திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நீலகிரி மற்றும் திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களான ஆ.ராசா மற்றும் கே.சுப்பராயனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஜனநாயகத்தையும் மீட்கவும், சர்வதிகாரத்தை வீழ்த்தவும் நடக்கும் மிக முக்கிய தேர்தல். சமூகநீதியை நிலைநாட்ட வேண்டிய தருணம் இது. ராகுல் காந்தியின் கோவையின் ஒரு நாள் வருகை, பாகுபலி படம் போன்று பிரமாண்டமாக இருந்தது. மோடியின் மொத்த தமிழ்நாட்டு பிரசாரத்தையும் அது காலி செய்துவிட்டது. தமிழ்நாட்டு மக்களை அன்பால் மட்டும்தான் ஆள முடியும் என்று சகோதரர் ராகுலுக்கு தெரியும். திராவிட இயக்கம் தோன்றிய பிறகுதான், 2 ஆயிரம் ஆண்டுகள் ஒடுக்கப்பட்ட சமூகமான நாம் முன்னேறி உள்ளோம். மறுக்கப்பட்ட கல்வி, வேலைவாய்ப்பை போராடி பெற்றுள்ளோம்.

பிரசாரம்

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மக்கள், அருந்ததியர் மற்றும் சிறுபான்மையினர் என அனைவருக்குமான ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வார். மீண்டும் மோடி வந்தால் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தை மாற்றுவார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு ஆபத்து, ஒட்டுமொத்த நாட்டுக்கே ஆபத்து. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. கலவரம் செய்வது பாஜக-வின் டி.என்.ஏ-வில் ஊறியது. திருப்பூரில் ஜி.எஸ்.டி குறித்து கேட்ட பெண்ணை பா.ஜ.க-வினர் தாக்கியுள்ளனர். திருப்பூரை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள். பா.ஜ.க போன்ற கலவரக் கட்சிகளை நுழையவிட்டால், அமைதி போய்விடும். மோடியும், பாஜக-வும் வீட்டுக்கும் கேடு… நாட்டுக்கும் கேடு. இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள், பாசிசத்தை வீழ்த்த இண்டியா கூட்டணியாக ஒன்று சேர்ந்துள்ளோம்.

ஸ்டாலின்

மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு புதிய இந்தியாவை உருவாக்குவதாக சொன்னார். பட்டினியால் தவிக்கும் நாடுகள் பட்டியலில் 115-வது இடத்தில் இந்தியா உள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபோது ரூ. 58 லட்சம் கோடி கடன். இன்றைக்கு ரூ.158 லட்சம் கோடி ஆகும். இந்த வீழ்ச்சிதான் மோடியின் சாதனை. மோடி ஆட்சியில் தானியங்கள் 54 சதவிகிதமும், பால் பொருள்கள் 50 சதவிகிதமும், எண்ணெய், காய்கறி விலை 48 சதவிகிதமும், மருத்துவ செலவுகள் 78 சதவிகிதமும், கல்விக்கான செலவு 60 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. இவைதான் மோடி சொன்ன வளர்ச்சியா? அதனால்தான் எந்த மேடையிலும் திட்டங்களையும், சாதனையும் சொல்ல முடியவில்லை.

ஸ்டாலின்

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில், மத்திய அரசு பாஜக நிதி நெருக்கடியை தாண்டி ஏராளமான சாதனைகள் செய்துள்ளது. அரசின் பல்வேறு நலத்திட்டங்களால், மாதம் ரூ.5,000 குடும்பங்களுக்கு போய் சேர்கிறது. திருப்பூருக்கும், கோவைக்கும் சென்றால் ஏதாவது வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். அப்படிப்பட்ட மேற்கு மண்டத்தில் மோடி நடத்திய இரட்டை தாக்குதல் தான் பணமதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி-யும். தமிழ்நாட்டு பாஜக-வுக்கும், பழனிசாமிக்கும் தான் பிரச்னை. பிரதமர் மோடியை எதிர்த்து பழனிசாமியால் கட்சி நடத்த முடியாது. ஆட்சியும் நடத்த முடியாது. இந்த தேர்தலில் பாஜக-வும், அவர்களது தொங்கு சதைகளும் படுதோல்வி அடைவார்கள். பாஜக-வையும், அதிமுக-வையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.