இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பேட்ஸ்மேனாக கருதப்படும் சூர்யகுமார் யாதவ்க்கு சில நாள்களுக்கு முன்பு ஜெர்மனியில் இடுப்பு அறுவை சிகிச்சை (Groin surgery) செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து தான் நலமாக இருப்பதாக சோஷியல் மீடியாவில் அவர் பதிவிட்டிருந்தார்.

KL Rahul

சூர்யகுமாருக்கு ‘ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா’ என்ற பிரச்னை இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதற்கு முன் இதே சிகிச்சையை கிரிக்கெட் வீரர் கே.ல். ராகுலும் ஜெர்மனியில் செய்துகொண்டார்.

விளையாட்டு வீரர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விளக்குகிறார், முடநீக்கியல் மற்றும் விளையாட்டு மருத்துவ சிகிச்சை (Sports Medicine) மருத்துவர் சத்யா விக்னேஷ்.

உடலில் உள்ள பலவீனமான துளைகளின் வழியாக உடல் உறுப்புகள் வெளியே வருவதுதான் ஹெர்னியா என்ற பிரச்னை. பெரும்பாலானவர்களுக்கு குடல் அவ்வாறு வெளியே வரும் பிரச்னை ஏற்படும். இதனைக் குடலிறக்கம் என்றும், ஆங்கிலத்தில் ‘அம்பிளிக்கல் ஹெர்னியா’ (Umbilical Hernia) என்றும் சொல்வார்கள்.

சூர்யகுமார் போஸ்ட்

சூர்யகுமார் யாவத்க்கு ஏற்பட்டிருப்பது Athletic Pubalgia எனப்படும் பிரச்னை. இந்தப் பிரச்னையானது விளையாட்டு வீரர்களுக்கு பொதுவாக ஏற்படும் என்பதால், இதை ‘ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா’ என்கிறார்கள் பேச்சு வழக்கில்.

அசாதாரண இடுப்பு இயக்கம் (abnormal hip movement), அல்லது இடுப்புக்கு அதிக வேலை கொடுக்கும் பணியில் ஈடுபடுவது போன்ற செயல்பாடுகளினால் அந்தப் பகுதியில் ஏற்படும் வலி, Athletic Pubalgia. இடுப்புப் பகுதியிலிருக்கும் எலும்பின் மேல் பகுதியிலிருக்கும் தசைகளில் சிறு காயம், நாள்பட்ட காயம் அல்லது தொடர்ச்சியாக அதே இடுப்பு பகுதியில் ஏற்படும் காயம் போன்றவற்றால் அந்த இடத்திலிருக்கும் திசுக்களில் வடுக்கள் உருவாகும். அவ்வாறு வடுக்கள் உருவாகும்போது வலி தொடந்து வலி ஏற்படுவதை Athletic Pubalgia என்கிறோம்.

விளையாட்டு வீரர்கள்்

அதிகமாக இடுப்புத் தசையைப் பயன்படுத்தி விளையாடும் கால்பந்து வீரர்கள், ஐஸ் ஹாக்கி வீரர்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக ஏற்படும்.

போதுமான ஓய்வு, ஐஸ் தெரபி, மருந்து மாத்திரைகள் மற்றும் உடற்பயிற்சிகள் போன்றவற்றால் இந்தப் பிரச்னையைக் குணப்படுத்த முடியுமா என்று முதலில் பார்க்கப்படும். அதில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் அடுத்ததாக, ஃபிஸியோதெரபி சிகிச்சை அறிவுறுத்தப்படும். தொடர்ந்து ஃபிஸியோதெரபி செய்யும்போது குணமடைய வாய்ப்புகள் உள்ளது. இந்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை, வலியும் குறையவில்லை என்றால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

முடநீக்கியல் மற்றும் விளையாட்டு மருத்துவ சிகிச்சை (Sports Medicine) மருத்துவர் சத்யா விக்னேஷ்.

இது சிறிய வகையான அறுவை சிகிச்சைதான். தசைகள் சேதமடைந்திருந்தால் அதனைச் சீரமைப்பது, தசைகள் இறுகி இருந்தால் அதை சரிசெய்வது, நரம்பு அழுத்தி இருந்தால் அதை சரிசெய்வது என, இவற்றில் எந்தப் பிரச்னை இருக்கிறதோ அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

பிரச்னை இருக்கும் பகுதியை முழுவதும் திறந்து செய்யப்படும் அறுவை சிகிச்சை (Open Surgery), சிறிய அளவில் திறந்து செய்யப்படுவது (Mini Open Surgery), நுண்துளைகள் மூலம் செய்யப்படுவது (Endoscopic Surgery) என மூன்று வகையில் அறுவை சிகிச்சை செய்யலாம். அறுவை சிகிச்சைக்குப் பிறகும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

Surgery (Representational Image)

பெரும்பாலும் ஆறிலிருந்து 10 வாரங்களுக்குள் பழைய நிலைக்கு வந்துவிடுவார்கள். மிகவும் அதிகமாக இடுப்புப் பகுதிக்கு வேலை கொடுப்பது, கடினமாக இடுப்பைத் திருப்புவது போன்ற விளையாட்டில் ஈடுபடும் போதுதான் இது ஏற்படுவற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பிரச்னை வராமல் தடுப்பதற்கு இடுப்பை வலுப்படுத்தும் உடற்பயிற்சி, ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சி போன்றவற்றை செய்ய வேண்டும்’’ என்றார் டாக்டர் சத்யா விக்னேஷ்.

– வ.மேரி இவாஞ்லின்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.