நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த கோகோபேலட் இன்டர்நேஷனல் (CocoPallet International) எனும் நிறுவனம், தேங்காய் நாரிலிருந்து கோகோ ஷிப்பிங் தட்டுகளை உருவாக்குகிறது. இதைப் பின்பற்றி, ஈரோடு மாவட்டத்தின் வளங்களில் ஒன்றான தேங்காயிலிருந்து பெறப்படும் தென்னை நார் மற்றும் அதனுடைய மஞ்சியைப் பயன்படுத்தி பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய மற்றும் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பயன்படுத்தப்படும் கோகோ ஷிப்பிங் தட்டுகளைத் தயாரிக்கலாம்.

உலகம் முழுவதும் ஆண்டொன்றுக்கு சுமார் 500 கோடி மரத்தட்டுகளுக்காக 50 கோடி மரங்கள் அழிக்கப்படுகின்றன என்கிறது ஓர் ஆய்வறிக்கை. இதைத் தடுக்கும் வகையிலும் மாற்றாகவும் கோகோ ஷிப்பிங் தட்டுகளை சந்தையில் அறிமுகம் செய்யலாம்.

கோகோ ஷிப்பிங் தட்டுகளைத் தயாரிக்கும் முறை எளிதானது. தென்னை நாரைச் சுத்தம் செய்து, உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றுடன் மஞ்சியைச் சேர்த்து அதனுடன் லேடக்ஸ் (Latex) அல்லது பிசினைச் (Resin) சேர்த்து, கலக்க வேண்டும். இந்தக் கலவையைத் தேவையான வடிவங்களில் உள்ள அச்சுகளில் ஊற்றி, மிதமான சூட்டுடன் கம்ப்ரஸ் செய்ய வேண்டும். பின்னர், அச்சுகளிலிருந்து தட்டுகளை வெளியே எடுத்து, அவற்றை உலர வைத்தால், கோகோ ஷிப்பிங் தட்டுகள் தயாராகிவிடும்.

இந்தத் தட்டுகள் எளிதில் புதுப்பிக்கத்தக்க (Renewable) ஒன்று என்பதோடு, இவை மரத்தால் உருவாக்கப்படும் தட்டுகளைப்போல வலுவானதாகவும் நீடித்து உழைக்கக் கூடியதாகவும் இருக்கும்.

பொதுவாக, மரம், பிளாஸ்டிக், உலோகம் போன்றவற்றில் உருவாக்கப்படும் தட்டுகளை ஏற்றுமதி செய்யும்போது அவற்றின் எடையைக் கணக்கில்கொண்டே கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், பிற பொருள்களைக் காட்டிலும் கோகோ ஷிப்பிங் தட்டுகள் எடை குறைவானது என்பதால், ஏற்றுமதி செய்யும்போது போக்குவரத்து செலவுகள் குறையும் என்பதோடு, பிறவற்றைக் காட்டிலும் விலையும் மலிவானது. எனவே, வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்கலாம். இவைமட்டுமன்றி, கோகோ ஷிப்பிங் தட்டுகள் எளிதில் மக்கும் தன்மை கொண்டதால், சுற்றுச்சூழலுக்கும் ஏற்றதாக இருக்கும். ஆகவே, இதற்கான தொழிற்சாலையை, ஈரோடு மாவட்டத்தில் அமைக்கலாம்.

ஈரோடு மாவட்டத்தில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டிருக்கின்றன. ஏக்கர் ஒன்றுக்கு தோராயமாக 10,000 தேங்காய்கள் வீதம் ஆண்டுதோறும் ஏறக்குறைய 10 கோடி தேங்காய்கள் உற்பத்தியாகின்றன. இவற்றிலிருந்து சுமார் 5 கோடி தேங்காய்களின் மட்டையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வழக்கமாக, ஒரு தேங்காயிலிருந்து தோராயமாக 55 கிராம் அளவுக்கு தென்னை நார் கிடைக்கிறது. இந்த அளவின்படி 5 கோடி தேங்காய் மட்டையிலிருந்து ஏறக்குறைய 2,750 டன் அளவுக்கு நார் கிடைக்கும். ஒரு கோகோ ஷிப்பிங் தட்டு தயாரிக்க 2.5 கிலோ நார் தேவைப்படுகிறது. அந்த வகையில், மொத்த டன்னிலிருந்து 11 லட்சம் கோகோ ஷிப்பிங் தட்டுகளை உற்பத்தி செய்யலாம்.

ஒரு தட்டின் விலையை 275 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, சந்தையில் விற்பனை செய்து, ஆண்டொன்றுக்கு 30 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வாய்ப்பைப் பெறலாம்.

தமிழ்நாட்டின் தொழில் நகரங்களில் ஒன்றான ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி, பொறியியல், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்திருக்கின்றன. இந்த ஆலைகளிலிருந்து நெகிழி, உலோகம், காகிதம் போன்ற கழிவுகள் அதிக அளவில் ஒதுக்கப்படுகின்றன. நகராட்சி திடக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் இரண்டும் சேர்த்து நாளொன்றுக்கு சுமார் 300 டன் அளவுக்கு கிடைக்கின்றன. இவ்வகையான தொழிற்சாலைகளிலிருந்து கழிவுகளைப் பெற்று, அவற்றை மறுசுழற்சி செய்து பேக்கேஜிங் பொருள்கள் (Packaging), வீட்டு உபயோகம், அலுவலகம், விளையாட்டு, கட்டுமானப் பொருள்கள், பூங்கா பெஞ்சுகள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கலாம்.

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்திலுள்ள டெர்ராசைக்கிள் (Terracycle) கழிவு மேலாண்மை நிறுவனம், சுமார் 200 நிறுவனங்களுடன் கைகோத்து, திடக்கழிவுகளைப் பெற்று, ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களை உருவாக்குகிறது. இதை ‘டெர்ராசைக்கிள் ஜீரோ வேஸ்ட் பாக்ஸ் திட்டம்’ (Terracycle Zero Waste Box program) என்ற பெயரில் அந்த நிறுவனம் அழைக்கிறது. கழிவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட பொருள்களைச் சந்தையில் விற்பனை செய்து வருமானமும் பெறுகிறது.

இந்த நிறுவனத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, திடக்கழிவுகள் மறுசுழற்சி தொழிற்சாலையை ஈரோட்டில் அமைத்து, அவற்றிலிருந்து பல்வேறு பயன்படுத்தத்தக்க பொருள்களை உருவாக்கி, விற்பனை செய்து ஆண்டொன்றுக்கு பல லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானம் பெறுவதோடு, ஈரோடு மாவட்டத்தின் பொருளதாரத்தையும் உயர்த்தலாம்!

(இன்னும் காண்போம்)

நம் அடுத்தக் `கனவு’ திருப்பூர்…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.