பேராசிரியர் 100 வயது வரை இருந்தால் பெரிய அளவில் விழா நடத்தலாம் என எண்ணிக் கொண்டு இருந்தேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

image

முதுபெரும் அரசியல் தலைவரும் திமுக பொதுச் செயலாளருமான க.அன்பழகன் கடந்த வாரம் (98) காலமானார். அவரது மறைவிற்கு திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அன்பழகனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வேலங்காடு மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அதனையடுத்து திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்தில் க.அன்பழகனின் படத்திறப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, கி.வீரமணி மற்றும் கூட்டணி கட்சியினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் க. அன்பழகனுடனான அனுபவங்களை மு.க.ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார். அவர் பேசும் போது, “கனத்த இதயத்துடன் நான் உங்கள் முன்னால் நிற்கிறேன்.

நான் பள்ளி மாணவனாக இருந்த போது கோபாலபுரத்தில் இளைஞர் திமுகவை நடத்தினேன். அந்த அமைப்பின் அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கலைஞர், பேராசிரியர் ஆகியோர் வந்தனர். அந்த நிகழ்வுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. திமுக பொதுச் செயலாளராக 43 ஆண்டு காலம் கலைஞருக்கு துணையாக இருந்தவர். தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பு. எனக்கு தொடர்ந்து தோள் கொடுத்தவர் பேராசிரியர்” என்றார்.

image

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “பேராசிரியர் பெரியப்பாவினால் அதிகம் புகழப்பட்டவன் என்ற கர்வம் எனக்கு உண்டு. வழிகாட்டியாக மட்டுமல்ல; தந்தையாகவும் பேராசிரியர் இருந்தார் என்றால் அது மிகையல்ல. என்னை மகனைப் போல் பேராசிரியரை பார்த்துக் கொண்டார் என சிலர் சமுக வலைத்தளங்களில் எழுதினார்கள் அது தவறு. மகனை போல் அல்ல; மகனாகவே அவரைப் பார்த்துக் கொண்டேன். கலைஞர் அறிவாலயம் வந்த உடன் கேட்கும் முதல் கேள்வி பேராசிரியர் வந்துவிட்டாரா? என்பதுதான். 100 வயதை பேராசிரியர் நிச்சயம் அடைவார்; பெரிய அளவில் விழா நடத்தலாம் என எண்ணிக் கொண்டு இருந்தேன். கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் பேராசிரியரும் உயிரோடு இருந்திருப்பார்” என உருக்கமாகப் பேசினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.