தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகேயுள்ள மேலகரம், இயற்கை எழில் கொஞ்சும் பேரூராட்சியாகும். ஆண்டுதோறும் குற்றால சீசனுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தங்களின் அத்தியாவசியத் தேவைகளான காய்கறி, மளிகை, இறைச்சி போன்ற பொருள்களை வாங்குவதற்கு, மேலகரம் கடைவீதிகளுக்குத்தான் வந்து செல்வார்கள். மக்கள் நடமாட்டம் உள்ள வளர்ந்து வரும் பகுதியான மேலகரம் பேரூராட்சியில், பல்வேறு திட்டப் பணிகள் முடிவுற்ற நிலையில், இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராத நிலையில் உள்ளன.

மேலகரம்

இந்தப் பேரூராட்சிக்குட்பட்ட மயானத்தை மேலகரம், பாரதி நகர், NGO காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, மின் நகர், இந்திரா நகர், நன்னகரம், அம்மன் நகர் உள்ளிட்டக் குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றன. வளர்ந்து வரும் பேரூராட்சியான மேலகரத்தில் அடிப்படை வசதியான மயானம், பேரூராட்சி நிர்வாகத்தின் மோசமான பராமரிப்பால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலகரம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மயானத்தில் கொட்டப்பட்டு, மயானத்தில் உடல் எரியூட்டப்படும் இடம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால், கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, அந்தக் குப்பையிலிருந்து வெளியேறும் கழிவு நீர், அருகில் ஓடுகின்ற ஆற்றில் கலந்து நீரை மாசுபடுத்துகிறது.

மயானத்தின் முகப்புப் பகுதியில் அமைந்திருக்கும் படித்துறையில், துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும் வருபவர்கள் இந்தச் சுகாதார சீர்கேட்டால் நோய் பாதிப்பு அபாயம் ஏற்படுவதாக, அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், மயானத்தில் அமைந்திருக்கின்ற சலவைத் தொழிலாளர்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சுடலை மாட சுவாமி கோயிலில், விழாக்கள்கூட நடத்த முடியாத அளவுக்கு இந்தக் குப்பைகள் துர்நாற்றம் வீசுவதாக, அந்த மக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மயானத்தில் உடல்களை எரியட்டும் தொழிலாளர்களிடம் பேசியபோது, “மயானத்தில் குப்பைகள் அதிகமாக கொட்டப்படுவதால், குப்பைகளில் இருக்கின்ற உணவுப் பொருள்களை உண்பதற்காக மேலகரம் பகுதியில் இருக்கின்ற நாய்கள், கூட்டம் கூட்டமாக மயானத்திற்கு வருகின்றன. அப்படி வருகின்ற நாய்கள் கூட்டம், சிதையில் எரியூட்டப்படும் உடல்களை வெளியே இழுத்து, நாசம் செய்கின்றன. அதனால், இரவு முழுவதும் அங்கேயே இருந்து, உடல்கள் முழுமையாக எரியூட்டப்பட்ட பிறகே வீட்டுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதேபோல இங்கே குப்பைகளைக் கொட்டிச் செல்வதால், கடுமையான சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே, இந்தக் குப்பைகளை அகற்றி, இந்த மயானத்துக்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்தித் தர வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம்” என்றனர்.

மயானத்திற்கு செல்கின்ற பிரதான சாலையின் இடது புறம், குற்றாலம் கல்லூரி மாணவிகளின் விடுதி ஒன்று இருக்கிறது. அந்த விடுதிக்கு செல்லும் மாணவியர்களுக்கும் இந்த நாய்கள் கூட்டத்தினால் அதிகமான அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. மேலும் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என குப்பைகள் பிரித்து எடுக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் அரைக்கப்பட்டு உரமாக்குவதற்காக ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கழிவுகள் எரியூட்டப்பட்டு, காற்று மாசுபடுகிறது. தற்போது அரவை இயந்திரங்கள் பழுதுபட்ட நிலையில், திடக்கழிவு மேலாண்மை வளாகம் பயனற்றுக் கிடக்கிறது.

மொத்தத்தில் மேலகரம் பேரூராட்சியில் நிர்வாக சீர்கேட்டினால் நிலம், நீர் மாசுபடுகிறது. இறந்தவர்களின் இறுதிச்சடங்கைக்கூட உரிய மரியாதையோடு செய்ய முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.

இது குறித்து மேலகரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரியிடம் விளக்கம் கேட்க முற்பட்டபோது, அவரைச் சந்திக்க முடியவில்லை. பேரூராட்சி நிர்வாகிகள் அந்தக் குப்பைகளை வேறு இடத்திற்கு இன்னும் ஒரு வாரக்காலத்தில் மாற்றப் போவதாகக் கூறினர். இருப்பினும் இது பேரூராட்சியின் வழக்கமான பதில் என்பதால், இந்தப் பிரச்னைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என பொதுமக்கள் அவநம்பிக்கையுடன் உள்ளனர்.

இறுதிச்சடங்கிற்காக மயானத்திற்கு செல்லும் மக்கள், உடல் நலம் பாதிக்கப்படுவதால், பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம் செவிசாய்க்குமா?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.