உலகம் முழுவதும் பரவி மனிதர்களின் உயிர்களைக் குடித்து வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படல்லை. இந்தத் தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களின் பார்வை பிளாஸ்மா சிகிச்சையின் பக்கம் திரும்பியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்த பிளாஸ்மாக்களைப் பிரித்து அவற்றைப் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்குச் செலுத்தி குணப்படுத்துவதற்கான பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் – அமெரிக்கா

தொற்றுநோய் சிகிச்சைக்காக பிளாஸ்மாவைப் பயன்படுத்தும் நடைமுறை ஏற்கெனவே இருக்கிறது. பிளாஸ்மா திரவத்தை உறையச்செய்து, பாதுகாத்தால் ஒரு வருடம் வரையிலும் பயன்படுத்தலாம். ஏற்கெனவே தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவைப் பெற்று அதைத் தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கும் முறைதான் பிளாஸ்மா சிகிச்சை முறை”. குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவில் இருக்கும் இம்யுனோகுளோபின்கள், தொற்றுநோய் வைரஸுக்கு எதிராகப் போராடி வெற்றிபெற்று பலமடைந்திருக்கும். இந்த பிளாஸ்மாவை சிகிச்சை பெற்று வருபவர்களுக்குச் செலுத்தும்போது அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து குணமடைய வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

1918 ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலின்போதும் குணமடைந்தவர்களிடமிருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ரத்த மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அம்மை போன்ற தொற்றுநோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு முன்னர் இதுபோன்ற சிகிச்சை முறையே நடைமுறையில் இருந்தது. சார்ஸ், மெர்ஸ் வைரஸ் தாக்கத்தின் போதும் எபோலா தொற்றின்போதும் இந்த முறை சோதிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.

கொரோனா வைரஸ் – அமெரிக்கா

Also Read: தடுப்பூசி, மருந்து, தாமதம்… கொரோனா சந்தேகங்களும் விளக்கங்களும்! #LongRead #FightCovid-19

அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா பிளாஸ்மா சிகிச்சையைப் பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளது. இந்த சிகிச்சைமுறையைப் பரிசோதனை செய்ய அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நோய் எதிர்ப்பு மருத்துவ நிபுணர் அர்த்ரோ காசாடேவால் பேசுகையில், “இந்தச் சிகிச்சை முறையை அமல்படுத்துவதற்கு எந்த ஆய்வும் தேவை இல்லை. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடமிருந்து ரத்தம் பெற்று, அதைப் பரிசோதனை செய்து தொற்றுநோய் ஆபத்து இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் அந்த ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்து சிகிச்சை முறைக்குப் பயன்படுத்த வேண்டும். இந்த சிகிச்சை முறை பயனளித்த வரலாறு நம்மிடம் இருக்கிறது” என்கிறார்.

கொரோனா வைரஸ்

மேலும் ”முந்தைய காலகட்டங்களில் நடந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டி இது போன்ற சிகிச்சை முறையைப் பரிசோதனை செய்யலாம் என அமெரிக்காவின் பல்வேறு சுகாதார நிறுவனங்கள் ஆலோசனை தெரிவித்துள்ளன. ஆனால், பிளாஸ்மாவை தானமாகப் பெற்ற பிறகு கடுமையான நுரையீரல் பாதிப்பு அல்லது ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படலாம் என்பதால் கவனம் அவசியம் என எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது.” என்றார்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நியூயார்க் நகரில் சோதனை மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் அவசர நிலைமைக்கான உயர்நிலை வல்லுநர் மைக் ரியான் கூறுகையில், “கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளுக்கு பிளாஸ்மா மாற்று சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரியான நேரத்தில் மிகவும் கவனத்துடன் இந்த சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும்” என்கிறார்.

கொரோனா

நியூயார்க்கில் இந்தச் சோதனையில் இறங்கியுள்ள மவுன்ட் சினாய் மருத்துவமனையின் மூத்த டாக்டர் டேவிட் எல்.ரீச் பேசுகையில், ”இந்த சிகிச்சை முறையைப் பரிசோதிக்காமல் எந்த அளவு பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்வது விஞ்ஞானரீதியாக கடினமானது.

மிதமான நோய்த்தாக்கம் கொண்டவர்கள் மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை சோதனை முறையில் செயல்படுத்தப்படும். ஆனால், தீவிர நோய்த்தாக்கம் கொண்டவர்களுக்கு இதைப் பரிந்துரைக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.

கொரோனா

அமெரிக்காவில் நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பலரும் தங்களுடைய ரத்த பிளாஸ்மாக்களை தானமாகத் தர முன்வந்துள்ளனர். இது தொடர்பான முதல் கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் விரைவில் அமெரிக்காவில் பிளாஸ்மா சிகிச்சை அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.