தெலங்கானா மாநிலம், 119 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்டது. இங்கு பி.ஆர்.எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திர சேகர ராவ் இருக்கிறார். அவரது சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வருவதையொட்டி, வரும் 30-ம் தேதி அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்படுகின்றன. ஆளும் பி.ஆர்.எஸ் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையில்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. தேர்தல் பிரசாரங்களின்போது இரு கட்சிகளின் தலைவர்களும் `ஆட்சியைப் பிடிப்போம்’ என ஆருடம் தெரிவித்து வருகிறார்கள்.

கே.சி.ஆர்

“தெலங்கானா காலேஸ்வரம் அணைக்கட்டு திட்டத்தில் லட்சம் கோடி ரூபாய் முறைகேடு செய்திருக்கிறது, சந்திர சேகர ராவ் அரசு. பி.ஆர்.ஸ்-பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளும் இணைந்து தெலங்கானா மாநில மக்கள் பணத்தை ரூ.1 லட்சம் கோடி வரை மோசடி செய்துள்ளன. இதனால் 2040 வரை ஒவ்வொரு குடும்பத்தினரும், தலா ரூ.31,000 வரை ஒவ்வொரு ஆண்டும்கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் உருவானதால் சந்திர சேகர ராவின் குடும்பம் மட்டுமே பயனடைந்ததுள்ளது. வருவாய்த்துறையில் முறைகேடு, மதுபான ஊழல், மணல் கொள்ளை போன்றவை தெலங்கானாவில் அதிகரித்துள்ளன.

தெலங்கானாவை பொறுத்தவரையில் காங்கிரஸ்- பி.ஆர்.எஸ் கட்சிகள் இடையேதான் போட்டி. பா.ஜ.க-பி.ஆர்.எஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய 3 கட்சிகளும் மறைமுகமாக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. சந்திர சேகர ராவ் பா.ஜ.க-வுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளிக்கிறார். ஜி.எஸ்.டி உட்பட பல்வேறு மசோதாக்களுக்கு பி.ஆர்.எஸ் ஆதரவு அளித்திருக்கிறது. சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகளுக்கு பயந்துதான் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்து வருகிறார், சந்திர சேகர ராவ். இவர்களுக்கு காங்கிரஸ்தான் முதல் எதிரி. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் ஏ.ஐ.எம்.ஐ.எம் தேர்தலில் போட்டியிட்டது. இதனால் காங்கிரஸுக்கு நஷ்டம், பா.ஜ.க-வுக்கு லாபம். எனவே அந்தக் கட்சி மறைமுகமாக பா.ஜ.க-வுக்கு உதவி வருகிறது” என பிரசார பொதுக்கூட்டத்தில் வெடித்திருந்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி

இதேபோல் சந்திர சேகர ராவ், “மத்திய பா.ஜ.க அரசு அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத் உட்பட பல மாநிலங்களில் தலித்துகள்மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள். தலித் மக்களை சில அரசியல் கட்சிகள் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. என்ன நடத்தாலும் நாங்கள்தான் மீண்டும் தெலங்கானாவில் வெற்றி பெறுவோம். எங்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதை மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நலத்திட்டங்களை ரத்து செய்துவிடுவார்கள்” எனக் கொதித்திருந்தார். இதற்கிடையில் சமீபத்தில் வெளியான தகவல்கள், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இருப்பதால், பலரும் அந்த கட்சியில் இணைத்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இவர் அந்த மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார். ஷர்மிளா தன்னுடைய கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்போகிறார் என்ற பேச்சுகள் அண்மையில் திடீரென எழுந்தன. இதற்கிடையில் கடந்த செப்டம்பரில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார் ஷர்மிளா. இந்த நிலையில் தற்போது, ”தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. தேர்தலில் வாக்குகள் பிளவுபடுவதைத் தடுக்க காங்கிரஸுக்கு எனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளேன். தெலங்கானா மக்கள் கே.சி.ஆரின் தவறான ஆட்சியால் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர், அவரின் கொடூரமான ஆட்சியைக் கவிழ்க்கத் மக்கள் தயாராக உள்ளனர்” எனப் பேசியிருக்கிறார்.

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கான வாக்கு சேகரிப்பில் முரளிதரன்

இதையடுத்து ஷர்மிளா நகர்வின் வியூகம் என்ன என்பது குறித்த கேள்வியை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரும், தெலங்கானா காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளருமான ஜி.கே.முரளிதரனிடம் எழுப்பினோம், “அகில இந்திய அளவில் பா.ஜ.க-வை எதிர்த்து நிற்கக்கூடிய காங்கிரஸ் கட்சிக்கு, பிற கட்சிகள் ஒன்றிணைந்து ஆதரவு கொடுத்தால் மட்டுமே, நோக்கம் வெற்றி பெறும். ஓட்டுகள் சிதறக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். அதை மிகத்தெளிவாக புரிந்துகொண்டு இருக்கிறார், ஷர்மிளா. எந்த அரசியல் கட்சித் தலைவருக்கும் இல்லாத அட்டகாசமான பார்வை அவருக்கு இருக்கிறது. `நான் போட்டியிட்டு ஓட்டை பிரித்தாலோ, வேறு கூட்டணியில் இருந்தாலோ மீண்டும் சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு வருவது தவிர்க்கமுடியாததாகிவிடும்’ எனக் கூறியிருக்கிறார். அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது காங்கிரஸின் கடமை” என்றார்.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “அவர் காங்கிரஸில் இணைய வேண்டும் என்பதற்காக சோனியா, ராகுல் காந்தியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தன்னை தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால், ஷர்மிளாவின் பலம் என்ன என்பது தேர்தலில் இன்னும் நிரூபிக்கப்படாததால், அவர்கள் மறுத்துவிட்டனர். அதற்கே ஏற்கெனவே அங்கு பொறுப்பில் இருப்பவர்களை பகைத்துக்கொள்ள காங்கிரஸ் விரும்பவில்லை. அதனால்தான் கூட்டணிகூட வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

ப்ரியன்

தற்போது காங்கிரஸுக்கு ஆதரவான காற்று தெலங்கானாவில் வீசுகிறது. இந்த நேரத்தில் தனியாக தேர்தலை சந்தித்தால் அனைத்து இடங்களிலும் ஷர்மிளா டெபாசிட்டை இழப்பார். எனவேதான் ஆதரிக்கிறார். காங்கிரஸுக்கு இதனால் பெரிய பலம் கிடைத்துவிடாது. ஒரு தொகுதியில் 1,000 வாக்குகள் கிடைத்தால்கூட நல்லதுதானே. அந்த அளவில்தான், அவர் காங்கிரஸுக்கு உதவியாக இருப்பார். ஆனால், சோனியாவுக்கும் ஷர்மிளாவுக்கும் இடையில் நல்ல நட்பு இருக்கிறது. எனவே கொஞ்சம் காத்திருங்கள், பிறகு பார்க்கலாம் என அவர்கள் சொல்லியிருக்கக்கூடும். அதனால் ஆதரவு தெரிவிக்கிறார்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.