கேரள மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 26 -ம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் `தி கேரளா ஸ்டோரி’ சினிமா ஒளிபரப்பப்பட்டது. லவ் ஜிகாத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த சினிமா, அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது. முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அந்த சினிமாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இடுக்கி சீரோ மலபார் சபையில் மாணவிகளுக்கு தி கேரளா ஸ்டோரி சினிமா போட்டு காண்பிக்கப்பட்ட சம்பவம், அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கேரளா ஸ்டோரி சினிமாவுக்கு ஆதரவாக பா.ஜ.க-வினரும், எதிராக காங்கிரஸ் கட்சியினரும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும், சில சர்ச்சுகள் சார்பில் தி கேரளா ஸ்டோரிக்கு பதிலாக மணிப்பூர் ஸ்டோரி வெளியிடப்பட்டது. இது அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அது தனக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக மலப்புறம் பா.ஜ.க வேட்பாளர் அப்துல் சலாம் தெரிவித்து இருக்கிறார். 

தி கேரளா ஸ்டோரி சினிமா

இதுபற்றி மலப்புறம் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அப்துல் சலாம் செய்தியளர்களிடம் கூறுகையில், “தி கேரளா ஸ்டோரி சினிமா விவாதம் ஆவது பா.ஜ.க சார்பில் போட்டியிடும் எனக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ரம்ஜான் பண்டிகையின்போது நான் பள்ளிவாசலுக்கு சென்றபோதே அதை உணர்ந்துகொண்டேன். பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்து ஒருவருக்கு ரம்ஜான் வாழ்த்து பரிமாறினேன். அப்போது பின்னால் இருந்து ஒருவர், ‘இந்துக்களுடன் சேர்ந்து முஸ்லிம்களை கொல்லும் நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள்’ என கூறினார். அது எனக்கும் மிகவும் வேதனையான நிமிடமாக இருந்தது. முஸ்லிம் நபர்கள் பா.ஜ.க-வில் இணைந்தால் அவர்கள் இந்துக்களுடன் சேர்ந்து முஸ்லிம்களை தொல்லை செய்வதாக நினைக்கிறார்கள். அவர்களை முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என நினைக்கிறார்கள். இடதுசாரிகளும், வலதுசாரிகளும் ஓட்டுக்காக பொய் சொல்லுகிறார்கள் என்பது முஸ்லிம்களுக்கு தெரியும். ஆனாலும், தேர்தல் நேரத்தில் தவறாக வழிநடத்துகின்றனர். இடதுசாரிகளும் வலதுசாரிகளும் சுமார் 30 ஆண்டுகளாக மலப்புறத்தில் கல்வியறிவு குறைவான மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். அயோத்தியா, ஞானவாபி விவகாரம், சி.ஏ.ஏ உள்ளிட்டவைகளை கூறி முஸ்லிம்களை திசைதிருப்புகின்றனர்.

அப்துல் சலாம்

மலப்புறம் 70 சதவீதம் முஸ்லிம்கள் உள்ள தொகுதியாகும். கேரளா ஸ்டோரி போன்ற விஷயங்களில் உண்மை இருக்கலாம், உண்மை இல்லாமலும் இருக்கலாம். கேரளா ஸ்டோரி உண்மையா, பொய்யா என எனக்கு தெரியவில்லை. நான் அந்த சினிமாவை பார்க்கவும் இல்லை. ஆனால், அது முஸ்லிம்கள் அதிகமாக உள்ள மலப்புறம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரான என்னை மிகவும் பாதிக்கிறது என்றுதான் சொல்கிறேன். இந்த விவாதத்தை தேர்ந்தெடுத்த நேரம் சரியானதல்ல. இப்போது கேரளா ஸ்டோரி, விவாதத்தை ஏற்படுத்துகிறது. இந்த விவாத நெருப்பின் வெப்பத்தில் வெந்து கரிந்துபோவது நானாகத்தான் இருக்கும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.