பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா அச்சத்தில் உலகம் உறைந்துபோய் நிற்கிறது. நாளுக்கு நாள், மணிக்கு மணி கொரோனா பாதிப்பும் நோயாளிகளின் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலகத்தின் வல்லரசு நாடுகளே நடுநடுங்கிப்போய் நிற்கின்றன. ஆனால், நமது மாண்புமிகு தமிழர் கூட்டத்தின் பெரும் பகுதி ஆபத்தின் தன்மை புரியாமல் அலட்சியம் காட்டி வருவதால் ஆபத்துக்கு வழிவகுக்கும் மிகப்பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 94 ஆயிரத்து 199 பேர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை உலகமெங்கும் கொரோனாவால் 27,231 பேர் மரணமடைந்துள்ளனர்.

Representational Image

ஸ்பெயின் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 5,138 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,995 ஆக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 759 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளைவிட அமெரிக்காவில் தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனாவுக்கு 1,02,325 பேர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் 300 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி உள்ளது. இப்படி வல்லரசுகள் எல்லாம் கொரோனாவை சமாளிக்க முடியாமல் அதன்முன் மண்டியிட்டுக் கிடக்கின்றன.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இந்தக் கட்டுரை எழுதப்படும்வரை இந்தியாவில் 873 பேருக்கு கொரோனா பாதிப்பை மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது, மேலும் நாடு முழுவதும் 21 பேரை பலி வாங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று வரை (மார்ச் 29) 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இச்சூழலின் நிலைமை கருதி தான் இந்தியாவில் 21 நாள்களுக்கு 144 ஊரடங்கு தடை உத்தரவை பிரதமர் மோடி பிரகடனப்படுத்தி உள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குப் போய்விடும் என அஞ்சுகின்றனர். அதன் காரணமாகவே இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய நிதியமைச்சரும் பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்துள்ளனர். அரசு நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது. உலகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ? என ஒவ்வொருவரும் அஞ்சுகின்றனர்.

Representational Image

இவ்வளவு பரபரப்பும் பதற்றமும் நிலவி வரும் நிலையில் நம் தமிழ்ச் சமூகம் இன்னும் வீதிகளில் ஊர் சுற்றி வருகிறது. சீனாவின் வுகான் நகரம் கொரோனா வைரஸை வென்றது, லாக் டவுன் மற்றும் சோசியல் டிஸ்டன்ஸிங் எனும் சமூக விலகலால் மட்டுமேதான். இந்தச் சமூக விலகல் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி என்று உலக சுகாதார அமைப்பு முதல் உள்ளூர் மருத்துவர்கள்வரை எச்சரிக்கின்றனர். ஆனால், நம்மவர்களோ இன்னும் டீக்கடை மாநாடுகளை வெற்றிகரமாக நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர்.

இன்னும் காய்கறி உழவர் சந்தைகளுக்கும், மீன், இறைச்சி, கடைகளுக்குப் படை எடுப்பதும் அதை எல்லாம் தாண்டி ஊரடங்கை வேடிக்கை பார்க்கும் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மார்ச் 28 நண்பகல்வரை வீட்டுக்குள் அடங்காமல் வெளியில் உலாவந்த 8,795 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 5,000 வாகனங்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நிபுணர்கள், தூய்மைப் பணியாளர்கள், உள்ளாட்சித் துறையினர், காவல்துறையினர், அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ளோர் என சில குறிப்பிட்ட பிரிவினர் உயிரைப் பணயம் வைத்து நம்மை கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களும், செவிலியர்களும் தங்கள் குடும்பத்துக்குகூட வராமல் மருத்துவமனைகளிலிலேயே தங்கி இருந்து கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றும் பணியில் தங்களை அர்ப்பணித்து வருகின்றனர்.

Representational Image

கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மருத்துவர்கள் தங்கள் குடும்பத்தினரைக்கூட சந்திக்க முடியாத சூழலில் உள்ளனர். அங்குள்ள மருத்துவர்களுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளைக்கூட அவர்கள் குடும்பத்தினரை நேரில் பார்த்துக்கூட வாங்க அனுமதி இல்லை.

லஞ்ச் பாக்ஸில் அவர்களின் பெயர்களை எழுதி ஒட்டி வைத்துவிட வேண்டுமாம். அவர்கள் தங்கள் பெயரைப் பார்த்து எடுத்துக்கொண்டு போய் சாப்பிடுகிறார்களாம். அதேபோல் ஒரு மருத்துவருக்கு சில நாள்கள் தொடர் வேலைக்குப் பின் வீட்டுக்கு ஒரு சில நாள்கள் மட்டும் ஓய்வுக்கு அனுப்பப்படுகிறார்களாம். அப்போதும்கூட அவர்கள் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் அறைக்குள் உணவை குடும்பத்தினர் உள்ளே தள்ளிவிடும் சூழல் இருப்பதாக சென்னை அரசு மருத்துவர் நண்பரின் மனைவியும், பிள்ளைகளும் கண்ணீர் வடிக்கின்றனர்.

இப்படி ஏராளமான பெரும் துயரமும், சோகமும், கொடுமையும் கொரோனாவுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன.

நாளுக்கு நாள் கொரோனா பரவல் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அச்சமடைய வைக்கிறது. மத்திய மாநில அரசுகள் தம்மால் இயன்ற அளவுக்கு மிகப்பெரும் களப்பணியில் இறங்கியுள்ளன.

ஆனால், இதன் அடிப்படைக் காரணம் புரியாமல் இன்னும் பல பேர் சமூக விலகலுக்கு உட்படாமல் வெளியே ஊர் சுற்றி வருவது மட்டும் குறைந்தபாடில்லை. கேட்டால் மளிகைப் பொருள்கள், காய்கறிகள், மருந்துகள் வாங்கச் செல்வதற்காக வெளியில் செல்வதாகச் சொல்கின்றனர். ஆனால், அது உண்மைக் காரணம் அல்ல. ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகளை ஒரே நாளில் வாங்கிக் கொண்டுவந்து வைக்க முடியாதா? இந்த ஆபத்தான காலத்தில் சற்று உணவின் ருசிக்கு சற்று ஓய்வு கொடுத்தால் என்ன குறைந்தா போவீர்கள். இது போர்க்காலத்தைவிட ஒரு மோசமான காலம் என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள்?

Representational Image

சென்னையில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவரிடம் பேசினேன். “கொரோனா பாதிப்பு தகவல் வெளியில் தெரிந்து எச்சரிக்கப்பட்ட நாள் முதல் வீட்டுக் கேட்டை பூட்டியதுதான். இன்னும் திறக்கவே இல்லை, மளிகைப் பொருள்கள் வீட்டில் ஓரளவு இருக்கின்றன. அதைவைத்து சமாளிக்கிறோம்..” என்றார்.

“தினசரி காய்கறிகளுக்கு என்ன செய்கிறீர்கள்?” என்றேன். வீட்டில் சின்ன தோட்டம் இருக்கிறது. கீரைகள், தக்காளி, கத்திரி சிறிது கிடைக்கும். அதைவிட பெரிய பலா மரம் ஒன்று எங்கள் வீட்டில் இருக்கிறது. அதன் பிஞ்சுகள்தான் எங்கள் உணவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. காலையில் இட்லி, தோசை எல்லாம் இல்லை. கோதுமை, தினை போன்ற தானியக் கூழ் வகைகள்தான் செய்து சாப்பிடுகிறோம். பால் இல்லாத டீ, காபிதான் அருந்துகிறோம். ருசியைவிட நமக்கு உயிர் முக்கியம் இல்லையா… எனவே, இந்த சமூக விலகலுக்கு எங்கள் குடும்பம் முக்கியத்துவம் அளித்து வருகிறது..” என்கிறார்.

இந்த மன நிலை அனைவருக்கும் வந்தால் மட்டுமே கொரோனாவை நம்மால் துரத்த முடியும். ஆனால், அவ்வாறு இல்லாமல் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் சமூக விலகலுக்கு மதிப்பளிக்காமல் ஊர் சுற்றுபவர்கள் இன்னும் குறைந்தபாடில்லை.வெளியுலக ஊரடங்கு வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதைப் பார்த்து ரசிக்கும் மனநிலையில் இங்கு பலரும் உள்ளனர்.

என் வீட்டைச் சுற்றியுள்ள குடும்பத்தினர் நன்கு படித்தவர்கள்தான். ஆனால், ஒரு நாளைக்கு நான்கு முஐற வெளியில் உள்ள கடைகளுக்குச் சென்று வருகின்றனர். அவர்களின் பிள்ளைகளும் தடை இல்லாமல் ஊர் சுற்றக் கிளம்பிவிடுகின்றனர். பிறகு எப்படி கொரோனாவிலிருந்து நாம் தப்பிப்பது? இன்னும் கிராமப்புறங்களில் இந்தக் கொரோனாவின் பாதிப்புச் சுவடுகளே தெரியவில்லை.

“அது எல்லாம் டவுனுலதாங்க.. எங்க கிராமப் பக்கம் எல்லாம் எட்டிக்கூட பார்க்காதுங்க..” என கிராமவாசிகள் வீரவசனம் பேசுகின்றனர். சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூரூ, மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் எனப் பல பகுதியிலிருந்தும் கிராமங்களுக்கு பலரும் வந்துள்ளனர். அவர்களிடமிருந்தும் கிராம மக்களை கொரோனா தாக்கும் அபாயம் உள்ளது. ஆனால், கிராமப்புற மக்களோ கொரோனா ஆபத்தைப் புரியாமல் வழக்கம்போல் தங்கள் பணியைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

Representational Image

கொரோனாவிலிருந்து நம்மைக் காக்கும் மிகப்பெரிய ஆயுதமும் மருந்தும் நம்முடைய சமூக விலகல் மட்டுமே. இல்லையேல் அந்தப் பாதிப்பு பட்டியலில் நாமும் இடம்பெறுவோம் என்பது மட்டுமே எச்சரிக்கை கலந்த உண்மை.

உலகத்தின் கொரோனா பாதிப்பை நம் கண் எதிரில் பார்த்துக்கொண்டும் இன்னும் பலபேர் அலட்சியம் காட்டி வருவதுதான் நமக்கு மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கப் போகிறது. கொரோனாவின் தீவிரம் புரியாமல் இவர்கள் காட்டிவரும் அலட்சியப்போக்கு மிகப்பெரும் ஆபத்துக்கு வழிவகுக்கும்.

நாம் என்ன செய்யப்போகிறோம்..?

பழ.அசோக்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.