உலகின் மிகப் பெரிய ஜவுளி கண்காட்சி ஜெர்மனி பிராங்பர்ட் நகரில் தொடங்கியது. இந்தக் கண்காட்சியில் கரூரில் இருந்து 69 ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன.

“இந்தமுறை கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான ஆர்டர்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்று அந்த ஜவுளி கண்காட்சியில் கலந்துகொண்டுள்ள கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலகளவில் நடைபெறும் மிகப்பெரிய ஜவுளி கண்காட்சி ஜெர்மனி நாட்டில் உள்ள பிராங்பர்ட் நகரில் வருடந்தோறும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறுவது வழக்கம். உலகம் முழுவதும் இருக்கும் பல நாடுகளைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு, தங்களது உற்பத்தி ஜவுளிகளைக் காட்சிப்படுத்துவார்கள். இதற்காக, உலகம் முழுவதும் இருந்து வருகைதரும் பார்வையாளர்களும், தங்களுக்கு தேவையான ஜவுளிகளை ஆர்டர் கொடுப்பார்கள். இதனால், ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு உலகம் முழுவதும் ஒரே இடத்தில் இருந்து ஆர்டர் கிடைக்க வழிவகை கிடைக்கும்.

அந்த வகையில், இந்த கண்காட்சி நேற்று (09.01.2024) செவ்வாய்க்கிழமை 9 மணிக்கு பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது. இந்தக் கண்காட்சி 12-ம் தேதி மாலை 6 மணி வரை நடைபெறும். உலக பொருளாதார பின்னடைவு காரணமாக வீட்டு உபயோக ஜவுளித் தொழில் கடந்த 18 மாதங்களாக மிகவும் மந்தமடைந்துள்ள சூழலில், இந்தக் கண்காட்சி நடைபெற இருப்பதால், உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் இந்த கண்காட்சி தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் என மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். 3,000 – த்துக்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் இந்த கண்காட்சியில் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து 448 ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் அந்த கண்காட்சியில் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், இந்திய அளவில் வீட்டு உபயோகத் துணிகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற கரூர் நகரிலிருந்து 69 ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும், பானிபட் நகரில் இருந்து 135 நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தக் கண்காட்சிக்கு பார்வையாளர்களாக உலகம் முழுவதும் இருந்து வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை வாங்கும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் மற்றும் மொத்த கொள்முதல் நிறுவனங்கள் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் வர இருக்கின்றார்கள்.

இதுபற்றி, அந்த கண்காட்சியில் கலந்துகொண்ட கரூரைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம்.

“கடந்த வருடம் சுமார் 44,000 பார்வையாளர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்தார்கள். இந்த வருடத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ. 6000 கோடி அளவிற்கு ஜவுளி உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் கரூர் ஜவுளி நிறுவனங்கள், இந்த காட்சி மூலம் அடுத்த ஆறு மாதங்களுக்கு தேவையான ஒப்பந்தங்கள் கிடைத்து இன்னும் சில வாரங்களில் உற்பத்தியை தொடங்க முடியும் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளோம்.

ஜெர்மனி ஜவுளி கண்காட்சி

இந்திய ஜவுளி நிறுவனங்கள் இருக்கும் கண்காட்சி அரங்கை இந்திய ஜவுளித்துறை கைத்தறி மேம்பாட்டு பிரிவின் கமிஷனர் டாக்டர் பீனா மற்றும் இந்தியாவிற்கான பிராங்பர்ட் நகரின் கவுன்சில் ஜென்ரல் திரு ஙிஷி முபாரக் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கைத்தறி துணி ஏற்றுமதி ஊக்குவிப்பு கழகத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

கொரோனா லாக்டவுன், நூல் விலை ஏற்றம் உள்ளிட்டப் பல பிரச்னைகளால் கரூர் வீட்டுஉபயோகத்துணிகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் கடுமையான நலிவைச் சந்துள்ளன. இந்த வருடம் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் ஆர்டர்கள் கிடைக்கும்பட்சத்தில், பழையபடி கரூரில் ஜவுளி உற்பத்தி தொழில் வளர்ச்சியை சந்திக்கும். அங்கு கிடைக்கும் ஆர்டரைப் பொறுத்துதான் நிலவரம் தெரிய வரும்” என்றார்கள்.

இந்தக் கண்காட்சியில் நமக்கு அதிக ஆர்டர் கிடைத்தால், நமக்கு நல்ல விஷயம்தானே…!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.