பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும், அவரின் மனைவி அக்‌ஷதா மூர்த்தியும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் புகைப்படங்கள் இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் வைரலாகின. பண்டிகைக் கொண்டாட்டங்கள் முடிந்த அடுத்த நாளே தனது அமைச்சரவையில் முக்கிய நபராக இடம்பெற்றிருந்த சுயெல்லா பிரேவர்மேனின் பதவிக்கு வேட்டுவைத்திருக்கிறார் சுனக். அதோடு, பல அதிரடி மாற்றங்களையும் தனது அமைச்சரவையில் நிகழ்த்தியிருக்கிறார். முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனை அமைச்சரவையில் இணைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார் சுனக். அவரது இந்த அதிரடிகளுக்கான பின்னணி என்ன?

பறிபோன சுயெல்லாவின் பதவி!

பிரிட்டன் அரசின் உள்துறை அமைச்சராக இருந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன். கடந்த வாரம், பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு எதிராகவும், பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு அனுமதி வழங்கிய பிரிட்டன் காவல்துறைக்கு எதிராகவும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துவந்தார் சுயெல்லா. `பிரிட்டன் காவல்துறை இரட்டை வேடம் போடுகிறது. பாலஸ்தீன ஆதரவு வெறுப்புப் பேரணிகளைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது’ எனச் சொந்த அரசின் காவல்துறைக்கு எதிராகவே பேசியிருந்தார் சுயெல்லா. இதனால், கட்சிக்குள்ளிருந்தும், கட்சிக்கு வெளியிலிருந்தும் `சுயெல்லாவைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று ரிஷி சுனக்குக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இங்கிலாந்து அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன்

இந்த நிலையில், `சுயெல்லாமீது பிரதமருக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அவரது கருத்துகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை’ எனப் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, நவம்பர் 13-ம் தேதி அன்று, சுயெல்லாவை அதிரடியாகத் தனது அமைச்சரவையிலிருந்து நீக்கியிருக்கிறார் ரிஷி சுனக். தொடர்ந்து, தனது அமைச்சரவையைக் கலைத்துப்போட்டுப் பல மாற்றங்களையும் அவர் மேற்கொண்டிருக்கிறார்.

இவருக்கு பதில் இவர்..!

சுயெல்லாவுக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லிக்கு உள்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. கிளர்வலியின் வெளியுறவுத்துறையை யாரும் எதிர்பாராத வகையில் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு ஒதுக்கி, பிரிட்டன் அரசியலில் சூட்டைக் கிளப்பியிருக்கிறார் ரிஷி சுனக். மேலும், கருவூலத்துறைக்கு ஜான் கிளெனுக்கு பதிலாக லாரா ட்ராட்டை அமைச்சராக்கியிருக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஸ்டீவ் பார்க்ளேவை சுற்றுச்சூழல் துறைக்கு மாற்றியிருக்கிறார் சுனக். சுகாதாரத்துறை அமைச்சராக விக்டோரியா அட்கின்ஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இலாகா இல்லாத அமைச்சராக ரிச்சர்ட் ஹோல்டன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

டேவிட் கேமரூன்

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் அரசுப் பதவிக்கு வந்ததுதான் உலகம் முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது. 2010 முதல் 2016 வரை பல்வேறு அதிரடிகளைப் பிரதமராக மேற்கொண்டவர் டேவிட் கேமரூன். ரிஷி சுனக் அரசின் வெளியுறவுக் கொள்கைகள் பல்வேறு சவால்களைச் சந்தித்துவரும் நிலையில், இந்தப் பதவியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார் கேமரூன். “சுனக் அரசின் பல்வேறு கொள்கைகளில் முரண்பாடுகள் இருந்தாலும், அவர் ஒரு வலிமையான பிரதமர், முன்மாதிரியான தலைவர்” என்று சுனக்குக்குப் பாராட்டு தெரிவித்திருக்கிறார். ஒரு புறம் ரஷ்யா – உக்ரைன் போர், மறுபுறம் இஸ்ரேல் – ஹமாஸ் போரால் மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் பதற்றம் ஆகியவற்றை டேவிட் கேமரூன் எவ்வாறு கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பிரிட்டன் மக்கள் மத்தியில் கிளம்பியிருக்கிறது.

பின்னணி என்ன?

இந்த அமைச்சரவை மாற்றத்தின் பின்னணி விஷயங்கள் குறித்துப் பேசும் பிரிட்டன் அரசியல் பார்வையாளர்கள், “ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிமீது பிரிட்டன் மக்களுக்கு அதிருப்தி எழத் தொடங்கியிருக்கிறது. தொழிலாளர் கட்சியின் கைகள் ஓங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்துதான் இந்த மாற்றங்களை சுனக் மேற்கொண்டிருக்கிறார். அடுத்த ஆண்டு தேர்தலையொட்டி சில கணக்குகளை வகுத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, சுற்றுச்சூழல் பிரச்னைகளை மையமாகவைத்துப் பல விஷயங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், சுற்றுச்சூழல் துறையின் அமைச்சரை மாற்றியிருக்கிறார். டேவிட் கேமரூனை அமைச்சரவையில் இடம்பெறச் செய்து கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மேலும், தனக்கான ஒரு வலுவான அணியை அமைச்சரவையில் ஏற்படுத்தும் முயற்சியிலும் இந்த மாற்றங்களை ரிஷி சுனக் செய்திருக்கிறார்” என்கின்றனர்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

ரிஷி சுனக்கின் இந்த அதிரடி மாற்றங்கள், அவருக்குக் கைகொடுக்குமா என்பதை அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலின் முடிவுகள்தான் சொல்ல வேண்டும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.