தொழில் துறையில் சாதனையாளர்களையும், தொடர்ந்து சாதனை படைத்து வருபவர்களையும் கவுரவிக்கும் வகையில், பிப்ரவரி 2-ம் தேதி மாலை சென்னையில் நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருது விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் வானிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தமிழ்நாடு நிதித் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், தமிழகத்தின் முன்னணித் தொழிலதிபர்கள், சிறு தொழில்முனைவோர், பிசினஸ் ஆர்வலர்கள், நிதித் துறை சார்ந்த வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வரவேற்புரை ஆற்றிய விகடன் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் பா. சீனிவாசன், ”தமிழகத்தில் தொழிலைமுனைவை ஊக்கப்படுத்தி, தொழில் துறையில் தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக ஆக்குவதை லட்சியமாக கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

விருது பெற்ற எஸ்.வி.பாலசுப்பிரமணியம்

விழாவின் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன், “தொழிலதிபர்களுக்கு விருதுகள் ஏன் வழங்கப்படுகிறது என்றால்… அவர்களின் கடந்த கால நினைவுகள், அவர்கள் கடந்து வந்த பாதை, இலக்கை அடைந்த பின் சமூகத்திற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆகியவற்றை முன்வைத்துதான். இதற்காகத்தான் நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 7-வது ஆண்டாக மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மிக வேகமாக இருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு காரணம் தொழில்முனைவோர் எடுத்த முயற்சிகளே” என்றார்.

அடுத்ததாக, பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவரான எஸ்.வி.பாலசுப்பிரமணியத்துக்கு, Lifetime Achievement Award வழங்கி கவுரவித்தது நாணயம் விகடன். அவருக்கான விருதை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

விருதை பெற்றுக்கொண்ட எஸ்.வி.பாலசுப்பிரமணியம் பேசியபோது, “முதலில், சீரிய நோக்கம். எடுத்துக்கொண்ட வேலைக்கு உண்மையாக இருக்க வேண்டும். இரண்டாவதாக கடின உழைப்பு. கஷ்டப்படாமல் நமக்கு எதுவும் கிடைக்காது. மூன்றாவது, விடாமுயற்சி. இவற்றைக் கடைபிடித்தால் வெற்றிபெற முடியும்” என தன் வெற்றிக்கான ரகசியத்தை பகிர்ந்துகொண்டார்.

அடுத்ததாக, சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் டாக்டர் பி.சி.துரைசாமி மற்றும் டாக்டர் சாந்தி துரைசாமி தம்பதிக்கு Social Consciousness Entrepreneur Award வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவர்களுக்கான விருதை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

விருது பெறும் டாக்டர் பி.சி.துரைசாமி மற்றும் டாக்டர் சாந்தி துரைசாமி

”தொழில் நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். நம்மை உருவாக்கிய மக்களுக்கு நாம் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்வது நம் கடமை” என்றார் பி.சி. துரைசாமி.

“தரம் என்னும் தாரக மந்திரத்தை மட்டும் நாங்கள் இருவரும் விட்டுக்கொடுப்பதில்லை” என, சந்தை போட்டியை சக்தி மசாலா எதிர்கொள்ளும் ரகசியத்தை பகிர்ந்தார் சாந்தி துரைசாமி.

விருது பெறும் வி.பார்த்திபன்

பின்னர், ‘Focus and Frugality gives Prosperity’ என்ற தலைப்பில் கவனம் மற்றும் சிக்கனத்தின் முக்கியத்துவம் பற்றி தைரோகேர் நிறுவனர் வேலுமணி சிறப்புரையாற்றினார். அவர் பேசியபோது, “பொருளாதார பிரமிடில், மேலே பணக்காரன், கீழே ஏழை. இடையில் 10 பிரிவுகளை போட்டால், கீழே இருந்து மேலே வரை கடின உழைப்பால் வந்திருக்கிறேன். இதற்கு Focus-ம் Frugality-ம் தான் காரணம். இல்லை என்றால் ஒரு ஏழை விவசாயியின் மகன் தேசிய அளவில் ஒரு நிறுவனத்தை நடத்த முடியாது. விஞ்ஞானியாக வேலை செய்துவிட்டு தொழிலதிபர் ஆகியிருக்கிறேன். அரசு வேலை செய்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனம் தொடங்கியிருக்கிறேன். 25,000 புதியவர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறேம். புதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் வேலை கொடுங்கள். செலவு செய்துகொண்டே இருந்தால் நீங்கள் பிச்சைக்காரர் ஆகிவிடுவீர்கள். முதலீடு செய்துகொண்டே இருந்தால் நீங்கள் அரசனாகிவிடுவீர்கள்” என்றார்.

அடுத்ததாக, Bull Machines நிறுவனத்தின் நிறுவனரும், மேலாண்மை இயக்குநருமான வி.பார்த்திபனுக்கு Business Innovation Award வழங்கப்பட்டது. இவருக்கான விருதை தைரேகேர் வேலுமணி வழங்கினார். “எல்லா வெற்றிக்கும் மனநிலைதான் காரணம். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும். தன்னம்பிக்கை ஏற்படுவதற்கு அறிவு வேண்டும். பிரச்சினைகளை சந்தித்து, தவறுகளை கடந்து வருவதால் அறிவு வளரும்” என்று கூறினார்.

விருது பெற்ற ஃபியோ நிர்வாகிகள்

இதைத் தொடர்ந்து, ஏற்றுமதியாளர்களுக்கு வழிகாட்டி வரும் ஃபியோ (FIEO) அமைப்புக்கு Business Mentor (Institution) விருது வழங்கப்பட்டது. இதற்கான விருதை Startup TN அமைப்பின் சி.இ.ஓ சிவராஜா ராமநாதன் வழங்க, ஃபியோ அமைப்பின் தமிழ்நாடு பிரிவு துணைத் தலைவர் செல்வநாயகி பெற்றுக்கொண்டார். “இந்தியா நிறைய மூலப் பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. மாறாக, மூலப் பொருட்களை நாமே உற்பத்தி செய்ய முயற்சித்து வருகிறோம். இதனால் செலவுகள் குறையும்” என ஏற்றுமதி துறைக்கு தேவையான விஷயங்கள் பற்றி செல்வநாயகி பேசினார். விருது வழங்கிய சிவராஜா, தமிழகத்தில் ஸ்டார்ட் நிறுவனங்களின் வளர்ச்சி பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

விருது பெற்ற TiE Chennai இயக்குநர் அகிலா ராஜேஸ்வர்

தொடர்ந்து, தொழில்முனைவோருக்கு வழிகாட்டி வரும் TiE Chennai அமைப்பின் இயக்குநர் அகிலா ராஜேஸ்வருக்கு Business Mentor Award விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன் வழங்கி கவுரவித்தார்.

”வெற்றிபெறுவதற்கு மைண்ட்செட் தான் முக்கியம். முடியும் என நினைத்தால் முடியும். TiE Chennai என்றால் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மட்டும் ஆதரவு வழங்குவார்கள் என்ற சூழல் மாறி, தமிழ்நாடு முழுவதும் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் வரை ஆதரவு வழங்குவார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது” என்று கூறினார்.

”தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில் 10,000 பர்சனல் போர்டுகளை உருவாக்கி, ஒரு லட்சம் தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டுவதை லட்சியமாக செயல்படுகிறோம். இப்படிப்பட்ட வழிகாட்டும் முயற்சியில் அகிலா அவர்களின் பணி பாராட்டத்தக்கது” என்றார் கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன்.

விருது பெற்ற கவுதம் சரோகி

அடுத்து, சென்னையை சேர்ந்த Go Fashion நிறுவனத்தின் சி.இ.ஓ கவுதம் சரோகிக்கு Young Entrepreneur Award விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவருக்கு ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் வங்கியின் மேலாண்மை இயக்குநர் பி.என்.வாசுதேவன் விருது வழங்கி கவுரவித்தார்.

”20 வயதில் தொழில் தொடங்கியவன் நான். ஒரே ஒரு பொருளில் கவனம் செலுத்தி நிறுவனத்தை வளர்த்தோம். கவனமாகவும், சிக்கனமாகவும் தொழிலை நடத்தியதுதான் வெற்றிக்கான ரகசியம்” என்று சொன்ன கவுதம் சரோகி, பங்குச் சந்தையில் பட்டியலிட்டது வரை தனது தொழில் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

விருது பெற்ற கல்பாத்தி சுரேஷ்

Veranda Learning Solutions நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் கல்பாத்திக்கு Self Made Entrepreneur Award விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவருக்கான விருதை தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் வழங்கி சிறப்பித்தார். ”பிரச்னைக்கான தீர்வுகளைக் காண்பதே தொழில்களுக்கு முக்கியம்” என தனது பிசினஸ் சீக்ரெட்டைப் பகிர்ந்துகொண்டார் சுரேஷ் கல்பாத்தி.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு பற்றி உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் சிறப்புரையற்றினார். அவர் பேசியதிலிருந்து சில துளிகள்

“இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரம் தமிழ்நாடு. 28 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார மதிப்புள்ள மாநிலம். வெறும் 4 சதவிகித நிலப்பரப்பு, சுமார் 6 சதவிகித மக்கள் தொகை. ஆனால் நம் பங்களிப்பு நாட்டுக்கு முக்கியமானது. 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட தமிழ்நாட்டுக்கு மிக முக்கியம் மனிதவளம்.

உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்

தமிழ்நாட்டில் நிறைய கல்விக்கூடங்கள் இருக்கின்றன. அதில் படிப்பவர்கள் நல்ல நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவோடுதான் வெளியே வருகிறார்கள் என்ற விமர்சனம் இருக்கிறது. அதில் உண்மையின் சதவிகிதம் சற்று அதிகம். ஆனால், நிலைமை மாறி வருகிறது. தொழில்முனைவோர் இப்போது கல்வி நிறுவனங்களில் இருந்து வருகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளில் புத்தொழில்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிகளால் இந்தியாவில் நாம் கீழ்நிலையில் இருந்து சிறப்பாக செயல்படும் மாநிலமாக வளர்ந்திருக்கிறோம். தொழில்முனைவோரை உருவாக்குவதில் நமது வெற்றி அடங்கியிருக்கிறது” என்றார்.

உதயச்சந்திரனின் சிறப்புரையுடன், விருது வழங்கும் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

”நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருது விழாவின் மூலம் சிறப்பான பிசினஸ் வெற்றிக்கதைகளை அறிய முடிந்தது. இது எங்களுக்கு மிகப் பெரிய இன்ஸ்ப்ரேஷனாக அமைந்தது” என இந்த நிகழ்ச்சி வந்திருந்த பலரும் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டனர்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.