`நம்ம பையன்’ வெப் சீரிஸில் `லவ் வித் ட்ரான்ஸ்ஜென்டர்’ என்கிற கான்செப்ட் வீடியோ யூடியூப் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பலரும் இந்தக் கான்செப்ட் வீடியோவை வரவேற்று பாசிட்டிவ் கமென்ட்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வெப் சீரிஸில் சந்திரா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் திருநங்கை கல்பனா. அவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.

திருநங்கை கல்பனா

“இப்ப வெளியில எங்கப் போனாலும் எல்லாருக்கும் சந்திரான்னுதான் தெரியுது. அது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. பொதுவா திருநங்கைனாலே எல்லாரும் ஒரு விதமான கண்ணோட்டத்தில்தான் பார்ப்பாங்க. இப்படி ஒவ்வொண்ணா சாதிச்சு ஒவ்வொருத்தரா முன்னேறும்போது எங்களையும் நார்மலான மனுஷங்களாகப் பார்க்க ஆரம்பிப்பாங்க. இப்ப ஆக்டிங்ல கல்பனான்னு ஒரு திருநங்கை இருக்காங்கன்னு பொதுமக்கள் சொல்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!” என்றவரின் கடந்த காலம் குறித்துக் கேட்டோம்.

“சர்ஜரி பண்றதுக்கு முன்னாடி என்ன சொல்றது, எப்படி சொல்றதுன்னு தெரியாம ஒரே குழப்பத்துல இருந்தேன். என்னுடைய திருநங்கை தோழி ஒருத்தர்கிட்ட எல்லாத்தையும் எடுத்துச் சொன்னேன். அப்ப எனக்கு யார் என்ன சொன்னாலும் நாம ஒரு பொண்ணு; உடனே சர்ஜரி பண்ணனும், பண்ணியே ஆகணுங்கிற அளவுலதான் இருந்தேன். அவங்க திருநங்கையாக இந்தச் சமூகத்தில் என்னென்ன விஷயங்கள் எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்னு எல்லாத்தையும் எடுத்துச் சொல்லி சர்வைவ் பண்ணிடுவியான்னு கேட்டாங்க. டிரான்ஸ் லைஃப் நீ நினைக்கிற மாதிரி இருக்காது ரொம்பவே கஷ்டமா இருக்கும்னு சொன்னாங்க. நான் பண்ணியே ஆகணும்னு முடிவா இருந்ததும் அவங்களும் என்னைப் புரிஞ்சிகிட்டு எனக்கு சப்போர்ட் பண்ணினாங்க. அவங்களுடைய உதவியால சர்ஜரி பண்ணிகிட்டு அவங்களோட இருந்தேன். பிறகு என் வீட்ல விஷயத்தை சொல்லவும் அவங்களும் என்னைப் புரிஞ்சிகிட்டு ஏத்துக்கிட்டாங்க.

திருநங்கை கல்பனா

எங்க லைஃப்ல நிறைய பேரன்ட்ஸ் வீட்ல எங்களை ஏத்துக்காம இருக்காங்க. எங்க புள்ள இறந்துட்டான்னு இன்னமும் சொல்லிட்டு வருஷக் கணக்கா பேசாம எல்லாம் இருக்காங்க. அதெல்லாம் ரொம்ப தப்பு. நாங்க வேணும்னேலாம் எதுவும் பண்ணல. எங்களுடைய ஹார்மோன் மாற்றம்தான் அது! அதுக்கு நாங்க எப்படிப் பொறுப்பாக முடியும்!

பொண்ணா இருந்தாதான், பையனா இருந்தாதான் கடைசி காலத்துல அம்மா, அப்பாவைப் பார்த்துக்கணும்னுலாம் இல்ல. நாங்களும் அன்பாகவே பார்த்துப்போம். என்னோட அம்மா, அப்பாவுக்காகச் சொந்தமா ஒரு வீடு கட்டிக் கொடுத்து நான்தான் அவங்களைப் பார்த்துட்டு இருக்கேன். ரொம்ப நல்லாவே அவங்களை நான் கவனிச்சிக்கிறேன். நான் ஆக்டிங் பண்றேன்னு அவங்களுக்கு ரொம்பவே பெருமை. அவங்களும் என் மேல உசுரா இருக்காங்க!” என்றவர் தொடர்ந்து பேசினார்.

திருநங்கை கல்பனா

காதல் ரொம்ப புனிதமான ஒன்று. இவங்களுக்குத்தான் லவ் வரணும்னுலாம் இல்ல. ஆண், பெண்ணுக்குமானது மட்டுமல்ல காதல். எங்களுக்கெல்லாம் காதல் வரக் கூடாதுன்னு சொல்றதுக்கான உரிமை யாருக்கும் கிடையாது. உண்மையா அன்பைக் கொடுத்து என்னோட கஷ்டத்திலும், சந்தோஷத்திலும் கூட இருக்கிற மாதிரியான ஒரு லைஃப் பார்ட்னர் கிடைச்சா போதும்! வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கும்!” என்றதும் வெப் சீரிஸ் குறித்துக் கேட்டோம்.

“மதன் என்னோட ஃப்ரெண்ட். அவனுக்கு என்னைப் பற்றி நல்லா தெரியும். இந்த புராஜக்டிற்காக என்கிட்ட கேட்டான். உண்மையாகவே நான்தான் ஹீரோயினான்னுலாம் கேட்டேன். ‘இந்தக் கேரக்டருக்கு நீ சரியா இருப்ப’ன்னு சொல்லித்தான் என்னை நடிக்க வச்சான். ஆரம்பத்தில் அவன்கிட்ட நிறைய பேர் இது ஒர்க்அவுட் ஆகுமா? எப்படி பண்ணுவனுலாம் கேட்டிருக்காங்க. ஆனாலும், கண்டிப்பா நல்லா வரும். நல்ல கான்செப்ட் எடுத்துப் பண்றோம், நிச்சயம் அதுக்கான வரவேற்பு இருக்கும்னு மதன் சொன்னான். அதே மாதிரி இன்னைக்கு நல்லாவே ரீச்சும் ஆகியிருக்கு.

திருநங்கை கல்பனா

இதுதான் ஆக்டிங்ல என் முதல் பயணம். நம்மளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. நம்ம பண்ற கேரக்டரும், நடிப்பும்தான் ஒரு நடிகைக்கு தேவையே தவிர அழகு முக்கியமில்லைன்னு பல நடிகர்கள் நிரூபிச்சிருக்காங்க. அப்படி நடிப்புல என்னுடைய பெஸ்டைக் கொடுத்ததாலதான் மக்களும் என் திறமையை மதிச்சு என்னை ஏத்துக்கிட்டாங்க! எங்கப் பார்த்தாலும் நீங்கதானே சந்திரான்னு கேட்பாங்க. அப்போதெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கும்.

நாங்க பண்ற வெப் சீரிஸ் கான்செப்டை சீரியலாக எடுக்கணும். அதுல எங்களுடைய கஷ்டத்தையெல்லாம் சொல்லணும்னு ஆசை. அதுமட்டுமில்லைங்க அது மாதிரி ஒரு சீரியலில் நான் நடிக்கணும்னும் ஆசை!” எனப் புன்னகைத்தவருக்கு பூங்கொத்து வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.

கல்பனா

படங்கள் – விக்னேஷ்

திருநங்கை கல்பனா நமக்கு அளித்த முழுப் பேட்டியைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.