ஈரோடு மக்களவைத் தொகுதி சிட்டிங் எம்.பி-யாக உள்ளவர் கணேசமூர்த்தி. தனது அரசியல் வாழ்வை தி.மு.க மாநில மாணவரணி துணை அமைப்பாளராக தொடங்கி, ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட தி.மு.க செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளை கணேசமூர்த்தி வகித்துள்ளார். 1993-இல் தி.மு.க-விலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது அவருக்கு ஆதரவு தெரிவித்து கணேசமூர்த்தியும் தி.மு.க-விலிருந்து வெளியேறினார். ம.தி.மு.க தொடங்கப்பட்டதில் இருந்து ஈரோடு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கணேசமூர்த்தி, ம.தி.மு.க-வின் பொருளாளராகவும் இருந்துள்ளார். இதுவரை மூன்று முறை எம்.பி மற்றும் ஒருமுறை எம்.எல்.ஏ-வாக பதவி வகித்துள்ளார். தீவிர ஈழ ஆதரவாளரான கணேசமூர்த்தி, பொடா வழக்கிலும் சிறை சென்றுள்ளார்.

இந்த நிலையில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் மிக நெருக்கமாக இருந்த தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான கணேசமூர்த்தி, திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக ம.தி.மு.க-வைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம். “தி.மு.க-விலிருந்து பிரிந்த பிறகு காலப்போக்கில் பலர் மீண்டும் தி.மு.க-வில் இணைந்த நிலையில், கணேசமூர்த்தி மட்டும் வைகோவுடனே தொடர்ந்து பயணித்து வந்தார். வைகோ தனது தீவிர விசுவாசியான கணேசமூர்த்தியை மூன்று முறை மக்களவை உறுப்பினராக்கினார். 2019 மக்களவைத் தேர்தலிலும் ஈரோடு தொகுதியை கணேசமூர்த்திக்காக தி.மு.க-விடம் போராடி பெற்றார் வைகோ.

எம்.பி கணேசமூர்த்தி
துரை வைகோ-கணேசமூர்த்தி

அந்தத் தேர்தலில் கணேசமூர்த்தி தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், கணேசமூர்த்தி தி.மு.க உறுப்பினராக மாறிவிட்டதால், அவரிடம் இருந்த ம.தி.மு.க பொருளாளர் பதவி செந்திலதிபனிடம் வழங்கப்பட்டது. இந்த முறையும் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட கணேசமூர்த்தி தயாராக இருந்தார்.

இந்நிலையில், சென்னிமலை முருகன் கோயில் தொடர்பாக இரு மதத்தினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கணேசமூர்த்தி கருத்து தெரிவிக்காத நிலையில், தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக ம.தி.மு.க தலைமை அறிக்கை வெளியிட்டது.

தன்னிடம் கலந்தாலோசிக்காமல் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெறுமாறு வைகோவிடம் கணேசமூர்த்தி வலியுறுத்தி உள்ளார். அதற்கு வைகோ மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கணேசமூர்த்தியிடம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வைகோ சரிவர பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஈரோடு தொகுதியில் மீண்டும் போட்டியிட வைகோவிடம் கணேசமூர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதை வைகோ கண்டுகொள்ளாத நிலையில், ஈரோடு தொகுதியில் தி.மு.க களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும், கடந்த சில நாள்களாக தி.மு.க வேட்பாளர் பிரகாஷ் அறிமுகக் கூட்டத்திலும் கலந்துகொண்டுள்ளார் கணேசமூர்த்தி. திருச்சி வேட்பாளராக வைகோவின் மகனும் ம.தி.மு.க தலைமை நிலையச் செயலாளருமான துரை வைகோ அறிவிக்கப்பட்ட நிலையில், தன்னை தேர்தல் பணியாற்ற வைகோ அழைப்பார் என கணேசமூர்த்தி எதிர்பார்த்து இருந்தாராம். ஆனால், திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்கும் ம.தி.மு.க தலைமையிடம் இருந்து கணேசமூர்த்திக்கு அழைப்பு வரவில்லையாம்.

வைகோ – கணேசமூர்த்தி

`வைகோபோல எனக்கும் துரை வைகோ மகன்தானே… என்னை ஏன்? திருச்சி மாநாட்டுக்கு அழைக்கவில்லை’ என சகாக்களிடம் வேதனை தெரிவித்துள்ளார். வைகோவும் சரியாக தன்னிடம் பேசுவதில்லை என மன வருத்தத்தில் இருந்த கணேசமூர்த்தி, இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்கிறார்கள்” என்றனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், “அதிக அளவிலான மாத்திரைகளை உட்கொண்டு கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.