்களும் அம்பிகை வழிபாட்டுக்கு உகந்தவை. இவை வசந்த நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. சாக்தம் என்னும் அம்பிகையை வழிபடும் முறையில் பன்னிரு மாதங்களிலும் பன்னிரு நவராத்திரிகள் உண்டு. இன்று அவை பின்பற்றப்படுவதில்லை. நான்கே நான்கு நவராத்திரிகளே பிரதானமாகக் கருதப்படுகின்றன.

பொதுவாக அனைவரும் கோலாகலமாகக் கொண்டாடும் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி சரத் நவராத்திரி என்னும் சாரதா நவராத்திரி. இந்த நவராத்திரியின்போதுதான் அன்னையை துர்கா, லட்சுமி, சரஸ்வதியின் வடிவமாகப் போற்றி கொலுவைத்து வழிபடும் வழக்கம் நாடுமுழுவதும் உள்ளது.

முழுமுதல் தேவி லலிதா பரமேஸ்வரி

வசந்த நவராத்திரியின் சிறப்பு லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவதே ஆகும். அனைத்து உயிர்களுக்கும் முதலான சக்தியே லலிதா பரமேஸ்வரி. இந்த அன்னையிலிருந்தே சகலமும் உண்டானது என்றும் அன்னையின் இந்த அருள் கோலத்தை வழிபட அனைத்து வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வசந்த நவராத்திரியின் ஒன்பது நாள்களும் லலிதா பரமேஸ்வரியின் திருவுருவப்படத்தை வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பு மிக்கது.

லலிதாம்பிகை

பிரமாண்ட புராணத்தில் லலிதா சகஸ்ரநாமமும் லலிதோபாக்யானம் என்னும் லலிதையின் சரிதமும் காணக்கிடைக்கின்றன. உலகில் அனைத்து உயிர்களும் தங்களுக்குத் துன்பம் நேர்கிறபோது தம் தாயையே முதலில் நாடும். உடல் ரீதியான தாய் நமக்கு ஆறுதல் வழங்குவாள். ஆனால் இந்த உலகில் அனைத்து ஜீவன்களுக்கும் ஆதித் தாயாக விளங்குபவள் லலிதா பரமேஸ்வரி.  அவளை நாடி அவள் அருளை வேண்டினால் அனைத்து வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.  ஒருமுறை அன்னையின் சந்நிதியில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சரண்புகுந்தனர். இவர்களைக் கண்ட அன்னை தாயுள்ளத்தோடு இங்குள்ளவர்க்கு மட்டுமல்லாமல் அகிலத்தில் உள்ள அனைவர்க்கும் அவர்களின் குறைகளைத் தீர்க்கக்கூடிய ஸ்தோத்திரம் ஒன்றைச் செய்யுங்கள் என்று தன் வடிவான வாக் தேவியரிடம் கூறினாள். அவர்கள் அன்னை லலிதா பரமேஸ்வரியைப் போற்றி அருளிய ஸ்லோகமே லலிதா சகஸ்ரநாமம்.

அகத்தியரால் நமக்குக் கிடைத்த அற்புதம்

அகத்திய ரிஷி ஒரு முறை தவம் நீங்கி பூலோகமெங்கும் சுற்றி வந்தபோது மனிதர்கள் சுயநலம் மிகுந்தவர்களாவும் அதீதப் புலனிச்சை உடையவர்களாகவும் மது போன்ற வஸ்துக்களால் மதி இழந்தவர்களாகவும் இருக்கக் கண்டு மனம் வருந்தினார். இப்படி வாழ்வில் முக்தி என்பது குறித்த நினைவே இல்லாமல் வாழும் மனிதர்கள் முக்தி அடைவது எப்படி என்று நினைத்தபோது அவர் மனம் வருந்தியது. அப்போது அவர் திருமீயச்சூர் என்னும் திருத்தலத்தில் இருந்தார். அங்கு அவர் முன்பாகத் தோன்றிய ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஆசி வழங்கி லலிதா சகஸ்ரநாமத்தையும் உபதேசித்தார். இதைப் பாராயணம் செய்பவர்கள், தங்கள் தாழ்மையிலிருந்து உயர்வடைவர் என்றார். வறுமை நீங்கி செல்வ வளம் சேரும்; இந்த உலகில் அனுமதிக்கப்பட்ட அனைத்து இன்பங்களும் கிடைக்கும்; அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் கிடைப்பதுடன் பிறவிப்பிணி நீங்கி முக்தியும் கிடைக்கும் என்று அருளினார்.

லலிதாம்பிகை

இத்தகைய சிறப்புகள் உடைய அன்னையின் திருவடிவமான லலிதா பரமேஸ்வரி வடிவத்தைப் போற்ற மிகவும் உகந்த காலமாக வசந்த நவராத்திரியை வகுத்திருக்கிறார்கள். இந்த வழிபாட்டில் மிக முக்கியமான நாள்கள், சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய கடைசி மூன்று நாள்கள்.

வளம் சேர்க்கும் லலிதாம்பிகையை வீட்டிலே வழிபட…

அன்னை லலிதாம்பிகையின் அல்லது ஏதேனும் ஒரு அம்பிகையின் படம் இருந்தால்  அதற்கு பூஜை செய்யலாம். அல்லது ஒரு கும்பம் வைத்து அதில் அன்னையை ஆவாஹனம் செய்து வழிபடலாம். 

தினமும் குளித்து முடித்து பூஜை அறையைத் தூய்மை செய்து அம்பிகையின் படத்துக்கு பூ சாத்தி லலிதா சகஸ்ரநாமம் படிக்க வேண்டும். ஒவ்வொரு ருதுக்காலத்துக்கும் தனித்துவமான மலர்கள் உண்டு. மல்லிகை, முல்லை ஆகியவையே வசந்த ருதுக்காலத்துக்கான மலர்கள். முடிந்தால் இந்த மலர்களால் அலங்கரித்து அர்ச்சனையும் செய்யலாம். லலிதா சகஸ்ரநாமம் படிக்கும்போது ஒவ்வொரு நாமத்துக்கும் குங்குமம் கொண்டு அன்னையை அர்ச்சிப்பது சிறப்பானதாகும்.

லலிதாம்பிகை

பாராயணத்துக்குப் பின் நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்தக் காலத்துக்கான பழம் பலாப்பழம் மற்றும் மாம்பழம். இவை கிடைத்தால் விசேஷம். இல்லையென்றால் கிடைக்கும் ஏதேனும் ஒரு பழத்தை நிவேதனம் செய்யலாம். அன்னைக்கு உகந்தது பாயாசம். பருப்புப் பாயாசம் செய்து நிவேதனம் செய்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கை. நீர் மோர், பானகம் ஆகியனவும் நிவேதனம் செய்யலாம்.

இன்று அனைவரும் வீட்டுக்குள் முடங்கியிருக்கிறோம். இந்த நிலையில் யாருக்கும் பிரசாதத்தைப் பகிர்ந்தளிக்கக்கூட முடியாதபடிக்கு முடங்கியிருக்கிறோம். இந்த அவல நிலை விரைவில் மாற அன்னையை அனைவரும் மனதாரப் பிரார்த்திப்போம். அன்னை நம்மை அனைத்துத் தீங்குகளில் இருந்தும் விலக்கிக் காப்பாள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.