பொங்கும் எடப்பாடி… புலம்பும் பாலாஜி!

கட்சிப் பதவி பறிக்கப்பட்டதும் மிகவும் நொந்து போய்க்கிடக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. பால்வளத்துறை மானியக்கோரிக்கை அன்று கூட அவரிடம் முதல்வர் முகம் கொடுத்துப் பேசவில்லை. அவருடைய பெயரைக் கேட்டாலே எடப்பாடி கொதிக்கும் பாலைப்போல பொங்கி விடுகிறாராம். ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அத்தியாவசியப் பொருளான பால் எப்படி விநியோகம் செய்யப்படுகிறது என்பதைக்கூட முதல்வர் அலுவலகத்திலிருந்து அமைச்சரிடம் கேட்கவில்லை. துறை அதிகாரிகளிடம்தான் விசாரித்து முடிவு எடுத்திருக்கிறார்கள். அது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குக் கூட பாலாஜியை அனுமதிக்கவில்லையாம். விரைவில் அமைச்சர் பதவியைக் காலி செய்துவிடுவார்கள் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறார் பாலாஜி.

கைவிட்ட கதர்… கரம் கொடுக்கும் மணல்!

கதர் மற்றும் கிராமத்தொழில் வாரியத்துறை அமைச்சராக இருக்கும் ஜி.பாஸ்கரன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தனக்கு ஒதுக்கப்பட்ட துறை பிடிக்காமல் விரக்தியில் ஏற்கெனவே மேடையில் பேசியிருக்கிறார் பாஸ்கரன். அவருடைய துறையை வைத்து எதுவும் சம்பாதிக்க முடியவில்லை என்று குமுறும் அவரின் ஆதரவாளர்கள், சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகப் புகார்கள் குவிகின்றன. அதிகாரிகள் யாராவது கேட்டால், `ஒவ்வொரு மினிஸ்டரும் அவுங்களோட ஆளுகளும் எப்படி எப்படி சம்பாதிக்கிறாங்கன்னு பாருங்க. நாங்க ஏதோ வேற வழியில்லாம மணல் அள்ளிப் பொழைக்கிறோம்’ என்று காரணம் கற்பிக்கிறார்களாம். அமைச்சரும் இதையே நியாயப்படுத்துகிறாராம்.

ஊரடங்கில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம்!

`ஊரடங்கு உத்தரவு ஆளும்கட்சிக்குப் பொருந்தாது’ என்பதைச் செயலில் காட்டியிருக்கிறார்கள். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பதவியில் வேண்டப்பட்டவர்களை அமர்த்தி அதன் மூலம் அரசியல் செய்வதற்கு தூத்துக்குடி அ.தி.மு.க-வுக்குள் போட்டி நடக்கிறது. `நிழல் மேயராக’ வலம் வரலாம் என்ற நினைப்பில் பலர் காய்களை நகர்த்தி வருகிறார்கள். அதற்காக கொரோனா தடுப்பு நடவடிக்கையை வைத்து தூத்துக்குடியில் அரசியல் நடத்துகிறார்கள்.

ஆட்சியர் சந்தீப் நந்தூரி

இவர்களில் முக்கியமானவர் ஆறுமுக நயினார். தூத்துக்குடி அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர். ஜெயலலிதா காலத்தில் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் நெருக்கமாகித் தனி அரசியல் செய்து வருகிறார். இவர், அண்ணாநகர் பகுதியில் மக்களிடம் அறிமுகமாகும் வகையில் மாஸ்க், சானிடைசர், சோப்புகளை வழங்குவதற்காக கலெக்டர் சந்தீப் நந்தூரியை அழைத்தார் ஆறுமுக நயினார்.

காரை விட்டு இறங்கிய சந்தீப் நந்தூரி அங்கே கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து டென்ஷனாகி, நான்கு பேருக்கு மட்டும் உபகரணங்களைக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மக்களைக் கூட்டி ஸ்பீக்கர் கட்டி விழா நடத்துவது சரியா? ஊரடங்கு உத்தரவு ஆளும்கட்சிக்குப் பொருந்தாதா? இப்படி சட்டத்தை மீறும் விழாவில் கலெக்டர் பங்கேற்பது முறையா? எனக் கேள்விகளை எழுப்புகிறார்கள் எதிர்க் கட்சியினர்.

சைபர் க்ரைம் கிருமி நாசினி!

தேனி எஸ்.பி அலுவலகத்தில், சைபர் க்ரைம் பிரிவு பெண் உதவி ஆய்வாளருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதாகத் தகவல் பரவியது. ஆனால், “உதவி ஆய்வாளருக்குச் சாதாரண காய்ச்சல்தான்” என விளக்கம் சொன்னது காவல்துறை. பத்து நாள்களுக்கு முன்பு , உகாண்டா நாட்டிலிருந்து திரும்பிய பெரியகுளத்தைச் சேர்ந்த இளைஞரின் செல்போன் தொலைந்துள்ளது. அதற்காகப் பெண் உதவி ஆய்வாளரிடம் புகார் கொடுத்திருக்கிறார். அதன் பிறகுதான் உதவி ஆய்வாளருக்குக் கடுமையான காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். முடிவில் அவருக்குக் கொரோனா அறிகுறி இல்லை என்பது தெரியவந்தது.

அதோடு சைபர் க்ரைம் அறையில் கிருமி நாசினி தெளித்துச் சுத்தப்படுத்தி அறையைப் பூட்டிவிட்டனர். ஆனாலும் “ஒட்டுமொத்த எஸ்.பி அலுவலகத்தையும் சுத்தப்படுத்துங்கள்” என போலீஸ்காரர்களிடமிருந்து கோரிக்கை வர.. எஸ்.பி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்திருக்கிறார்கள். இருந்தாலும்கூட எஸ்.பி அலுவலகம் பக்கம் எட்டிப்பார்க்கச் சிலர் தயக்கம் காட்டுகிறார்கள்.

மணிகண்டன்

கோயில் கோயிலாகச் சுற்றிய மக்கள் பிரதிநிதி… கொரோனாவுக்கு வெளியே வரவில்லை!

“மன்னர் பரம்பரையில் ஓர் எம்.எல்.ஏ” எனத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது திருவாய் மலர்ந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டனுக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது. அடக்கத்துடன் இருக்காமல் சொந்தக் கட்சி – எதிர்க் கட்சி என எல்லோரையும் எடுத்தெறிந்து பேசியதால் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இழந்த அமைச்சர் பதவியை எப்படியாவது திரும்பப் பெற்றுவிட வேண்டும் என அவர் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துவிட்டன. சட்டசபைக்குக் கூடச் செல்லாமல் தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் கோயில் கோயிலாகச் சென்று விசேஷ வழிபாடுகளிலும் செய்துவந்தார். ஆனால் கொரோனா அச்சம் வந்ததும் வெளியே எட்டிப்பார்க்கவே இல்லை. இதே மாவட்டத்தில் உள்ள மற்ற எம்.எல்.ஏக்கள், அவரவர் தொகுதிக்குச் சென்று இவர் மட்டும் களம் இறங்கவேயில்லை. மாவட்ட மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஊரடங்கு முடிந்தபின் இதற்காகவே ஒரு பெரிய பஞ்சாயத்து இருக்கும் என்கிறார்கள்.

அமைச்சரே அடி வாங்கியிருப்பார்!

வழக்கமாகப் படை பலத்துடன் செல்லும் அமைச்சர் வீரமணி, `கொரோனா ’ அச்சம் காரணமாக ஓட்டுநரைத் தவிர வேறு யாரையும் கிட்ட சேர்ப்பதில்லை. ஜோலார்பேட்டையில் உள்ள தன் வீட்டிலிருந்து நாட்ரம்பள்ளிக்குச் சென்ற அவரின் காரை வேறு மாவட்ட போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அமைச்சரைப் பார்த்து, `யார் நீங்கள், எதற்காக இந்தப் பக்கம் போறீங்க?’ என்று லத்தியைக் காட்டி கேள்வி கேட்டனர். அதற்கு வீரமணி, “ஏம்பா, நா அமைச்சர்னு உங்களுக்குச் சத்தியமா தெரியாதா?’’ என்று கேட்டார். அலர்ட்டான போலீஸ்காரர்கள், “சாரி சார்… திடீர்னு பார்க்கும்போது ஃபேஸ் ஞாபகம் வரல’’ என்று சிரித்து மழுப்பியுள்ளனர். “நான், வாய் திறக்கலைனா, எனக்கே அடி விழுந்திருக்கும் போலிருக்கு. எல்லோரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்க’’ என்று தனக்கு நேர்ந்த சம்பவத்தைத் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சொல்லிச் சிரித்தார் வீரமணி.

அமைச்சர் வீரமணி

வீதிக்கு வந்த தோப்பு!

`தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் எங்கே… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதா… வெளியே வந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டாமா?’ என ஆளும்கட்சி நிர்வாகிகள் பலரும் ஆவேசமாகக் கேள்வி எழுப்ப… விழித்துக்கொண்டார் தோப்பு வெங்கடாசலம். அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம், மைக்கைப் பிடித்து மக்களுக்கு விழிப்புணர்வு என்று களமிறங்கினார் தோப்பு. `உங்கள் தேவைக்கும், உதவிக்கும் என்னை அழையுங்கள்’ என செல்போன் நம்பரோடு பத்திரிகைகளில் விளம்பரமும் கொடுத்திருக்கிறார்.

அம்மா ஆன்மாவே மன்னிக்காது!

சேலம் மாநகராட்சியில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, வின்சென்ட், அஸ்தம்பட்டி, சத்திரம் உட்பட11 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கிற்குப் பின் இங்கிருந்துதான் சாலையோரவாசிகளுக்கும், ஆதரவற்ற முதியவர்களுக்கும் பெருமளவில் உணவு தயாரித்து அனுப்பப்படுகிறது. சேலம் மாநகராட்சியில் செயல்படும் அம்மா உணவகங்களுக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் நேரடியாகப் பொன்னி சூப்பர் மார்க்கெட்டிலிருந்து அந்தந்த அம்மா உணவகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதுதவிர தினசரி தேவையான காய்கறி, பால், கேஸ் போன்ற அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு மாநகராட்சி மண்டல அதிகாரிகளிடம் நேரடியாக தொகை வழங்கப்படுகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அந்த அதிகாரிகள் கமிஷன் தொகையை எடுத்துக்கொண்டு காய்கறி, பால் வாங்குவற்கு மிகவும் சொற்பத் தொகையைக் கொடுப்பதாகப் புலம்புகிறார்கள் அம்மா உணவகத்தை நடத்தும் மகளிர் குழுவினர்.

அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி

பாராட்ட வேண்டாம்; குறை சொல்லாம இருங்க…!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு சுய ஊரடங்கை அறிவித்தபோதே, புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததுடன், நோயின் தீவிரம் கருதி மார்ச் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று முதலில் அறிவித்தார் முதல்வர் நாராயணசாமி. அதையடுத்துதான் மத்திய அரசு 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசும் 144 உத்தரவை அமல்படுத்தியது. புதுச்சேரியில் கடுமையான நிதி நெருக்கடி நிலவியபோதும், கொரோனா சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களை உடனடியாக வாங்க உத்தரவிட்ட முதல்வர் நாராயணசாமி, நள்ளிரவிலும் புதுச்சேரியின் எல்லைகளுக்குச் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். அதேபோல காரைக்கால், மாகே உள்ளிட்ட பிராந்தியங்களுக்கும் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி வருகிறார்.

முதல்வரின் இந்தச் செயல்களை அனைத்துக் கட்சிகளும் பாராட்டியிருக்கின்றன. ஆனால், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவருடைய ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் தனித்தனியாக அமர வைக்கப்பட்ட படத்தையும், முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் முகக்கவசம் அணிந்தபடி ஆலோசனை நடத்திய படத்தையும் பகிர்ந்து, “பிரதமர் மோடி கூட்டத்தில் சமூகத் தொற்று ஏற்படாதவாறு இடைவெளி விட்டு ஆலோசனை நடத்தினார். அதுதான் சரியான வழி. முதல்வர் நாராயணசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டம் தவறான வழி” என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கருத்துக்காக நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

வீடியோ அழைப்பைத் துண்டிக்கும் முன், வாட்ஸ்அப்பில் உனக்கு ஒரு முக்கியமான செய்தி அனுப்பியிருக்கிறேன் என்று சொன்ன கழுகார், கைகாட்டி மாயமானார்.

அவர் அனுப்பிய மெசேஜைப் பார்த்தோம். அதிர்ச்சியூட்டிய அந்தச் செய்தி…

சென்னை ஜாம்பஜார் மார்க்கெட்.

ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 15-வரை மத்திய அரசு சொல்லியிருந்தாலும் அதற்குப் பிறகும் சில நாள்களுக்கு ஊரடைங்கை நீட்டிக்கும் எண்ணம் மத்திய அரசிடம் இருக்கிறதாம். இந்த ஊரடங்கு உத்தரவினால் கொரனோ சமுதாயரீதியாகப் பரவுவது வெகுவாகக் குறைந்துள்ளது என்று மத்திய அரசுக்கு வந்த ரிசல்ட்டே இதற்கு காரணம் என்று தகவல்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.