பார்வைக் குறைபாடு, மாறு கண், கேட்ராக்ட், சர்க்கரை நோயாளிகளைத் தாக்கும் டயபடிக் ரெட்டினோபதி எனப்படும் விழித்திரை பாதிப்பு… என்று கண்களில் உண்டாகும் பிரச்னைகள் ஏராளம். இவற்றைப் போலவே நாம் கவனம் கொடுக்க வேண்டிய முக்கிய கண் பிரச்னை ஒன்று இருக்கிறது. அது… கண் நீர் அழுத்த நோய். இதை ஆங்கிலத்தில் கிளாகோமா (Glaucoma) என்று கூறுவோம்.

கண் பரிசோதனை

கிளாகோமாவின் அறிகுறிகளைப் புறக்கணிக்கும்போது அதன் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, ஒரு கட்டத்தில் பார்வையே பறிபோகும் வாய்ப்புகள் இதில் இருப்பதால், இதுகுறித்து கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது மிகவும் அவசியமானது என்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் சௌந்தரம். பார்வையைப் பயமுறுத்தும் கிளாகோமா குறித்து அவர் பகிர்ந்துகொள்ளும் முக்கியத் தகவல்கள் இங்கே…

`கிளாகோமா’ அடிப்படை புரிதல் மிக அவசியம்!

எப்படி நம் உடலில் ரத்த அழுத்தம் உள்ளதோ, அதேபோல நமது கண்களிலும் உள்விழி அழுத்தம் (Intraocular pressure) என்பது உள்ளது. இந்த அழுத்தம் அதிகமாகும்போது அது கண்ணிலிருந்து மூளைக்குச் செல்லும் ஆப்டிக் நரம்பை (Optic nerve) பாதிக்கும். இதைத்தான் நாம் கிளாகோமா என்று சொல்கிறோம். கிளாகோமா பாதிப்புக்கு உள்ளானால், கண்ணுக்கு நேராக உள்ளவை தெரியும். ஆனால் பக்கவாட்டில் உள்ளவை கண்களுக்குத் தெரியாது. இந்த அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கும்போது கண் பார்வை பாதிக்கப்படத் தொடங்கி, ஒருகட்டத்தில் பார்வை முற்றிலுமாகப் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே வழக்கத்திற்கு மாறாக உங்களது பார்க்கும் திறனில் குறைபாடு தெரிந்தால் காலம் தாழ்த்தாமல் கண் மருத்துவரைச் சந்தித்திடுங்கள்.

மருந்தின் மூலம் கட்டுக்குள் வைக்கலாம்!

கிளாகோமா பிரச்னைக்கென இருக்கும் கண்களுக்கான சொட்டு மருந்தைப் பயன்படுத்துவதன் மூலமாக இந்த பாதிப்பை கட்டுக்குள் வைக்கலாம். எப்படி உயர் ரத்த அழுத்தப் பிரச்னைக்கு மருந்துகள் எடுத்து அதனைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்கிறோமோ, அதேபோல இந்தக் கண் சொட்டு மருந்தை மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப வாழ்நாள் முழுவதும் சரியாகப் போட்டுவர வேண்டும். இதன் மூலம் கண்களில் உள்ள Intraocular pressure அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கமுடியும்.

கண்

அதேபோல மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கண் மருத்துவரைச் சந்தித்து கண்களில் உள்ள பிரஷர் கட்டுக்குள் இருக்கிறதா என்பதையும் கவனமாகப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இதில் என்ன பெரிதாக வந்துவிடப் போகிறது என்று நினைத்து கவனமில்லாமல் இருந்தால், அது ஒருகட்டத்தில் பார்வையையே பறித்துக்கொள்ளும் என்பதால் இந்தக் கண் நீர் அழுத்த நோயைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்கவேண்டியது மிகமிக அவசியம்.

கண் பரிசோதனையை கட்டாயமாக்குங்கள்!

40 வயதைக் கடந்தவர்கள் எப்படி ஆண்டுக்கு ஒருமுறை ஹெல்த் செக்கப் செய்துகொள்கிறார்களோ, அதேபோல ஆண்டுக்கு ஒரு முறை அவசியம் கண் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. இதன் மூலம் கண்களில் ஏதேனும் பிரச்னை இருந்தால், அதைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து அதற்கேற்ற சரியான மருத்துவ சிகிச்சையைக் கொடுக்க முடியும். இதன்மூலம் உங்கள் கண்கள் பாதிப்படையாமலும் தடுக்கமுடியும்.

டாக்டர் சௌந்தரம்

சர்க்கரை நோயாளிகளும் கண்ணில் கொஞ்சம் கவனம் வையுங்கள்!

சர்க்கரை நோய்க்கும் கண்ணிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் ரத்த சர்க்கரையின் அளவை தொடர்ந்து கட்டுக்குள் வைத்துவரவேண்டும். இதற்காக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்க்கரை அளவையும், ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டியது மிகமிக முக்கியம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு விழித்திரையை பாதிக்கும் ‘டயபடிக் ரெட்டினோபதி’ எனும் பிரச்னை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால்அலட்சிய மனப்பான்மையைத் தவிர்த்து கவனம் செலுத்தி சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வேண்டும்’’ என்கிறார் கண் மருத்துவ நிபுணர் சௌந்தரம்.

– சு.கவிதா

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.