கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையைத் தவிர எதற்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 90 பேர் சென்னையிலிருந்து இன்று நெல்லை வந்துள்ளனர். உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான இந்தக் குழுவினர் பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு வந்திருக்கும் பேரிடர் மீட்புக் குழுவினர், மூன்று குழுக்களாகப் பிரிந்து உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து நோய்த் தடுப்பு விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்வார்கள். ஊரடங்கு உத்தரவு காலம் முடியும் வரையிலும் அவர்கள் நெல்லையில் முகாமிட்டுப் பணியாற்றுவார்கள்.

இந்தக் குழுவினர் நெல்லையில் உள்ள காய்கறிச் சந்தைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று முகக் கவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளிவிட்டு நிற்க வேண்டும் என்பதை மக்களிடம் வலியுறுத்துவார்கள். நோய்த் தொற்று மற்றும் நோய் அறிகுறிகள் இருப்பவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணியிலும் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வெளியில் வருவதால் நோய்த் தொற்று பரவும் என்பதால் அவசியத் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் எனக் காவல்துறை ஏற்கெனவே எச்சரித்துள்ளது. ஆனால், அதையும் மீறி பொதுமக்கள் வெளியில் சுற்றுவது காவல்துறையினரைக் கவலையடைய வைத்திருக்கிறது.
Also Read: வெண்டிலேட்டர்கள் தட்டுப்பாடும் கொரோனா
தீவிரமும்! உலக நாடுகளுக்கு இன்னொரு சிக்கல்!
நெல்லை மாவட்டத்தில் அவசியம் இல்லாமல் சாலைகளில் சுற்றித் திரிந்த 340 பேர் மீது 240 வழக்குகளை போலீஸார் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து 149 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. `கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என நெல்லை மாவட்ட போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.