இன்றைய சூழ்நிலையில் எளிதில் கெட்டுவிடுவதற்கு வாய்ப்புள்ள பொருள்கள் என்றால் அது மலர்களும், காய்கறிகளுமே. காய்கறிகள் கூட பரவாயில்லை இரண்டொரு நாள்கள் தாங்கும். மலர்கள் அப்படியில்லை. குளிர்பதனக் கிடங்கு வசதி இல்லையென்றால் பாதுகாப்பது மிகவும் சிரமம். அதேபோன்று பூ மார்க்கெட், கோயில்களில் பயன்படுத்தப்படும் மலர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு வீணாகிவிடுகின்றன. இதை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வழிகாட்டுகிறது மத்திய மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களின் நிறுவனம்.

பசுமை விகடன் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர் மத்திய மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களின் நிறுவனம் இணைந்து சி.எஸ்.ஐ.ஆர் – புளோரி கல்ச்சர் திட்டத்தின் கீழ் லாபம் கொடுக்கும் மலர் மதிப்புக்கூட்டல்! நேரடி செயல்முறை பயிற்சி என்ற பெயரில் மலர் மதிப்புக்கூட்டலுக்கு வழிகாட்டும் விதமாக பயிற்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.

பயிற்சி அறிவிப்பு

இதுகுறித்து பேசிய பெங்களூருவில் உள்ள மத்திய மூலிகை மற்றும் நறுமண தாவரங்களின் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சுந்தரேசன், ” ‘வேஸ்ட் இஸ் வெல்த்’ (Waste is Wealth) அல்லது ‘வெல்த் ஃப்ரம் வேஸ்ட்’ (Wealth from Waste) என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான திட்டம். அந்த வகையில்தான் கோயில்களில் பயன்படுத்தப்பட்டு, அப்புறப்படுத்தப்படும் மலர்களிலிருந்து ஊதுபத்தி, தூபக் குச்சிகள் தயாரிப்பதற்குப் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். பெண்கள் மட்டுமில்லை. தொழில்முனைவோராக விரும்பக்கூடிய அனைவரும் இதில் பயன்பெறலாம்.

சுந்தரேசன்

மகாராஷ்டிரா மாநிலம், ஷீரடி சாய்பாபா கோயிலில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஷீரடி சாய்பாபா கோயிலில் ஒரு நாளைக்கு 2-2.5 டன் மலர்கள் வீணாக்கப்பட்டு வந்தன. மத்திய மருத்துவ மற்றும் நறுமணத் தாவர ஆராய்ச்சி மையத்தின் வழிகாட்டலுடன், அங்குள்ள ஜன்சேவா அறக்கட்டளை அமைப்பினர், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக… காய்ந்த மலர்களைப் பொடியாக்கி அதை ஊதுபத்தி தயாரிப்பதற்குப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கான தொழிற்கூடம் 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது நாட்டின் முன்னோடித் திட்டமாகப் பேசப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள நேதாஜி பூ மார்க்கெட் மிகவும் பெரியது. ஒரு நாளைக்கு 100 டன் அளவுக்கு மலர்கள் வருகின்றன. இதில் தினந்தோறும் 6 டன் மலர்கள் வீணாகின்றன. இந்த மலர்களைப் பயனுள்ள வகையில் கையாளும் விதமாக 4,500 சதுர அடி பரப்பில், 6 லட்சம் மதிப்பீட்டில், தொழிற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. வீணாகிக் கிடக்கும் மலர்களைப் பதப்படுத்திச் சாம்பிராணி குச்சிகள் தயார் செய்கிறார்கள். புனேவில் உள்ள மத்திய கருவிகள் பொறியியல் துறை, மூலிகை மற்றும் நறுமணத் தாவரங்கள் ஆராய்ச்சி மையம், விபா என்ற தன்னார்வ நிறுவனம் ஆகிய மூன்றும் இணைந்து அதைச் செயல்படுத்தி வருகிறது.

flower

கருவிகளின் உதவியோடு மலர்களைக் காயவைத்து, பவுடராக்குவது ஒரு செயல்முறை. கருவிகளின் உதவியின்றியும் மலர்களைக் காயவைத்துப் பவுடராக்கலாம். தமிழ்நாட்டில் மலர்களைப் பவுடராக்குவதற்கான தொழிற்கூடங்கள் எங்கேயும் நிறுவப்படவில்லை. முதற்கட்டமாகத் திருச்சி, சமயபுரம் மாரியம்மன், வெக்காளியம்மன் கோயில்களில் பயன்படுத்தப்பட்ட மலர்களைக் கொண்டு ஊதுபத்தி, தூபக் குச்சிகள் தயாரிப்பதற்கான பயிற்சிகளைப் பெண்களுக்கு, குறிப்பாக மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கியிருக்கிறோம்.

அறிவிப்பு

தன்னார்வ நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மறுசுழற்சி பயன்பாட்டில் ஆர்வமுள்ள நிறுவனங்கள், தொழில்முனைவோர், விவசாயிகள் எங்களை அணுகலாம். அதற்கு வழிகாட்டும் விதமாக செங்கல்பட்டில் பசுமை விகடனுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்திருக்கிறோம்” என்றார்.

பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
* மலர்களை காயவைத்து பவுடராக்கும் தொழில்நுட்பம்.
* பெண்கள் வீட்டிலேயே காய்ந்த மலர்களிலிருந்து அகர்பத்தி, கைவினை பொருள்கள் தயாரிப்பதற்கான வழிகாட்டல்.
* காய்ந்த மற்றும் வீணான மலர்களிலிருந்து என்னென்ன பொருள்களை தயாரிக்கலம்.
* மலர்களை மதிப்புக்கூட்டுவதற்கான கருவிகள் மற்றும் அவை கிடைக்கும் இடங்கள்.
* வாசனை திரவியம் தயாரிப்பதற்கு ஏற்ற மலர் வகைகள்
* வாசனை திரவியம் தயாரிப்பதற்கு ஏற்ற தாவர வகைகள்.
இடம், தேதி
நாள்: 8-2-24, வியாழக்கிழமை.
நேரம்: காலை 9.30 மணி முதல் 4 மணி வரை.
இடம்: பிரகாஷ்-சிவகாமி திருமண மண்டபம், பழைய பேருந்து நிலையம், செங்கல்பட்டு.

நிகழ்ச்சி அறிவிப்பு

யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்

பெண்கள், விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், தொழில்முனைவோர் ஆகியோர் கலந்துகொள்ளலாம்.

அனுமதி இலவசம், முன்பதிவு அவசியம்.
பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 99400 22128 என்ற எண்ணுக்கு பெயர், ஊர், மாவட்டம், செல்போன் எண்ணுடன் கூடிய விவரங்களை அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளவும்.

மதிய உணவு, தேநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு: 99400 22128

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.