ஹாரர் திரில்லரான ‘ராஜு கரி கதி’ என்ற தெலுங்குப் பட வரிசை புகழ் இயக்குநர் ஓம்கர் இயக்கியிருக்கும் வெப் சீரிஸ் இந்த ‘மேன்ஷன் 24’. இந்த சீரிஸ் கிட்டத்தட்ட ஆந்தாலஜி வடிவில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. கொரியப் படைப்பான ‘Ghost Mansion’ என்ற படத்தை அப்படியே நம்மூருக்கு ஏற்றதாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள்.

Mansion 24 Review

வரலட்சுமி சரத்குமார், சத்யராஜ், பிந்து மாதவி, நளினி, ராவ் ரமேஷ் எனப் பல பரிச்சயமான முகங்கள் நடித்திருக்கும் இந்த திகில் வெப் சீரிஸ் பயமுறுத்துகிறதா?

புலனாய்வு பத்திரிக்கையாளராக வரலட்சுமி சரத்குமாரும், தொல்லியல் ஆய்வாளராக சத்யராஜும் களமிறங்கியுள்ளனர். காணாமல் போன தந்தையை மீட்டு அவர் மீது வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டைக் களைவதற்காக முற்படும் மகளை மையப்படுத்தியதுதான் இந்த வெப் சீரிஸ்.

பல தேடல்களுக்குப் பிறகுத் தனது தந்தை பல மர்மங்கள் நிறைந்த ஒரு மேன்ஷனுக்கு சென்றதாகத் தெரியவந்து அங்குச் செல்கிறார் மகள் அமிருதா (வரலட்சுமி). அந்தப் பாழடைந்த மேன்ஷனை ஒரு வாட்ச்மேன் பாதுகாக்கிறார். அவர் அந்த மேன்ஷனின் ஒவ்வொரு அறைகளின் மர்ம கதைகளையும் சொல்லச் சொல்ல, அவை அனைத்தும் இந்த வெப் சீரிஸின் ஒவ்வொரு எபிசோடுகளாக விரிகின்றன.

Mansion 24 Review

புலனாய்வு பத்திரிகையாளராக ஒவ்வொரு மர்ம கதைகளின் பின்னணியை அலசும் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி நடித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். சிறிது நேரமே வந்தாலும் தனது வழக்கமான முத்திரையைப் பதிக்கிறார் சத்யராஜ். வெப் சீரிஸின் அஸ்திவாரமாக வடிவமைத்திருக்கிற ராவ் ரமேஷின் கதாபாத்திரம் கதையோடு சரியாக கிளிக் ஆகியிருக்கிறது. அந்தக் கதாபாத்திரத்தில் ராவ் ரமேஷ் திகிலூட்டுவது மட்டுமின்றி சிறிது நேரம் மிரட்டவும் செய்கிறார். நளினியும் பிந்து மாதவியும் சிறிது நேரமே தொடரில் ஜொலிக்கிறார்கள்.

திரைக்கதை வலிமையுடன் அமைந்திருப்பதால் முழு வெப் சீரிஸும் அயர்ச்சி ஏற்படுத்தாமல் பயணிக்கிறது. ஹாரர் வெப் சீரிஸ் என்று திகில் காட்டினாலும் ஒவ்வொரு எபிசோடின் இறுதியிலும் வரும் அந்த சுவாரஸ்ய ட்விஸ்ட் நன்றாகவே வொர்க் ஆகியிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் பி.ராஜசேகர் தூணாக இந்த வெப் சீரிஸை தாங்கிப் பிடித்திருக்கிறார். தனது ஒளிப்பதிவு மூலம் மேன்ஷனின் ஒவ்வொரு அறைகளுக்கும் பார்வையாளர்களை அழைத்துச் சென்று பயமுறுத்துகிறார். திகிலூட்டும் விதமாக அமைந்த ஃபிரேம்களும் முழு வெப் சீரிஸிலும் மிரட்டும் வகையில் அமைந்துள்ள லைட்டிங்கும் சிறப்பு! படத்தொகுப்பாளர் ஆதி நாராயண் பார்வையாளர்களைச் சோர்வடைய வைக்காத வண்ணத்தில் சரியான கட்களை அமைத்து திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்.

Mansion 24 Review

இப்படி பாசிட்டிவான தொழில்நுட்ப பணிகள் ஒருபுறமிருக்க மோசமான கிராபிக்ஸ் காட்சிகளால் பல இடங்களில் அதிருப்தி அடைய வைக்கிறார்கள். திகில் படங்களுக்குத் தேவைப்படும் வழக்கமான சில கிராபிக்ஸ் காட்சிகள்கூட சரியாக அமையப் பெறவில்லை.

திகிலூட்டுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் சில காட்சியமைப்புகள் செயற்கையாகவே வெளிப்படுகின்றன. அது நம்பகத் தன்மையையும் நீர்த்துப் போகச் செய்து விடுகின்றன. இதுமட்டுமின்றி ஆங்காங்கே தோன்றும் சில லாஜிக் மீறல்களும் தடுப்பணை இடுகிறது. பயமுறுத்துவதற்காக வரும் சில பேய்கள் ஒப்பனையைச் சரியாகப் போட்டுக் கொள்ளாமல் வந்துவிட்டதோ என்னவோ, அதுவும் ஒரு சாதாரண கதாபாத்திரமாகவே திகிலூட்டாமல் கடந்து செல்கிறது.

Mansion 24 Review

ட்விஸ்ட்டோடு திருப்திப்பட்டுக் கொள்ளாமல் கூடுதல் மர்மங்களையும் கடைசியில் இணைத்தது சிறப்பு! அதே சமயம், திரைக்கதை ஃபார்மேட்டாக புதிதாக இருந்தாலும், சில காட்சிகள் நம்மை நெளிய வைக்கும் ‘கிரிஞ்ச்’ மோடிலும், ‘கிளீஷே’ மோடிலும் சோதிக்கின்றன. அந்தச் சம்பிரதாய காட்சிகளை நீக்கி, இன்னும் கொஞ்சம் புதுமையைச் சேர்த்திருந்தால் சீரிஸ் கூடுதலாக மிரட்டியிருக்கும்.

மற்றபடி ஒரு வீக்கெண்ட் வாட்ச்சாக வேண்டுமானால் இந்த மேன்ஷனின் கதவுகளைத் தட்டலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.