திருப்பத்தூர் மாவட்டம், தூய நெஞ்சக் கல்லூரியை சார்ந்த இளங்கலை பயிலும் மாணவர்கள் ஒய்.எஸ்.ஆர் என்ற அமைப்பை உருவாக்கி மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு சமூகப் பொதுப் பணிகளை செய்து வருகின்றனர்.

சாதாரணமாக நாம் படித்துக் கொண்டிருக்கும் போது மற்ற வேலைகளை செய்வதை அதிகமாக தவிர்ப்போம். ஆனால், படித்துக் கொண்டிருக்கும் போதே மரங்கள் நடுதல், சமூகப் பணிகள் செய்தல், போதைப் பொருள் தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சமூகப்பணிகளை செய்து அசத்தி வருகின்றனர். இவர்கள் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு குறு வனங்களை உருவாக்கி மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு பெற்றுள்ளனர்.

தூய நெஞ்சக் கல்லூரி | ஒய்.எஸ்.ஆர் மாணவர்கள்

யார் இந்த ஒய். எஸ்.ஆர் மாணவர்கள்?

தற்போது இந்த அமைப்பிற்கு, பி.காம் மூன்றாம் வருடம் படிக்கும் பெருமாள் என்ற மாணவர் பொறுப்பாளராக இருக்கிறார்.

“இந்த அமைப்பில் இப்போது 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். எங்களுக்கு முழு உதவியும், ஊக்கத்தையும் எங்கள் கல்லூரி வாங்குகிறது” என்கிறார் பெருமாள்.

சமூகத்தின் மீது அதிக அக்கறையுடன் இந்த அமைப்பைச் சார்ந்த மாணவர்கள் திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் மரங்களை நடவு செய்து வருகின்றனர். இது குறித்து ஒய்.எஸ்.ஆர் அமைப்பின் பொறுப்பாளர் பெருமாளிடம் கேட்ட பொழுது,

“இந்த ஒய்.எஸ்.ஆர் அமைப்பு ஐந்து வருடங்களுக்கு மேலாக செயல்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் இந்த அமைப்பால் எதுவும் பெரிதாக செய்ய முடியவில்லை. கொரோனா குறைய தொடங்கிய 2022 -ல் ஒரு சிறிய குறுவனம் உருவாக்க வேண்டும் என்று நோக்கம் இருந்தது. அப்போது நான் இந்த அமைப்பிற்கு ஜூனியர் ஆக வந்து சேர்ந்தேன். வெற்றிகரமாக அந்த குருவனம் அமைக்கப்பட்டது. மேலும், வருடம்தோறும் ஒரு குருவனத்தை உருவாக்குவது இந்த ஒய்.எஸ்.ஆர் அமைப்பின் நோக்கமாகும்” என்றார்.

தூய நெஞ்சக் கல்லூரி | ஒய்.எஸ்.ஆர் மாணவர்கள்

முதலாவதாக திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா, தும்பேரியை சேர்ந்த பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் நிலப்பரப்பில் மரம் நடவு செய்ய தகுந்த அதிகாரிகளிடம் அனுமதி பெற்று 22/05/2022 அன்று ஒய்.எஸ்.ஆர் அமைப்பைச் சார்ந்த 100 -க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் எம்.பி.சிவன் அருள் மற்றும் கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி துணை முதல்வர் முன்னிலையில் வேப்பு, புங்கன், தைலம், நாவல் போன்ற 500-க்கும் மேற்பட்ட மரங்களை நடவு செய்தது மட்டுமல்லாமல் தினந்தோறும் நடவு செய்த மரங்களுக்கு நகராட்சியில் இருந்து வரும் தண்ணீரை மோட்டார் உதவியால் நேரடியாக பைப் மூலமாக சென்று சேரும் வகையில் அமைத்து அசத்தியுள்ளனர்.

வறட்சியான காலங்களில் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் இந்த மாணவர்களே நடவு செய்த மரங்களை கண்காணித்தும், பராமரித்தும் வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், புள்ளானேரி ஊராட்சி பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 1.5 ஏக்கர் நிலத்தில் அனுமதி பெற்று, இந்த அமைப்பைச் சார்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 19/12/2023 அன்று நாவல்,வேப்பு என 1000 மரங்களை நடவு செய்தனர். இந்த மாணவர்கள் குறுவனங்களை அமைப்பது மட்டுமல்லாமல் மாதந்தோறும் அந்தக் குருவனங்களுக்குச் சென்று நடவு செய்த மரங்களை பராமரித்து வருகின்றனர்.

தூய நெஞ்சக் கல்லூரி | ஒய்.எஸ்.ஆர் மாணவர்கள்

அதுமட்டுமில்லாமல் 2019-ல் ஏற்படுத்தப்பட்ட “பசுமை இயக்கம்” என்ற அமைப்பும் , தூய நெஞ்சக் கல்லூரியும் சேர்ந்து திருப்பத்தூர் மாவட்டக் கிராமப்புறங்கள் மற்றும் ஏரிகளில் 4 வருடங்களில் ஒரு லட்சம் பனைவிதைள் நடவு என்ற இலக்கோடு துவங்கப்பட்டு இறுதி கட்டமாக கடந்த ஆண்டு 23.09.2023 அன்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மற்றும் தூய நெஞ்சக் கல்லூரி முதல்வர் முன்னிலையில் ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.