மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்று அழைக்கப்படும் MCU-வின் Phase 5 கடந்த வருடம் வெளியான ‘ஆன்ட்-மேன் அண்டு தி வாஸ்ப்: குவாண்டமேனியா’ படத்துடன் தொடங்கியது. படங்களைப் பொறுத்தவரையில் சமீபமாக எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கவில்லை என்றாலும் அதே யுனிவர்ஸ் தொடர்புடைய சீரிஸ்களில் MCU ஸ்கோர் செய்துதான் வருகிறது. Phase 5-ன் தொடக்கமாக வெளியாகிய ‘சீக்ரெட் இன்வேஷன்’ ஓரளவு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்க, அடுத்துவந்த ‘லோகி’யின் சீசன் 2 முதல் சீசன் போலவே பெரும் வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து ‘What If…?’ தொடரின் அடுத்த சீசனைக் கடந்த டிசம்பரில் வெளியிட்டார்கள்.

Echo Review

தற்போது முன்னர் வெளியான `ஹாக்ஐ’ சீரிஸின் ஸ்பின் ஆஃப்பாக, டேர்டெவிலின் கேமியோவோடு வெளியாகியிருக்கிறது `எக்கோ’ (Echo) என்ற மினி சீரிஸ். `ஹாக்ஐ’ தொடரில் இடம்பெற்ற மாயா லோபஸ் என்ற கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் கதையை 5 எபிசோடுகள் கொண்ட சீரிஸாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட்டுள்ளனர். ஒரே சிட்டிங்கில் `பின்ச் வாட்ச்’ செய்ய ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தொடர் மார்வெல் எதிர்பார்க்கும் வெற்றியைத் தருகிறதா?

‘ஹாக்ஐ’ தொடரின் நிகழ்வுகளுக்குச் சில மாதங்கள் கழித்துத் தொடங்கும் இதில், மாயா லோபஸ், வில்சன் ஃபிஸ்க்கின் கீழ் அடியாளாக இருக்கிறார். ஆனால், அங்கு நடக்கும் ஒரு தவற்றால் அவர் ஓடி ஒளிய வேண்டிய சூழல். முதலில் வேண்டா வெறுப்பாக ஒக்லாஹோமாவில் இருக்கும் தன் சொந்த ஊருக்குத் திரும்புபவர், பின்பு தன்னுடைய அமெரிக்கப் பூர்வகுடி கலாசாரத்தில் ஒன்றி, தன்னுடைய குடும்பத்திடமும் இனக்குழுவுடனும் தன்னை இணைத்துக் கொள்கிறார். விட்ட குறை, தொட்ட குறையாகப் பகை துரத்த, அதைச் சமாளிக்க மாயா என்னும் எக்கோ செய்யும் சாகசங்கள்தான் இதன் கதை.

Echo Review

மாயா லோபஸ் எனப்படும் எக்கோவாக அலக்குவா காக்ஸ். செவித்திறன் சவால் உடையவர், பிராஸ்தெடிக் கால் பொருத்தியவர். எக்கோவின் கதாபாத்திரமும் அத்தகைய சவால் கொண்டது என்பதால் ‘ஹாக்ஐ’ தொடர் வெளியான போதே அலக்குவா சிறப்பான காஸ்டிங் சாய்ஸாகப் பார்க்கப்பட்டார். அதில் எட்டு அடி என்றால் இதில் பதினாறு அடி பாய்வதற்கான வெளியை அவருக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது மார்வெல். ஸ்டன்ட் காட்சிகளும் அவரின் செயற்கைக் கால்களை உள்ளடக்கியதாகச் சிறப்பான ஒன்றாக அமைய, அலக்குவா அனைவருக்குமான இன்ஸ்பிரேஷனாக மிரட்டலான நடிப்பை வழங்கியிருக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு அவர் கொடுத்திருக்கும் உழைப்பு கற்பனைக்கு அப்பாற்பட்டது. நடிப்பைப் பொருத்தவரைப் பல உணர்வுகளை வெளிக்காட்டும் முகபாவங்களில் மட்டும் சறுக்குகிறார். அவரின் பாத்திரத் தன்மையே அப்படித்தானா, அல்லது அது நடிப்பிலிருக்கும் குறையா என்பதுதான் புலப்படவில்லை.

பிரதான வில்லன் கிங்க்பின் எனப்படும் வில்சன் ஃபிஸ்க் ரோலை மீண்டும் ஏற்றிருக்கிறார் வின்சன்ட் டோனோஃப்ரியோ. `நான் முன்னமாதிரி இல்ல, திருந்திட்டேன்’ என்பதாக மாயாவின் அன்பை மீண்டும் பெற முயலும் வெயிட்டான பாத்திரத்தை தன் நுண்ணுணர்வுகளை வெளிப்படுத்திச் சிறப்பாகத் தாங்கியிருக்கிறார். மாயாவின் சொந்தமும் சிறுவயது தோழியுமான பாணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டெவெரி ஜாக்கப்ஸ், பிஸ்கட்ஸாக வரும் கோடி லைட்னிங் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வட்டத்துக்குள் ஸ்கோர் செய்கின்றனர்.

Echo Review

இன்னும் ஏகப்பட்ட துணை கதாபாத்திரங்கள் வந்துபோனாலும் முதல் எபிசோடிலேயே தன் மிரட்டலான கேமியோவுடன் நம்மை நிமிர்ந்து உட்கார வைப்பது டேர்டெவில் எனப்படும் மேட் மர்டாக்கின் பாத்திரம்தான். அந்த ரோலுக்காகவே அளவெடுத்துச் செய்யப்பட்டதுபோல மீண்டும் கலக்கியிருக்கிறார் சார்லி காக்ஸ். அவரே மீண்டும் டேர்டெவிலாக வந்தாலும் கதைப்படி இது நெட்ப்ளிக்ஸ் டேர்டெவிலா, புதிதாக வரவிருக்கும் டிஸ்னி ப்ளஸ் ரீபூட்டில் வரவிருக்கும் டேர்டெவிலா என்பதில் குழப்பம் இருக்கவே செய்கிறது. ஆனால் அது குறித்தெல்லாம் யோசிக்க விடாமல் மாயாவுடனான ஆரம்ப ஸ்டன்ட் காட்சியில் வந்து ஒட்டுமொத்த அப்ளாஸையும் அள்ளிவிட்டுச் செல்கிறார்.

டேவ் போர்டரின் பின்னணி இசை, ஓப்பனிங் தீம் பாடலான ‘பர்னிங்’ போன்றவை மாயா மற்றும் மாயாவின் உலகத்துக்குத் தேவையான மாயாஜாலத்தைச் சேர்த்திருக்கின்றன. டெக்னிக்கலாக வழக்கம்போல குறை ஏதும் வைக்காத மார்வெல், ஒரு படத்துக்கான உழைப்பை இதிலும் போட்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்க சைகை மொழிக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து இணைத்திருப்பது கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மைக்கு வழிவகுக்கிறது. MMA ரக சண்டைகள்தான் மாயாவின் ப்ளஸ் என்றாலும் ‘ஆல் ஆக்‌ஷன்’ வகை சண்டைக் காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் மாயாவின் பின்கதை, குறிப்பாகச் சிறுவயதில் அவருக்கு பாணியுடன் ஏற்படும் பிரிவு, மீண்டும் வந்ததும் தன் குடும்பத்துடனும் கலாசாரத்துடனும் ஏற்படும் பிணைப்பு என அக உணர்வுகளுக்கும் மதிப்பளித்து திரைக்கதை அமைத்திருப்பது மற்றொரு ப்ளஸ்!

Echo Review

இதுக்கு ஸ்பின் ஆஃப் இது, அதுக்கு ஸ்பின் ஆஃப் இது, இதுக்கு சீக்குவல் இது, அதுக்கு பிரீக்குவல் எது எனக் குழப்ப ரேகைகளை கும்மியடிக்க வைக்கும் மார்வெல், இந்தத் தொடரிலும் அதே பார்முலாவைத்தான் பின்பற்றியிருக்கிறது. இந்தக் கதை தனியாகவே புரியும் என்றாலும் `ஹாக்ஐ’ தொடரின் முக்கிய நிகழ்வுகள், கொஞ்சம் டேர்டெவில் உள்ளிட்ட சில மார்வெல் கதாபாத்திரங்களின் அறிமுகம் அவசியமாகிறது. நேரடியாகப் படத்தின் யுனிவர்ஸோடு இது தொடர்புடையது என்பதால் நீங்கள் மார்வெல் படங்களின் தீவிர ரசிகர் என்றால் இதைப் பார்த்துவிடுவது ஒரு வகையில் அவசியமாகிறது. அதேபோல ஏற்கெனவே மற்ற தொடர்களை எல்லாம் பார்த்தவர்களுக்கு இதில் வரும் பல காட்சிகள் `ரீ-கேப்’ (இதுவரை…) உணர்வைத் தந்து சோதிக்கலாம்.

வில்சன் ஃபிஸ்க் – மாயா இருவருக்கும் இடையேயான மானசீக அப்பா – மகள் உறவை இன்னும் ஆழமாகவே காட்சிப்படுத்தியிருக்கலாம். அவெஞ்சர்ஸில் தானோஸ் – கமோரா காட்சிகள் சிறிதளவே என்றாலும், அதனுள்ளாகவே அவர்கள் உறவின் ஆழம் வெளிப்பட்டுவிடும். இங்கே ஐந்து எபிசோடுகள் இருந்தும் சொல்லிக்கொள்ளும் வகையில் அந்த எமோஷனைப் பயன்படுத்திக்கொள்ளாதது ஏமாற்றமே!

Echo Review

மொத்தத்தில் `வாண்டாவிஷன்’, `லோகி’ போலப் புதியப்பாதை அமைக்கும் தொடராக இது மிளிரவில்லை என்றாலும் மார்வெல்லுக்கான வெற்றி அதன் கதாபாத்திரங்களின் வலிமையான வேர்களில் இருக்கிறது என்று புரியவைத்த வகையில் கவனம் பெறுகிறது இந்த `எக்கோ’.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.