திருக்கார்த்திகை தீபம் என்றாலே திருவண்ணாமலைதான் நம் நினைவுக்கு வரும். நினைத்தாலே முக்தி தரும் இந்த அற்புதமான தலத்தில் ஏற்றப்படும் பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஆகியவற்றைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள்.

பரணி தீபம் அதிகாலையில் ஏற்றப்படுவது வழக்கம். அருணாசலேஸ்வரர் சந்நிதியில் ஏற்றப்படும் ஐந்து தீபங்களே பரணி தீபங்கள் ஆகும். ஈசனின் ஐந்தொழில்களைக் குறிப்பிடும் வகையில் இந்த தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்படும். பரணி தீப தரிசனம் கண்டால் பாவங்கள் விலகும் என்பது ஐதிகம்.

இந்த ஆண்டு திருக்கார்த்திகை உற்சவம் நவம்பர் 17- ம் தேதி தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அதன் முக்கிய நாளான திருக்கார்த்திகை தினமான இன்று அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையார் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷத்துடன் பரணி தீபத்தைத் தரிசனம் செய்தனர்.

பரணி தீபம்

காலையில் பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மலைமீது மகாதீபம் ஏற்றப்பட இருக்கிறது. இதை தரிசனம் செய்ய 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதற்காக தீபக் கொப்பரை மலைக்கு மேல் கொண்டு செல்லப்பட்டுவிட்டது.

மாலை அருணாசலேஸ்வரர், கொடிமரம் அருகே அர்த்தநாரிஸ்வரராக எழுந்தருளிய சில நிமிடங்களில் மலையில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த மகாதீபத்தை தரிசனம் செய்வதற்காக இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே பக்தர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்பொருட்டு 14 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 50 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் கண்காணிக்கவும் 10 ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் நேற்றிலிருந்தே பணிகளைச் செய்துவருகிறார்கள்.

மகாதீபம்

இன்று மகாதீபத்தைத் தரிசனம் செய்வதும் கிரிவலம் வருவதும் விசேஷம் என்பதால் கிரிவலப் பாதையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே மக்கள் பாதுகாப்பாக கிரிவலம் வரவும் தரிசனம் செய்யவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருட்டு மற்றும் குற்றச் செயல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எல்.யி.டி. திரைகள் மூலம் காணொளிகள் ஒளிபரப்பட்டு வருகின்றன. காவல் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு 50 க்கும் அதிகமான சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.