விகடன் நிறுவனத்தின் முன்னாள் தலைமைப் புகைப்படக் கலைஞரான சு.குமரேசன், நீண்ட காலம் ‘விகடன்’ நிறுவனத்தின் புகைப்படக்காரராக இருந்தவர்.  

கருணாநிதி, சோனியா காந்தி

1991-ம் ஆண்டு ஃப்ரீலேன்ஸ் புகைப்படக்காரராக விகடனுக்காக புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தவர், சு.குமரேசன் என்ற சுந்தரேசன் குமரேசன். ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது, கருணாநிதி முதல்வராகப் பதவியேற்றது, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றது, எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றது என, தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் நிகழ்வுகளை புகைப்படங்களாகப் பதிவுசெய்தவர் சு.குமரேசன்.

சு.குமரேசனுக்கு இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளும் ஓரளவு பேசத் தெரியும். அதனால் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி எனப் பிற மாநிலங்களுக்கும் சென்று முக்கிய நிகழ்வுகளைப் புகைப்படங்களாகப் பதிவுசெய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டியவர்.

சோனியா காந்தி, ஜெயலலிதா

1999-ம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்றபோது, அதை நேரில் கண்டு விகடனில் பதிவுசெய்வதற்காக மூத்தப் பத்திரிகையாளரான ஞாநி கார்கிலுக்குச் சென்றார். அவருடன் சு.குமரேசனும் சென்றார். ஆனந்த விகடனிலும் ஜூனியர் விகடனிலும் கார்கில் போர் குறித்த நேரடி ரிப்போர்ட்டை ஞாநி எழுத, அதில் சு.குமரேசனின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் இடம்பெற்றன.

அது, ஒரு வாரகால அசைன்மென்ட். எனவே, கார்கிலிலிருந்து ஞாநி சென்னைக்குத் திரும்பிவிட்டார். ஆனால், அங்கேயே தங்கியிருந்து புகைப்படங்களை எடுத்ததுடன், கட்டுரைகளையும் எழுதி அனுப்பினார் சு.குமரேசன். குறிப்பாக, கார்கிலில் இருந்த தமிழர்களைச் சந்தித்து அவர்களிடம் பேட்டி எடுத்து சு.குமரேசன் எழுதிய கட்டுரை, தமிழ்நாடு முழுவதும் கவனம் பெற்றது.

கர்நாடகா நீதிமன்றத்தில் சசிகலா

போர்ச் சூழல் கொண்ட கார்கிலில் தங்கள் உறவினர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை, தமிழ்நாட்டிலுள்ள உறவினர்கள் அந்தக் கட்டுரையின் மூலமாக அறிந்து ஆறுதலடைந்தனர்.  

1999-ம் ஆண்டு நிகழ்ந்த விமானக் கடத்தல் சம்பவம், இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 178 பயணிகளுடன் நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்ட விமானத்தை, பயங்கரவாதிகள் காந்தஹாருக்குக் கடத்திச் சென்றனர்.  

விஜயகாந்த் ஜெயலலிதா

பயணிகளை மீட்பதற்காக தாலிபன் இயக்கத்தினருடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, உடனடியாக டெல்லிக்குச் சென்று, அந்த விவகாரம் குறித்து சுடச்சுட விகடனில் கட்டுரைகள் எழுதினார் சு.குமரேசன்.

குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது, அங்கு சென்று புகைப்படங்கள் எடுத்துவந்தார். 1998-ம் ஆண்டு மத்தியிலிருந்து வாஜ்பாய் அரசு கவிழ்ந்த நேரத்தில், டெல்லிக்குச் சென்று அவர் எடுத்த எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள், விகடனில் பிரசுரமாகின.

கருணாநிதி, அமிர்தானந்தமாயி

சு.குமரேசன் ஒரு கிரிக்கெட் பிரியரும்கூட, சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகளின் புகைப்படங்களை விகடனில் பதிவுசெய்திருக்கிறார்.

ஜெயலலிதா, ஜெயேந்திர சரஸ்வதி

கருணாநிதி, ஜெயலலிதா, ஜி.கே.மூப்பனார், வைகோ, விஜயகாந்த், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அரசியல் ஆளுமைகளுக்கு தனிப்பட்ட முறையில் சு.குமரேசனை நன்கு தெரியும். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தொடர்புடைய முக்கியமான பல அரசியல் நிகழ்வுகளை தன் கேமராவில் பதிவுசெய்தவர் சு.குமரேசன்.

கருணாநிதி, ராஜாத்தி அம்மாள்

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியின் உயிர் பிரிவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு ஜூனியர் விகடனில் ‘எழுந்து வா தலைவா’ என்ற தலைப்பில் அட்டைப்படம் இடம்பெற்றது.

கதவோரம் நின்றவாறு மனைவி தயாளு அம்மாள் வழியனுப்ப… அவரைப் பார்த்துக்கொண்டு கருணாநிதி நிற்பது போன்ற அந்தப் புகைப்படம், பலரின் கவனத்தை ஈர்த்தது. அது குமரேசன் எடுத்த புகைப்படம்.  

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற மரபுக்கவிஞரான மகா மதுரகவி வீ.வே.முருகேச பாகவதரின் பேரன் சு.குமரேசன். எல்லோரிடமும் அன்பாகப் பழகக்கூடிய சு.குமரேசன்,  தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்து செயல்பட்டுவந்தார்.

கருணாநிதி, புட்டபர்த்தி சாய்பாபா, தயாளு அம்மாள்
ஜெயலலிதா, ஜெயேந்திர சரஸ்வதி
நரசிம்ம ராவ், ஜெயலலிதா
ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா
கருணாநிதி உண்ணாவிரதம்
கருணாநிதி, அமிர்தானந்தமாயி
சு.குமரேசன்

சென்னை வில்லிவாக்கத்தில் வசித்துவந்த சு.குமரேசன், நவம்பர் 8-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

காலப்பதிவுகளாக அவர் எடுத்த சில புகைப்படங்களை இங்கே பகிர்ந்திருக்கிறோம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.