கே.பாலு, செய்தித் தொடர்பாளர், பா.ம.க

“சி.வி.சண்முகத்தின் கருத்தையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவரைப்போல் என்னால் கீழிறங்கிப் பேசவும் முடியாது. ‘அ.தி.மு.க-வின் பாரம் குறைந்துவிட்டது’ என்று இப்போது சொல்லும் அவர்தானே அய்யாவை, காத்திருந்து சந்தித்துப் பேசினார். சண்முகம் பா.ம.க-வை விமர்சிப்பதற்கு முன்பு, எதிர்கால அரசியலையும் மனதில்கொள்ள வேண்டும். 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்காக அ.தி.மு.க-வுக்கு நாங்கள் விட்டுக்கொடுத்தது அதிகம். நாங்கள் சார்ந்த சமுதாயத்தின் நலனுக்காக எங்கள் அரசியல் பலத்தையே இவர்களிடம் விட்டுக்கொடுத்திருக்கிறோம். 2019 இடைத்தேர்தலின்போது, யாருடைய ஆதரவில் ஆட்சி தொடர்ந்தது என்பதையெல்லாம் மறந்துவிட்டு அவர் இப்படிப் பேசுவது ஏற்புடையதல்ல. உட்கட்சி பிரச்னையில் ஆட்சியை இழந்தவர்கள் எங்களைக் காரணம் காட்டி, குளிர்காய்கிறார்கள். பா.ம.க எத்தனையோ முறை அ.தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. அதையெல்லாம் மறந்துவிட்டு, கடந்த தேர்தலில் எங்களுடன் அவர்கள் கூட்டணி வைக்கவில்லையா… விமர்சனம் செய்த கட்சிகளுடன் கூட்டணி வைக்காத கட்சியென்று எதுவும் தமிழகத்தில் இல்லை. எந்தப் பதவியும் வேண்டாம் என்று வாழும் எங்கள் அய்யாவின் குடும்பத்தின் மீது இப்படி அபாண்டமான குற்றச்சாட்டை வைப்பது கண்டிக்கத்தக்கது.”

கே.பாலு, கோவை சத்யன்

கோவை சத்யன், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க

“அண்ணன் சி.வி.எஸ் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். பா.ம.க-வின் பிரதான குடும்பத்திடம் பச்சோந்தி தோற்றுப்போகும். தேர்தல் வரும்போதெல்லாம் இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று எல்லா பக்கமும் பேசுவதும், கடைசியாக அவர்களுக்கு எதில் பயன் அதிகமோ அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்வதும் பா.ம.க-வின் வழக்கம். அதைத்தான் சி.வி.எஸ் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறார். கடந்த தேர்தலில் 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தி.மு.க ஒரு பொய்யான பிரசாரத்தை முன்னெடுத்தது. அப்போதுகூட இவர்கள் வாய் திறக்கவில்லை. எடப்பாடியார்தான் செல்லுமிடமெல்லாம் விளக்கம் கொடுத்தார். இட ஒதுக்கீடு கிடைத்ததும் அழுது புலம்பி வீடியோ வெளியிட்டவர், அதைப் பாதுகாக்க என்ன செய்தார்… ஒன்றுமே கிடையாது. வெறும் அறிக்கையில் மட்டும், ‘ஆட்சியமைப்போம்… மாற்றம் தருவோம்’ என்று பேசிவருகிறார்கள். மீண்டும் குடும்ப உறுப்பினருக்கு ராஜ்ய சபா சீட், மத்திய அமைச்சர் பதவி வேண்டுமென்று பா.ஜ.க-வுடன் கைகோத்திருக்கிறார்கள். ஓர் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து அதைச் சாதிக் கட்சியாகச் சுருக்கிவிட்டார்கள். சொந்தச் சமுதாய மக்களைத் தூண்டிவிட்டு அரசியல் செய்யும் இவர்கள் அந்த மக்களுக்கும் சரி… தமிழ்நாட்டுக்கும் சரி ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை.”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.