கொரோனாவால் மொத்தமாக முகம் மாறி போயிருக்கிறது இத்தாலி. சீனாவின் வுகான் நகரம்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகின்
முதல் பகுதி. இன்றைய தேதி வரை சீனாவில் கொரோனாவுக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். அந்நாட்டில் இருந்து பரவிய கொரோனா இத்தாலியை படுமோசமான மரண குழியில் தள்ளிவிட்டிருக்கிறது. இதுவரை 92,472 பேர் இத்தாலியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10,023 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில், இறப்பு விகிதம் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. கொரோனாவால் எங்கு பார்த்தாலும் கொத்து கொத்தாக மாண்டு போனவர்கள், அவர்களுக்காக கண்ணீர் விடும் உறவினர்களின் மரண ஓலங்கள் என இத்தாலி முழுவதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் செய்வதறியாது இத்தாலி விழிபிதுங்கி நிற்கிறது.
இத்தாலியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறிவருகின்றன. இத்தாலியின் லம்பார்டியில் அதிக
உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா தொற்றுடன் வந்து உயிருக்குப் போராடுவோரை மீட்க, இரவு பகலாக மருத்துவக்குழுவினர்
போராடுகிறார்கள். சிறிது நேர உறக்கம், இளைப்பாறுதலோடு, முழு நேரமும் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவசரகால சிகிச்சைப்பிரிவில் மட்டும் தினசரி குறைந்தபட்சம் 40 நோயாளிகளுக்காவது சிகிச்சை தர வேண்டிய சூழல் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோட்டைவிட்டதே அதிக உயிரிழப்புகளுக்கு காரணம் எனக் கூறப்பட்டாலும், விரைவில் இத்தாலி உள்ளிட்ட உலக நாடுகள் கொரோனா பிடியில் இருந்து மீண்டு வர வேண்டுமென்பதே அனைவரின் வேண்டுதலாக உள்ளது.
ஆயிரம் முகக்கவசங்களை இலவசமாக வழங்கிய தையல்காரர் !
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM