பென் நியூட்டன் என்கிற ஒரு மிகச் சாதாரணமான நபர் 12 வருடங்களுக்கு முன், ‘பிரைட்ஸ்டார்ட்’ எனப்படும் தொழிற்பயிற்சித் திட்டத்தின் வாயிலாக டெலாய்ட் என்ற நிறுவனத்தில் இணைந்தார். கடந்த‌ 2023-ம் வருடம், அதே நிறுவனத்தில் பங்குதாரராக இணைந்தவர் தற்போது தனது 30 வயதில், ஆண்டுக்கு ஒரு‌ மில்லியன் பவுண்டுக்கும் (ரூ.10 கோடிக்கும் மேல்) அதிகமான வருமானத்தை ஈட்டிக்கொண்டிருக்கிறார்.

‘பிரைட் ஸ்டார்ட்’ திட்டம் என்பது பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களுக்கானது. அந்த திட்டத்தின் வாயிலாக டெலாய்ட் நிறுவனத்தில் இணைந்தவர் இன்று அந்த நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கிறார் என்பது பெருமையான விஷயம். அதே சமயம் அந்த திட்டத்தின் வாயிலாக வந்த, டெலாய்ட் நிறுவனத்தின் முதல் பங்குதாரரும் இவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

பென் நியூட்டன்

பென் நியூட்டன் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில், “ நான் இங்கிலாந்தில் உள்ள டொர்செட் நாட்டில் வளர்ந்தேன். எனது அப்பா அவரது 16 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, ராணுவத்தில் இணைந்து பணிபுரிந்தார். எனது அம்மா சில காலம் ‘பப்’பிலும் பின்னர், டிராவல் ஏஜெண்ட்டாகவும் பணியாற்றினார். எனது ஆரம்பகால பொருளாதார சூழ்நிலை இப்படித்தான் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

வார்விக் பல்கலைக்கழகத்திலிருந்து நியூட்டனுக்கு கணிதம் படிப்பதற்கான சேர்க்கை கடிதம் வந்தது. அவர் குடும்பத்திலேயே இப்படியான கடிதத்தைப் பெற்ற முதல் நபர் இவர் தான். ஆனால், அவர் அதை நிராகரித்துவிட்டார். நிராகரித்துவிட்டு டெலாய்ட் நிறுவனத்தில் இணைந்துப் பணிபுரியத் தொடங்கினார். தற்போது அவர் அந்த நிறுவனத்தின் கணக்காளராகவும், நிதி தணிக்கையாளராகவும் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.

டெலாய்ட் நிறுவனம் வேலைக்கு ஆள்களை பணியமர்த்துவதை அதிகரிப்பதற்காவும் பல்கலைக்கழகம் மூலம் இல்லாது நேரடியாகவே அதிக நபர்களைப் பணியமர்த்தவதற்காவுமே ‘பிரைட் ஸ்டார்ட்’ திட்டத்தைத் தொடங்கியது. தொழிற்பயிற்சி என்பது பொதுவாக ப்ளம்பர், எலக்ட்ரிசியன், டிரேட்மேன் போன்றவற்றிற்கு பயிற்சி வழங்குவது தான் என்றாலும் அதில், டிஜிட்டல் தொழில்நுட்பம், சுகாதாரம், மேலாண்மை ஆலோசனை, கணக்கியல் போன்று ‘படிக்கும் வயதில் சம்பாதி’க்கும் வகையில் 600க்கும்‌ மேற்பட்ட தொழிற்பயிற்சிகள் இருக்கின்றன. இந்தத் தொழிற்பயிற்சி என்பது முறையான வேலையாகும். இந்த தொழிற்பயிற்சிகள் நல்ல ஊதியத்தைத் தருவதோடு மட்டுமல்லாது நிறைய அனுபவங்களைத் தருகின்றன. மேலும், நிறையக் கற்றுக்கொள்ளவும் அனுமதிக்கின்றன.

இந்தப் பயிற்சித் திட்டம் நீங்கள் விரும்பும் துறைக்குத் தேவையான திறன்களையும் பயிற்சிகளையும் அளிக்கின்றது. ஒவ்வொரு தொழிற்பயிற்சியும் ஒவ்வொரு லெவலைக் கொண்டது. உதாரணமாக இரண்டாவது லெவல் என்பது பள்ளி மேற்படிப்புக்கு சமமானது. அதுபோல் ஏழாவது லெவல் என்பது பட்ட மேற்படிப்புக்கு சமமானது. நாம் தேர்ந்தெடுக்கும் தொழிற்பயிற்சி, அதன் லெவல்கள், அத்துறையில் நமக்கு உள்ள முன் அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்து பயிற்சிக் காலம் நீளும்.

படிக்கும் வயதில் குடும்ப சூழலின் காரணமாக வேலைக்குச் செல்லும் மாணவர்கள் அதிகம். ஆனால், அது அவர்களுக்கு எவ்விதமான கற்றலையோ அனுபவத்தையோ தருவதில்லை. மாறாக பிரைட் ஸ்டார்ட் போன்ற திட்டங்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு கூட நல்ல ஊதியத்துடன் கற்றல் அனுபவத்தையும் தரும் என்பதே நிதர்சனமான உண்மை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.