ம்மா நேற்று மீண்டும் கனவில் வந்தாள். பனி மூட்டத்தை ஊடறுத்துப் பாயும் மஞ்சள் வெயில்போல முகம் எங்கும் ஒளி கூடி இருந்தாள். கனவில் அவள் நின்ற இடம், நாங்கள் முன்பு வசித்த கிராமத்துச் சிறு வீடு. அவள் முன்பு நான் சிறுவனாக நின்று இருந்தேனா? வயதாகி இருந்தேனா? தெரியவில்லை. எப்படி இருந்து என்ன? அம்மாக்களின் கண்களுக்கு எத்தனை வயதானாலும் பிள்ளைகள், குழந்தைகள்தானே?

இப்போது எல்லாம் அம்மா அடிக்கடி கனவில் வருகிறாள். வழக்கம்போல் இந்தக் கனவிலும் அவள் ஏதும் பேசவில்லை. ஒரே புன்னகை. ஒரே ஒரு புன்னகை. தனித்த வனத்தில் காற்றை எதிர்கொள்ளும் ஒற்றைப் பூவின் புன்னகைபோல; வார்த்தைகளையும் வாக்கியங்களை யும் கடந்து மௌனமே மோனம் என்று உணர்த்துவதைப்போல; கோயில் பிராகாரங்களில் வெளவால்களின் கிறீச்சிடல்களைத் தாண்டி, கருவறையில் கிடந்தபடி பிரபஞ்சத்தை உற்று நோக்கும் கடவுளின் புன்னகையைப்போல; முடிவுறாமல் புன்னகைத்துக்கொண்டே இருந்தாள்.

அம்மாவை நோக்கி நான் நடந்து, அவள் கைகளைப் பிடிக்க எத்தனிக்கும்போது, கனவு கலைந்து கண் விழித்தேன். உறக்கம் வரவில்லை. செல்போன் தேடி மணி பார்த்தேன். 3.40. விடிவதற்கு நேரம் இருக்கிறது. பக்கத்தில் மனைவியும் மகனும் உறங்கிக்கொண்டு இருந்தார்கள்.

அணிலாடும் முன்றில்! – 1

ஒரு சிகரெட் பற்றவைத்தபடி வாசலுக்கு வந்தேன்.

`ஆலம் விழுதுகள்போல் உறவு ஆயிரம் இருந்தும் என்ன? வேரென நீ இருந்தால்… அதில் நான் வீழ்ந்துவிடாதிருப்பேன்…’

எதிர் ஃப்ளாட் வாட்ச்மேன் எஃப்.எம்மை அலறவிட்டு விட்டு, காதுகளில் மஃப்ளர் சுற்றி உறக்கத்தில்கிடந்தார்.

அம்மா என் நினைவுகளில் நுழைந்தபடி அலைக்கழித்துக்கொண்டு இருந்தாள். அம்மா… உன்னை முதன்முதலில் நான் எப்போது சந்தித்தேன்?

அறிமுகமாகி… பேசிப் பழகி… விடைபெற்ற பின் முகம் மறக்கிற ரயில் சிநேகமாய்த்தான் இருந்தோம்… உனக்கு நானும், எனக்கு நீயும்!

உனக்கு நான் அறிமுகமாகும் முன்பே, எனக்கு நீ அறிமுகமாகிவிட்டாய். உன் முதல் தரிசனம் எனக்கு அக தரிசனமாகத்தான் இருந்தது.

திரவங்களின் கதகதப்பில்… நடக்கையில் புலப்படும் மெல்லிய அதிர்வுகளில்… உடலை நனைக்கும் சிவப்பு நதியில்… பனிக்குடத் திடலின் பாசப் பிடிப்பில்… உன் முதல் தரிசனம் எனக்கு உள்முகத் தரிசனமாகத்தான் இருந்தது. ஆனால், அம்மா… அப்போது என் பார்வை தொப்புள் கொடியில் இருந்தது.

சந்தனமாக மேடிட்ட வயிற்றில் விரல்களால் வருடியபோதும், அடிக்கடி என் வளர்ச்சியை அசைவுகளில் உணர்ந்தபோதும், உன் முதல் தொடுதல் எனக்கு வாய்த்தது. பூ மென்மை வயிற்றில் மெத்தென்று உதைத்தேனே… அம்மா… அப்போது என் பார்வை பாதத்தில் இருந்தது.

உன்னுடைய மிச்சமாக, வெளி உலகில் பிறந்தபோது, பிடிபடாத ஒலிகளுடன், நோய்த் துகள் படிந்த மருத்துவமனைச் சூழலில்… என்னை எடுத்து உன் மடியில் சாய்த்துக்கொண்டாயே அம்மா… அப்போது என் பார்வை உன் சேலையின் கவுச்சி வாசனையில் இருந்தது.

எல்.கே.ஜி. வகுப்புக்கு எனக்குப் பிடிக்காத கீரை சாதத்தை… நீ பள்ளிக்குக் கட்டித் தர, சாயங்காலம் ஆனதும் சண்டை போடும் ஆவேசத்தில் வீட்டுக்கு வருகிறேன். ஏன் இத்தனை கும்பல் நம் வீட்டில்? புத்தகச் சுமையுடன் நடையில் வேகம். என் பிரிய அம்மா… பாயில் படுக்கும் நீ, பலகையில் படுத்து இருந்தாய். உலகைப்பற்றிய என் பார்வை திறந்தபோது… உன் பார்வை மூடியிருந்தது. அம்மா… அப்போது என் பார்வை சோகத்தில் இருந்தது.

உன்னை உலுக்கிய என்னைத் தூக்கியது யார்? எவர்? ஒன்றும் புரியாமல் குரல்களுக்கு மத்தியில் குலுங்கிக் குலுங்கி அழுதேன் நான். பக்கத்து வீட்டு மாமி ஆறுதல் சொல்லி, கரும்பு தின்னத் தந்தார்கள். ஆனால், அம்மா… அதற்கு அப்புறம் நான் தின்ற கரும்புகள் எல்லாம் கசக்கவே செய்தன.

நிலவை யாராவது முழுவதுமாகப் பார்த்தது உண்டா? சிவப்பையும் நீலத்தையும் குழைத்துத் தகதகக்கும் தீபத்தின் தரிசனம் யாருக்காவது முழு நிறத்துடன் கிடைத்தது உண்டா?

ஊருக்கு ஊர் நிறம் மாறும் தண்ணீரின் உண்மையான சுவைதான் என்ன?

அம்மா… பிடிக்க வரும் சிறுவனின் கையில் வண்ணத்தைப் பதித்து வழுக்கிச் சென்ற வண்ணத்துப் பூச்சியாகத்தான் உன்னுடனான எனது நாட்களும்.

ஞாபக அடுக்குகளின் ஆழ்கிடங்கில் உனக்கும் எனக்குமான சம்பவங்கள் ஒன்றிரண்டே மிச்சம் உள்ளன. உன் முகம் க்ளைடாஸ்கோப்பின் வளையல் சித்திரமாக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாய்!

உன் ஜலதோஷம் நீங்க… கஷாயத்துக்காக நான் தும்பைப் பூ தேடியதும்; `தவளையை அடிக்காதடா… உங்க அம்மாவுக்குத் தலை வலிக்கும்’ என எவனோ சொன்னது கேட்டுப் பயந்து, நான் அடிக்காமல் நின்றதும்; `ஆலம் பழம் தின்னுட்டியே… பைத்தியம் பிடிக்கப் போவுது’ நண்பர்கள் பயமுறுத்த… ஓடி வந்து உன் மடியில் பாதுகாப்பாகப் படுத்ததும்… இவைதானே அம்மா, அறியாத ஐந்து வயதில் எனக்கே எனக்காக நீ வைத்துவிட்டுப் போன கொஞ்சூண்டு நினைவுகள்.

அழுது புலம்பி, நான் அலறிய ராத்திரிகளில் நிலா இருந்தது, சோறும் இருந்தது, ஊட்டத்தான் நீ இல்லை. கடைசியாக கூரையில் நீ தலை வாரிச் செருகிய சுருட்டை முடியை வைத்திருக்கிறேன் பத்திரமாக. கடைசியாக நீ உடுத்தி கழற்றிய சேலை இப்போதும் இருக்கிறது, என் மனதின் குளிர் போக்க.

சமீபத்தில் ஆங்கிலத்தில் ஒரு கவிதை படித்தேன். நான்ஸி வில்லியர்ட் என்கிற பெண் கவிஞர் எழுதிய அந்தக் கவிதை…

அணிலாடும் முன்றில்! – அம்மா

வான்கூவர் நகரத்தில்

ரயில் நிலையம் ஒன்றுண்டு.

மரக் கட்டைகளால் ஆன

அதன் நடைபாதையில்

முன்பொரு முறை என் சிறு வயதில்

அம்மாவும் நானும்

ரயிலுக்காகக் காத்திருந்தோம்.

அங்கு வைத்துதான்

அம்மாவின் தம்பி இறந்துபோனதை

யாரோ வந்து

அம்மாவிடம் சொன்னார்கள்.

கன்னங்களைத் தாண்டி

கால் விரல்களில்

கண்ணீர்த் துளிகள் விழுந்த பிறகும்

அதிர்ச்சியுடன் அம்மா

அந்த நடைபாதையிலேயே

நின்றுகொண்டிருந்தாள்.

உலகம் என்பது அணுக்களால் ஆனது

நாம் ஒரு மேஜையைத் தொடுகிறபோது

மேஜையும் நம்மைத் தொடுகிறது

என்பது உண்மையானால்

அன்று அந்த நடைபாதையில்

அம்மாவின் அணுக்களும்

கலந்திருக்கும்.

நான் போய் அந்த நடைபாதையில்

அம்மாவுடன் நின்ற அதே இடத்தில்

நிற்கப்போகிறேன்.

நீண்ட நேரம்…

மிக நீண்ட நேரம்…

கன்னங்களைத் தாண்டி

கால் விரல்களில்

கண்ணீர்த் துளிகள் விழுந்த பிறகும்…’

கவிதையை மொழிபெயர்த்த பிறகு கன்னங்களைத் தாண்டி என் கை விரல்களில் கண்ணீர்த் துளிகள் விழுந்து இருந்தன.

அம்மா நீ நிரந்தரமானவள். உனக்கு அழிவு இல்லை. ஆகாயம் நீ. அதில் சுற்றிச் சுடரும் சூரியன் நீ. சந்திரனும் நீயே. நட்சத்திரங்களின் நின்று ஒளிரும் பிரகாசத்தில் இருந்து புலப்படுவது உன் கண்கள் அன்றி வேறு என்ன?

நீயே முகிலாகவும், முகில் தூவும் மழையாகவும், மழை நனையும் நிலமாகவும் மலர்ந்துகொண்டு இருக்கிறாய். நதியும் நீ. கரையும் நீ. கரை தாண்டி விரியும் காட்சியும் நீ.

சிறுபிள்ளை உடனிருக்க, கார்த்திகை மாதத்தின் அந்திக் கருக்கலில் திண்ணை எங்கும் அகல் விளக்கு ஏற்றுபவளிடமும்; ஆலமரக் கிளையில் பழஞ் சேலையைத் தூளியாக்கி, கைக்குழந்தையைக் கிடத்திவிட்டு, அறுவடை வயலில் வேலை செய்தபடி நொடிக்கொரு தடவை திரும்பிப் பார்ப்பவளிடமும்; அபார்ட்மென்ட் பூங்காவின் சிமென்ட் பெஞ்ச்சில் காத்து இருக்கும் மகனை அலுவலகம் முடிந்து வந்து சட்டைப் புழுதியோடு அள்ளி அணைப்பவளிடமும்; பள்ளியின் மெயின் கேட் மூடிவிடக் கூடாதே என்கிற பதை பதைப்பில், மாநகரத்து சிக்னலில் இடுப்பில் யூனிஃபார்ம் குழந்தையோடு கடப்பவளிடமும்; புதைக்கிற மகன்களை எல்லாம் விதைக்கிற விதைகளாக எண்ணிக்கொண்டு இருக்கும் ஈழத்துத் தாய்களிடமும் நான் காண்பது உன் முகம்தானே தாயே?

மாக்சிம் கார்க்கியின் `தாய்’ தொடங்கி, மார்க் வெஸ்ஸின் `எலந்த்ரா’ வரை; பட்டினத்தார் மூட்டிய தீயில் தொடங்கி, புதுமைப்பித்தனின் `சிற்றன்னை’ வரை; கலையிலும் இலக்கியத்திலும் நான் காணும் தரிசனங்கள் உன் அகம்தானே அன்னையே!

நீ எப்படி இறக்க முடியும்?

உன்னுள் கருவாகி, உனக்குள் உருவான சின்னஞ்சிறு செடி நான். மண்ணுள் நான் வீழ்ந்து, மெள்ள உதிரும் வரை என்னுள்… என்னுள்… என்னுள்… நீ வாழ்வாய்!

– அணிலாடும்…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.