மூன்றாவது முறையாக ஜெயித்து ஆட்சியதிகாரத்தைத் தொடர வேண்டும் என்று முனைப்புக் காட்டும் பா.ஜ.க-வினர், எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்று களத்தில் தீவிரம் காட்டுகிறார்கள்.

பிரதமர் மோடி

மொத்தம் 370 தொகுதிகளில் பா.ஜ.க ஜெயிக்கும், 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் என்.டி.ஏ ஜெயிக்கும் என்று பிரதமர் மோடி சொல்லிவிட்டார். அதனை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என கட்சியினர் தீவிரம் காட்டுகிறார்கள்.

370, 400 என்ற எண்களை பிரதமர் சொல்லிவிட்டதால், ‘மீண்டும் மோடி… வேண்டும் மோடி’ என்று முழக்கத்தை உற்சாகமாக எழுப்பிவருகிறார்கள் பா.ஜ.க-வினர். எனினும் இந்தியா முழுவதும் கள யதார்த்தம் எப்படி இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. மத்தியில் பா.ஜ.க மீண்டும் அமைக்குமா, பிரதமர் நாற்காலியை மோடி தக்கவைப்பாரா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, எத்தனை இடங்கள் பா.ஜ.க-வுக்கு கிடைக்கப்போகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

ஸ்டாலின் – மோடி

2014 மக்களவைத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல்கள் ஆகிய இரண்டு தேர்தல்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு 2024 தேர்தல் களம் இருக்கிறது. 2014-ம் ஆண்டு இந்தியாவில் மோடி அலை வீசியது என்பது கண்கூடாகத் தெரிந்தது. ஆனால், அந்தளவுக்கு 2019-ல் மோடிக்கு ஆதரவான அலை வீசியதாகத் தெரியவில்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., இரண்டு கோடிப் பேருக்கு வேலை என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது, விவசாயிகளின் கோபம் என்ற சூழலில்தான் 2019-ம் தேர்தல் நடைபெற்றது. அதில், 303 தொகுதிகளில் பா.ஜ.க ஜெயித்தது. அந்த வெற்றிக்கு காரணம் மோடி அலை அல்ல என்பது பரவலான கருத்து.

புல்வாமா தாக்குதலில் துணை ராணுவப்படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை தனது தேர்தல் வெற்றிக்கு பா.ஜ.க பயன்படுத்திக்கொண்டது என்று எதிர்க்கட்சிகள் இன்றுவரை விமர்சித்துவருகின்றன.

மோடி, சத்யபால் மாலிக்

அந்த விவகாரத்தில் புல்வாமா தாக்குதல் நடைபெற்றபோது ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் தெரிவித்த கருத்துக்களும் அக்குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்ப்பதாகவே அமைந்தது.

ஓர் அரசு, பத்தாண்டுகாலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால், பல்வேறு காரணங்களால் அந்த அரசுக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் இருப்பது இயல்பான ஒன்று. மேலும், தென் மாநிலங்களில் கர்நாடகா தவிர்த்து பா.ஜ.க-வுக்கு பெரிய அளவுக்கு இடங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை என பல்வேறு தேர்தல் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், வட இந்தியாவில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்துத்தான் இந்ததேர்தலில் பா.ஜ.க-வின் வெற்றி தீர்மானிக்கப்படும். பா.ஜ.க-வினர் சொல்வதைப்போல, வட இந்தியாவில் மோடி அலை வீசினால், கணிசமான தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றும். ஆனால், உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களின் தற்போதைய கள நிலவரங்களைப் பார்த்தால், பா.ஜ.க-வினர் சொல்கிற அளவுக்கு இடங்கள் கிடைக்க கடுமையான போட்டி இருக்கும் என்றே தெரிகிறது,

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே நிலைமை தற்போது சவால்களை சந்திக்கும் நிலை இருக்கிறது. குஜராத்தில், 2014, 2019 ஆகிய இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும், அங்கு மொத்தமுள்ள 26 தொகுதிகளையும் பா.ஜ.க கைப்பற்றியது. ஆனால், இந்த முறை பா.ஜ.க-வுக்கு உள்கட்சி மோதல் படு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பல தொகுதிகளில் மேலிடத்தால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு சொந்த கட்சியினரே கடும் எதர்ப்பு தெரிவித்து, வேட்பாளர்களை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

குஜராத்தில் பா.ஜ.க-வின் வேட்பாளராக களத்தில் இருக்கும் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, ராஜ்புத் சமூக பெண்களை இழிவுபடுத்திப் பேசியதற்காக ஒட்டுமொத்த ராஜ்புத் சமூகமும் பா.ஜ.க-வுக்கு எதிராக திரண்டு நிற்கிறது. பா.ஜ.க அலுவலகம் முன்பாக ராஜ்புத் சமூகப் பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேஜஸ்வி யாதவ்

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரும பாஜக-வும் கைகோத்திருக்கிறார்கள். அடிக்கடி கூட்டணி மாறுவதால் ‘பல்டி’ குமார் என்று அவர் கேலிக்கு ஆளாகியிருக்கும் சூழலில், அந்த கூட்டணிக்கு பெரிய வெற்றி கிடைக்காது என்றும், தேஜஸ்வி யாதவுக்கு ஆதரவு பெருகியிருப்பதால், பீகாரில் கணிசமான இடங்களை ‘இந்தியா’ கூட்டணி கைப்பற்றும் என்று செய்திகள் வருகின்றன. இதே நிலைமைதான் உத்தரப்பிரதேசத்திலும்.

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி, காங்கிரஸ் கூட்டணி கடந்த முறையை விட அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கிறார்கள் தேசிய அரசியலை உற்றுநோக்கிவரும் அரசியல் பார்வையாளர்கள். உ.பி-யில் ‘இந்தியா’ கூட்டணி கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் சற்று அதிகமான இடத்தை பிடித்தால்கூட, அது பா.ஜ.க-வுக்கு பின்னடைவாகவே இருக்கும்.

மோடி

பிரதமர் மோடி தன் பிரசாரங்களில் அவர்கள் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பதில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. ஆனால், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முஸ்லீம் லீக்குடன் தொடர்புபடுத்துவதும், வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை விடாமல் பிடித்துக்கொண்டும் இருக்கிறார். இதுவும் அவர்களுக்கு பின்னடைவாக இருக்கிறது. தற்போது பாஜக சொல்லும் எண்ணிக்கையில் வெற்றிபெற பாஜக மிக கடுமையான போட்டியை எதிர்க்கொள்ளும் நிலையிலே இருக்கிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.