கொரோனாவைக் கடுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சமூகப் பரவலைத் தடுக்கும் முக்கியமான நேரம் என்பதால், அத்தியாவசியத் தேவையைத் தவிர்த்து பொதுமக்கள் யாரும் வெளியே செல்லக் கூடாது என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெரும்பாலும், ஒத்துழைப்பு கொடுத்தாலும், சில பொறுப்பற்ற இளைஞர்கள் சாலைகளில் டூவிலர்களில் சென்ற வண்ணம் உள்ளனர். பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் ஆங்காங்கே சில இடங்களில் சமூக ஒன்று கூடல்களும் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்று போலீஸாரே புலம்பி வருகின்றனர். இந்த நிலையில்தான், சமூக ஒன்று கூடலைத் தவிர்க்கும் வகையிலும் போலீஸாருக்கு உதவும் வகையிலும், மாங்கனாம்பட்டி கிராம இளைஞர்கள் புது முயற்சியைக் கையில் எடுத்துள்ளனர். அந்தக் கிராமத்தின் நுழைவு வாயிலில் செக்போஸ்ட் அமைத்துள்ளனர். செக்போஸ்டில் சுமார் 4 இளைஞர்கள் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

அந்தச் சாலை வழியாக வருபவர்களிடம் எங்கு செல்ல வேண்டும், எதற்காகச் செல்கிறீர்கள் என்ற விபரங்களைக் கேட்கின்றனர். மிகவும் அத்தியாவசியத் தேவைக்குத்தான் அவர் செல்கிறார் என்றால் மட்டுமே அந்தச் சாலை வழியாக அனுப்புகின்றனர். சரியான காரணம் இல்லை என்றால், திருப்பி அனுப்பி விடுகின்றனர். அதோடு, மஞ்சள், வேப்பிலை, சானிடைசர் கொண்டு கை, கால்களைக் கழுவிய பின்பே அனுமதிக்கின்றனர். வயதானவர்கள் யாரேனும் மாத்திரைகள், மளிகை சாமான்கள் வாங்குவதற்காக வந்தால், அவர்களிடம் பணத்தை வாங்கிச் சென்று இளைஞர்களே வாங்கிக் கொடுக்கின்றனர். கொரோனா வைரஸ் தொடர்பாக என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, அதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களை பொதுமக்களிடம் கொடுக்கின்றனர். நிலவேம்பு கசாயமும் மாஸ்க் இல்லாதவர்களுக்கு மாஸ்க் கொடுத்து அசத்துகின்றனர்.
இதுபற்றி அந்தக் கிராமத்து இளைஞர்களிடம் கேட்டபோது, “எங்க ஊரைச் சுற்றிலும், கல்லுப்பள்ளம், காயம்பட்டி, வேம்பங்குடி, மேலத்தோப்பு என ஏராளமான கிராமங்கள் இருக்கு. நாங்க எல்லாரும் ஏதாவது ஒரு பொருள் வாங்கணும்னா வம்பன் 4 ரோட்டுக்குத்தான் போய் ஆகணும். எங்க ஊரு வழியாக, வம்பன் 4 ரோட்டுக்குப் போகும் இந்தப் பிரதான சாலையைத்தான் எல்லாரும் பயன்படுத்துறாங்க .எல்லா கிராமங்களுக்கும் போலீஸார் வந்து போக முடியாது. தடைபோட்ட 2வது நாளு வந்தாங்க. யாரும் பெருசா வெளிய போகலை. அதற்கப்புறம் எல்லாம் டூவிலர் எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாங்க. அப்பதான், செக்போஸ்ட் வச்சு, ரொம்ப முக்கியமான தேவை என்றால் அனுப்புவோம் என்று திட்டம் போட்டோம்.

அதுபடியே செக்போஸ்ட் வச்சோம். மருந்து, மாத்திரைன்னு ரொம்ப முக்கியமான காரணமா இருந்தாதான் அனுப்புவோம். இல்லைன்னா அனுப்ப மாட்டோம். காய்கறி கேட்டால் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்திடுவோம். தாத்தா பாட்டிங்க வருவாங்க, அவங்கள அலையவிடாம, டூவிலர எடுத்துக்கிட்டு போய் வாங்கிக்கொண்டு கொடுத்துவிடுவோம். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நோட்டீஸ் அடித்துக் கொடுத்தோம். செக்போஸ்ட் வச்சு எங்க போறீங்கன்னு கேட்டு அனுப்புவதால, மொத நாளு பொதுமக்கள் ரொம்பவே கடிந்து கொண்டாங்க. இப்போ, நாங்க செய்யிறது நல்ல விஷயம்னு புரிஞ்சிக்கிட்டு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறாங்க. எங்க ஊருக்கு நாங்கதான் போலீஸ்! 21 நாளும் இதுபோன்று செய்யலாம்னு இருக்கோம்” என்றனர்.