மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவ்ராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், வரும் 17-ம் தேதி ஒரே கட்டமாக மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சட்டசபைத் தேர்தல் நடக்கும் என்றும் இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர், அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் விதிஷா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “2018-ம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் 114 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

அமித் ஷா, மோடி,

நீங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்து, பா.ஜ.க-வைப் புறக்கணித்தீர்கள். ஆனால், பிரதமர் மோடி, சிவராஜ் சிங் சௌஹான், அமித் ஷா ஆகியோர் சேர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி, உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் திருடினார்கள். கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியதன் மூலம், உங்கள் முடிவை, உங்கள் இதயத்தின் குரலை பிரதமர் மோடி நசுக்கி, உங்களுக்குத் துரோகம் செய்துவிட்டார். அதனால்தான் நாங்கள் பா.ஜ.க-வுடன் போராடுகிறோம்.

கர்நாடகாவைக் கொள்ளையடித்து, 40 சதவிகித கமிஷன் ஆட்சியை நடத்தி மக்களை ஏமாற்றினார்கள். அதனால் அவர்களை விரட்டினோம். கர்நாடகாவிலும், இமாச்சலப் பிரதேசத்திலும் அவர்களை விரட்டியடித்தோம். ஆனால் வெறுப்புடன் விரட்டியடிக்கவில்லை… வெறுப்பு எனும் அவர்களின் சந்தையில் அன்பு எனும் கடையின் மூலம் விரட்டினோம். நாங்கள் அகிம்சை வீரர்கள், அடிக்க மாட்டோம். எனவே, அவர்களுக்கு இந்த மாநிலத்திலும் இடமில்லை என்று சொல்கிறோம். இங்கும் 145 முதல் 150 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும்” எனத் தெரிவித்தார்.

ராகுல் காந்தி

2018-ம் ஆண்டு மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் 114 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சுயேச்சைகளின் ஆதரவைப் பெற்று காங்கிரஸ் ஆட்சியமைத்தது. ஆனால், கமல்நாத் முதல்வராகப் பதவியேற்று 15 மாதங்கள் கடந்த நிலையில், திடீரென 22 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ததால், ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் பா.ஜ.க ஆட்சியமைத்தது, குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.