இஸ்ரேல் Vs பாலஸ்தீனம் என்றிருந்த போர்க் களம் தற்போது இஸ்ரேல் Vs இரான் ஆகவும் உக்கிரமடைந்திருக்கிறது. சிரியாவில் உள்ள இரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மீது இரான் வான்வழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு பக்கபலமாக அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதால், மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் மாபெரும் போர்மூளும் அபாயம் அதிகரித்திருக்கிறது. உலகப்போர் போல `இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது’ என ஐ.நா.வும் அச்சம் தெரிவித்திருக்கிறது.

தாக்குதலுக்குள்ளான இரான் தூதரகம், சிரியா

இஸ்ரேல் Vs பாலஸ்தீனம்:

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 33,091 பாலஸ்தீனியர்கள் உள்பட 34,000 பேர் உயிரிழந்திருக்கின்றனர். போர் நிறுத்தம் கோரி உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வரும் நிலையில், மற்றொரு தாக்குதலை இஸ்ரேல் துணிந்து நடத்தியிருக்கிறது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் மீதான போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இஸ்ரேல் பக்கம் நிற்க, இரான் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகளும், ஹிஸ்புல்லா, ஹைதி போன்ற இஸ்லாமியக் கிளர்ச்சிக் குழுக்களும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருக்கின்றன. இந்த நிலையில், பாலஸ்தீனத்தை தாக்கும் இஸ்ரேலை அச்சுறுத்துவதற்காக, இரானின் ஆதரவுடன் லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா மற்றும் ஏமனிலிருந்து ஹைதி உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக் குழுக்கள் இஸ்ரேல்மீது அவ்வபோது தாக்குதல் நடத்திவருகின்றன.

இரான் Vs இஸ்ரேல்:

ஆகவே, தனக்கு எதிர் முகாமில் இருக்கும் இரானை எச்சரிக்கும் விதமாக, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள இரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில், தூதரகத்தில் தங்கியிருந்த இரானின் முக்கிய ராணுவ கமாண்டர் உள்பட 12 தூதரக அதிகாரிகள் உயிரிழந்தனர். இது இரானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது இஸ்ரேலின் தாக்குதல்தான் என இரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது. அதற்கேற்ப, இஸ்ரேலும் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவும் இல்லை; குற்றச்சாட்டை மறுதலிக்கவும் இல்லை. மேலும், `ஆத்திரத்திலிருக்கும் இரான் நிச்சயமாக இஸ்ரேலைத் தாக்கக்கூடும் எச்சரிக்கையாக இருக்கவும்’ என அமெரிக்கா இஸ்ரேலை அலர்ட் செய்தது.

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தும் இரான்

இந்த நிலையில், ஏப்ரல் 13-ம் தேதி இரவில் இஸ்ரேல் மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் வான்வழித் தாக்குதலை இரான் நடத்தியது. இஸ்ரேல் மீது சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டன. இருப்பினும், இஸ்ரேலின் அசைக்கமுடியாத அதிநவீன `அயர்ன்-டோம்’ பாதுகாப்பு கட்டமைப்பின்மூலம், 300 ஏவுகணைகளில் 99% ஏவுகணைகள் இஸ்ரேல் எல்லையைத் தொடும் முன்பே வழிமறித்து தாக்கி அழிக்கப்பட்டுவிட்டதாக, இஸ்ரேல் கூறியிருக்கிறது. தவிர, இஸ்ரேல் விமானப்படை மட்டுமல்லாமல் அமெரிக்காவும் இணைந்து இரானின் ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியதாகத் தெரிவித்திருக்கிறது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் ஒரு சிறுமி உள்பட 7 இஸ்ரேலியர்கள் காயமடைந்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இரானின் இந்தத் தாக்குதலுக்கு பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு பலத்த வரவேற்பு தெரிவித்திருக்கிறது.

பரஸ்பர எச்சரிக்கை விடுக்கும் நாடுகள்:

அதேசமயம், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இரானுக்கு கடும் கண்டனத்தையும், இஸ்ரேலுக்கான ஆதரவையும் தெரிவித்திருக்கின்றன. இதுகுறித்து பதிலளித்திருக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இரான் தயாராகியிருக்கிறது. அதேசமயம் நாங்களும் எங்களின் தற்காப்புக்காக எல்லாவிதமான பதிலடிக்கும் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு கெடுதல் செய்பவர்களுக்கு நாங்களும் கெடுதல் செய்வோம். எங்களுக்கு ஆதரவாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் துணை நிற்கின்றன” எனத் தெரிவித்திருக்கிறார்.

இரான் ராணுவத் தளபதி முகமது பாகேரி

அதேசமயம், இரான் ராணுவத் தளபதி முகமது பாகேரி, “இஸ்ரேல் மீதான எங்களின் தாக்குதல் என்பது, சிரியாவில் இரான் தூதரகம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கான பதிலடியே. எங்களின் தற்காப்புக்காக நாங்களும் தாக்குதல் நடத்தினோம். இந்தத் தாக்குதலை நாங்கள் இனியும் நீட்டிக்க விரும்பவில்லை. ஆனால், இஸ்ரேல் எங்களை மீண்டும் தாக்கினால் அதற்காக நாங்கள் கொடுக்கும் பதிலடி இதைவிடப் பெரிதாக இருக்கும். இஸ்ரேலுக்கு ஆதரவாக குறுக்கே அமெரிக்கா வந்தாலும் அவர்களுக்கான பதிலடியைக் கொடுப்போம்!” என எச்சரிக்கை விடுத்தியிருக்கிறார்.

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்

உலகப் போர் மூளும் அபாயம்… ஐ.நா கவலை:

இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல், பல நாடுகளின் ஆதரவுக் கரங்களால் இரு அணிகளுக்கு இடையேயான போராக வெடிக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. இது இப்படியே நீடித்தால் மத்தியக் கிழக்கில் மூன்றாம் உலகப்போரே வெடிக்கும் அபாயத்துக்கு கொண்டுசெல்லும் என உலக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “இரான், இஸ்ரேல் மீது நடத்தியப் பெரிய அளவிலான தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விரோதங்களை உடனடியாக நிறுத்துமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். இதனால் மத்திய கிழக்கில் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மற்றுமொரு போரை இந்தப் பிராந்தியமோ அல்லது உலகமோ தாங்காது என்பதை நான் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.